பஃபே முறை உணவுபசரிப்புடன், சிங்கை காயல் நல மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூரில் 06.11.2011 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூர் காயலர்களை ஒன்றுகூடச் செய்யும் நோக்கில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி 06.11.2011 அன்று மாலையில், மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில், அவரது தலைமையிலும், மன்றத்தின் மூத்த உறுப்பினர் எம்.அஹ்மத் ஃபுஆத், சிங்கை ஜாமிஆ சூலியா பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மன்ற உறுப்பினர்கள் மாலை 06.30 மணியிலிருந்து நிகழ்விடத்திற்கு வரத் துவங்கினர்.
நிகழ்வுகள்:
மஃரிப், இஷா தொழுகைகளை சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ வழிநடத்தினார். பின்னர் துவங்கிய ஒன்றுகூடல் நிகழ்ச்சியை ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
வாழ்த்துரை:
பின்னர் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ வாழ்த்துரை வழங்கினார்.
சிங்கை காயல் நல மன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையை பெரிதும் புகழ்ந்துரைத்த அவர், மன்ற உறுப்பினர்கள் ஒருவர் தேவையின்போது மற்றவர் விரைந்து வந்து உதவி செய்வது பெரிதும் பாராட்டத்தக்கதாக உள்ளது என்றார். இந்த ஒற்றுமை என்றென்றும் நீடிக்க வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டுமென அவர் பிரார்த்தித்தார்.
அண்டை நாடான மலேசியாவிலிருந்து, இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே வந்திருந்த ஷாஹுல் ஹமீத் அவர்களும், சிங்கை காயல் நல மன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் கூடிய நகர்நலப் பணிகளை பெரிதும் புகழ்ந்துரைத்தார்.
வந்தோருக்கு நன்றி:
இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தனதழைப்பை ஏற்று பல்வேறு இடங்களிலிருந்து வருகை தந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றி தெரிவித்தார்.
பஃபே முறையில் உணவுபசரிப்பு:
ஹாஃபிழ் அஹ்மத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றது. பின்னர், பஃபே முறையில் கடல் உணவு வகைகள், கரை உணவு வகைகள் என பல்வேறு உணவுப் பதார்த்தங்கள் பெருநாள் விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் அவற்றை ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக,
கொழும்பிலிருந்து ஹாஜி இஸ்மத் ஷாஜஹான்,
காயல்பட்டினத்திலிருந்து ஹாஜி எம்.ஏ.மெஹர் அலீ,
சிங்கப்பூர் பென்கூலன் பள்ளி இமாம்களான மவ்லவீ அப்துல் கய்யூம், மவ்லவீ ஜாஹிர் ஹுஸைன்,
சிங்கப்பூர் EduQuest International நிறுவனத்தைச் சார்ந்த ஜனாப் ரஃபீக் ஹமீத் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. (09.11.2011 - 11:30hrs)
கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (09.11.2011 - 12:15hrs) |