ஐக்கிய அரபு அமீரகத்தில் 06.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. ஹஜ் பெருநாள் விடுமுறையை மகிழ்வுற கழிக்கும் நோக்கோடு ஆண்டுதோறும் காயலர் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது வழமை. அந்த அடிப்படையில், நடப்பு பெருநாள் விடுமுறையைப் பயன்படுத்தி, அமீரகத்தின் அனைத்து பிராந்தியங்களைச் சார்ந்த காயலர்கள் ராஸ் அல் கெய்மா பிராந்தியத்திற்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
தமது பயண அனுபவங்கள் குறித்து, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளவை பின்வருமாறு:-
பெருநாள் கொண்டாட்டம்:
அமீரகத்தில் புனித ஹஜ்ஜுப்பெருநாள் 1432 இம்மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாய் கொண்டாடப்பட்டது தாங்கள் யாவரும் அறிந்ததே. அமீரகத்தில் வசிக்கும் அனைத்து காயலர்களும் அதே புதுப்பொலிவுடன் பெருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
சுற்றுலா ஏற்பாடு:
வழமை போல் இந்த வருடமும் ஈத் அல் அழ்ஹா பெருநாள் விடுமுறையில் அமீரகத்தில் வாழும் காயலரகள் தங்களின் குடும்பத்தார்களுடன் இன்ப சுற்றுலா ஏற்பாடு செய்து சந்தோஷமாக கழிக்க தீர்மானித்திருந்தனர். அதன்படி ஜனாப் ஹாஜி துணி உமர் மற்றும் ஜனாப் விளக்கு ஷேக் தாவூத் ஹாஜி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சுமார் 80 க்கும் அதிகமான ஆண் பெண்கள் மற்றும் சிறார்களுடன் ராஸ் அல் கெய்மா என்ற அழகிய அமீரகத்திற்கு திங்கள் கிழமை அன்று சென்று வர பேருந்து உட்ட எல்லா ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தது.
பயண துவக்கம்:
திங்கள்கிழமை காலை சுமார் 8 மணி முதலே காயலரகள் தத்தம் குடும்பத்தார்களுடன் இன்ப சுற்றுலாவிற்க்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் (அஸ்கான் அபார்ட்மென்ட் D bock அருகில்) ஆர்வமுடன் கூட ஆரம்பித்தனர். பின்னர் திட்டமிட்ட படி பேருந்து அமீரக காயல் நலமன்றதின் தலைவர் ஜனாப் புஹாரி காக்கா அவர்கள் இல்லத்தை சென்றடைந்தது.
காலை சிற்றுண்டி:
அங்கே அமீரகத்தின் பல பிராந்தியங்களிலிருந்தும் வந்திருந்த குடும்பத்தார் ஏற்கனவே குழுமியிருந்தனர். காலை சிற்றுண்டி இட்லி, வடை, தேநீருடன் பரிமாறப்பட்டு சுமார் 10 மணிக்கு அல்லாஹ் அருளால் சுமார் 80 பேர்களுடன் பேருந்து ராஸ் அல் கெய்மா நகரை நோக்கி துஆவுடன் புறப்பட்டது.
இதமான (பயமுறுத்திய) வானிலை:
இவ்வளவு நாட்கள் இல்லாத ஒரு ரம்யமான தட்பவெப்ப நிலை எல்லோர் மனதையும் குதூகலப்படுத்திய போதிலும் அவ்வப்போது பெய்து வந்த மழை சாரல்கள் சுற்றுலா ஏற்பாடு செய்தவர்களின் மனதை கலங்கடிக்காமலும் இல்லை. பேருந்தில் பயணித்தவர்கள் அனைவருக்கும் சிப்ஸ் மற்றும் கேக் பரிமாறப்பட்டது.
கொட்டும் மழையில் குடை பிடித்து சூட்டுக்கறி:
ராஸ்அல்கெய்மாவில் அமைந்திருந்த Al Saqr பூங்காவிற்கு சுற்றுலா வந்து சேர்ந்ததும் மிகவும் துரிதமாக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பார்பெக்யு (barbecue ) செய்யும் பணிகளின் ஈடுபட்டனர்.
அவ்வப்போது தூறிய சாரல்களாலும் கொஞ்சம் வேகமாக பெய்த மழை துளிகளாலும் பாதிப்படையாமல் இருக்க அடுப்பின் மேலே துப்பட்டிகளை தூக்கிப்பிடித்து மிகவும் அருமையான கோழி மற்றும் ஆட்டுக்கறி சுடப்பட்டது.
விளையாட்டு, மார்க்க, பொதுஅறிவுப் போட்டிகள்:
இதற்கிடையில் ஒரு சாரார் கிரிகெட் மற்றும் விளையாட்டுக்களிலும் சிறார்கள் பூங்காவில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டுக்களிலும், பெண்கள் தங்களுக்குள் மார்க்க மற்றும் பொது அறிவுப்போட்டிகளிலும் ஈடுபட்டு விழாக்குழுவினர் எந்தவித தடங்களும் இன்றி கறி சுடுவதற்கு ஏதுவாய் இருந்தது.
லுஹர் மற்றும் அஸர் தொழுகை சுருக்கி தொழவைக்கப்பட்டது.
அரேபிய பாரம்பரிய முறைப்படி மதிய உணவு பரிமாற்றம்:
மண மணக்கும் சுட்ட கோழி மற்றும் கறி, அரபியன் குபூஸ், ஹோம்மூஸ், முதப்பெல், பூண்டு பேஸ்ட், கெட்சப், எலுமிச்சை போன்றவற்றோடு மதிய உணவு சிறார்கள் பெண்கள் மன்றும் ஆண்களுக்கு முறையே பரிமாறப்பட்டது.
சாப்பாட்டிற்கு பின் பெரியவர்கள் உண்ட மயக்கத்தை தீர்த்திருக்கும் வேளையில் சிறார்களுக்குண்டான விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. ஓட்டப்பந்தயம், ball passing , reverse running மற்றும் சில கேளிக்கை விளையாட்டுக்கள் நடைபெற்றது. சிறார்களுக்குண்டான விளையாட்டுக்களை சாளை ஷேக் பாசில் மிகவம் திறனாக ஏற்பாடு செய்திருந்தார்.
காயலரகள் பயணம் செய்த இரயில் தடம்புரண்டது!!!
நமது பெண்களும் சிறார்களும் இந்த பூங்காவில் உலவிக்கொண்டிருந்த உல்லாச இரயிலில் மொத கும்பலாக பயணம் செய்திருந்தனர்.
பழு தாங்காமல் இரயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியது மிகவும் கேலிக்கூத்தாக இருந்தது. எல்லோரும் வயிறு குலுங்க சிரித்து சிரித்து மகிழ்ந்தனர். (உங்க விளையாட்டுக்கு ஒரு எல்லையே இல்லையா...?)
பரிசளிப்பு:
பூங்காவில் நிலவிய மிகவும் மிதமான தட்பவெட்ப நிலை இந்த சுற்றுலா பயணம் மிகவும் வெற்றியாக அமைய உதவியது. பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பயணம் நிறைவு:
மக்ரிப் தொழுகைக்கு பிறகு வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து பார்சல் கொடுக்கப்பட்டு, துஆ வுடன் சுற்றுலா இனிதே நிறைவு பெற்றது. பின்னர் இரவு 10 மணிக்கு பேருந்து துபாய்க்கு வந்து சேர்ந்தது.
இதில் பங்கேற்ற்ற அனைவரும் அல்லாஹ்விற்கும் இந்த சுற்றுலாவை ஒரு குறையும் இல்லாது ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி செலுத்தியவர்களாக நிறைந்த நெஞ்சங்களுடன் விடைபெற்றனர்.
இவ்வாறு அமீரக காயலர் சுற்றுலா ஏற்பாட்டுக் குழுவினரின் பயணக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
சாளை ஷேக் ஸலீம்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |