ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் 07.11.2011 அன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர், குழந்தைகள் என பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்ளூரிலிருந்தும், அண்டை ஊர்களிலிருந்தும் குடும்பத்துடன் சாரி சாரியாக வந்திருந்தனர். அவர்கள், தத்தம் உறவினர் மற்றும் நண்பர்களுடன் குழுக்குழுவாக அமர்ந்து கதைத்தனர்.
பெருநாளை முன்னிட்டு, கடற்கரையில் வணிகர்களின் கூட்டமும் நிறைந்து காணப்பட்டது. பச்சி, வடை, கறிகஞ்சி, நிலக்கடலை, சுண்டல், சுக்கு காஃபி, பனிக்கூழ் (ஐஸ் க்ரீம்), பையில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனையும், ஊஞ்சல் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்து காணப்பட்டது.
இரவு 06.15 மணியளவில் எதிர்பாராத விதமாக திடீரென பெரும்பெரும் துளிகளுடன் கனமழை கொட்டியது.
காயல்பட்டினத்தில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆன நிலையில், இம்மழையை யாரும் எதிர்பார்த்திருக்காத காரணத்தால், பெய்த மழைக்கு அஞ்சி பொதுமக்கள் வேக வேகமாக கலைந்து செல்லத் துவங்கினர்.
எனினும், “வந்தது வந்துவிட்டோம்... எப்படியும் இரவு 09.00 மணி வரையிலாவது கடற்கரையில் பொழுதுபோக்கிவிட்டுத்தான் செல்வோம்...” என்று கருதிய பொதுமக்கள், கொட்டும் மழையிலிருந்து தப்பிப்பதற்காக அருகிலிருந்த இரண்டு மண்டப வடிவிலான கூடாரங்களில் தஞ்சமடைந்தனர்.
அந்த மண்டபத்தின் கொள்ளளவையும் தாண்டி கூட்டம் உள்ளே நுழைய முற்பட்டதால், “இது என் இடம்...”, “நான்தான் மொதல்லயே வந்தேன்...” போன்ற இடம்பிடி வாக்குவாதங்கள், கொட்டும் மழையையும் தாண்டி ரசிக்க வைத்தது.
மொத்தத்தில், ஆண்டுதோறும் இரவு சுமார் 09.30 மணி முதல் 10.00 மணி வரை நீடிக்கும் கடற்கரை பொழுதுபோக்கு, இம்முறை இரவு 06.30 மணிக்கெல்லாம் நிறைவுற்றது பொதுமக்களில் பலருக்கு ஏமாற்றமளித்துள்ளது.
படங்கள்:
‘மெகா‘ செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |