ஹஜ் பெருநாளை முன்னிட்டு, குழந்தைகளின் குதூகலத்திற்கிடையில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் 170க்கும் மேற்பட்ட காயலர்கள் மகிழ்வுடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை பின்வருமாறு:-
பெருநாள் கொண்டாட்டம்:
இன்பம் பொங்கும் இனிய தியாகத் திருநாளாம் ஈதுல் அள்ஹா எனும் ஹஜ் பெருநாள் ஹாங்காங்கில் 06.11.2011 அன்று மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் அன்றிரவு 07.00 மணிக்கு சாதாரண ஒன்றுகூடல் நிகழ்ச்சி, TSIM SHA TSUI EAST KCR PARKஇல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 170 காயலர்கள் இந்த ஒன்றுகூடலில் தம் குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
தொழுகை:
இரவு 07.30 மணியளவில், மன்ற பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் வழிநடத்தலில், இஷா தொழுகை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றப்பட்டது.
கூட்ட நிகழ்வுகள்:
தொழுகை நிறைவுற்றதும், ஜனாப் அப்துல் கஃப்ஃபார் அவர்களின் மகன் இளவல் காதிர் சுலைமானின் இனிய கிராஅத்துடன் ஒன்றுகூடல் நிகழ்ச்சி துவங்கியது.
அதனைத்தொடர்ந்து மன்றப் பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், சிறுவர் - சிறுமியர் சிலர் தம் இனிய குரலில் திருமறை குர்ஆனை ஓதியும், அழகிய பாடல்களைப் பாடியும் அனைவரையும் மகிழ்வித்தனர்.
வாழ்த்துரை:
பின்னர், மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா வாழ்த்துரை வழங்கினார்.
குழந்தைகளுக்கு அன்பளிப்பு:
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஜனாப் எம்.செய்யித் அஹ்மத், ஜனாப் அப்துர்ரஸ்ஸாக், ஜனாப் யு.முஹம்மத் நூஹ் ஆகியோர் பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் பலூன்களை வழங்கி மகிழ்வித்தனர்.
நொறுக்குத் தீனி:
பின்னர், சூடான - சுவையான தின்பண்டங்கள் பெரியவர்களுக்கும், இனிப்பு வகைகள் மழலையருக்கும் சிற்றுண்டியாக பரிமாறப்பட்டது.
குழுப்படம்:
பின்னர், படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் ஆர்வத்துடன் குழுப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
நிறைவாக, ஹாஃபிழ் எம்.என்.முஹ்யித்தீன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, துஆ இறைஞ்ச, அத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மகிழ்ச்சிப் பரிமாற்றம்:
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டில் மகிழ்வுற்றிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் கைலாகு செய்து, கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை தமக்கிடையில் மகிழ்வுடன் பரிமாறிக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சி பெருநாளின் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்பதால், சிறப்பு நிகழ்ச்சிகள் என எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.ஏ.முஹம்மத் நூஹ்
(துணைத்தலைவர்)
படங்கள்:
M.செய்யித் அஹ்மத்
(துணைத்தலைவர்)
மற்றும்
ஹாஃபிழ் தாவூத் பின் ஷாஃபிஈ
செய்தி திருத்தப்பட்டது. (09.11.2011 - 16:52hrs) |