நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு, நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, “காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்...” என்ற தலைப்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் 10.11.2011 வியாழக்கிழமையன்று இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு, நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, “காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்...” என்ற தலைப்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் 10.11.2011 வியாழக்கிழமையன்று இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டம், ஆண்களுக்கு தனி மேடை, பெண்களுக்கு தனி மேடை என இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வரவேற்புரையைத் தொடர்ந்து, மெகா செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர், “மெகா செய்தது - செய்வது - செய்யவிருப்பது” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, நகர்மன்றத்தின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய பல தகவல்களை உள்ளடக்கி, மெகாவின் உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் சிறப்புரையாற்றினார்.
பின்னர், அண்மையில் நடைபெற்று முடிந்த நகர்மன்றத் தேர்தலையொட்டி மெகா சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்பரிசுகளை, ஆண்களுக்கு ஆண்கள் பகுதி மேடையிலிருந்து மெகாவின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் “மண்ணின் மைந்தன்” சாளை நவாஸ் வழங்கினார்.
பெண்களுக்கு, இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் இயக்குனருமான ஆபிதா, பெண்கள் பகுதி மேடையிலிருந்தவாறு வழங்கியதோடு சிறப்புரையாற்றினார்.
அவரது உரை அசைபட உருப்பெருக்கி மூலம், ஆண்கள் பகுதியில் விரிதிரையில் காண்பிக்கப்பட்டது.
நிறைவாக, ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் நன்றி கூற, ஹாஜி காழீ நூஹ் துஆவுக்குப் பின், துஆ - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நெறிப்படுத்தினார்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, பெருநாளன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்களுக்கும், தெருக்களில் வீடு வீடாகவும் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டிருந்தது.
நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு உறைகளில் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத்தலைவர் உள்ளிட்ட 18 வார்டுகளின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் சிறப்பு அழைப்பு உறைகளில் வைத்து கொடுக்கப்பட்டிருந்தது.
அழைப்பை ஏற்று,
01ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான்,
04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா,
07ஆவது வார்டு உறுப்பினர் அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா,
10ஆவது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக்,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா
ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பார்வையாளர் பகுதியில் முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
அதுபோல, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். துவக்கம் முதல் இறுதி வரை முழு அமைதியுடன் அவர்கள் பேச்சுக்களை அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ‘மெகா‘ செய்யித் இப்றாஹீம், கும்பாரி ஸலீம் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
‘மெகா‘ செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம்.
கூட்டத்தில் ஆற்றப்பட்ட விழிப்புணர்வுரைகளின் எழுத்து மற்றும் அசைபட தொகுப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. (11.11..2011 - 23:05hrs) |