அதிமுக 40ஆவது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கி 39 ஆண்டுகள் நிறைவுற்று, 40ஆவது ஆண்டு துவங்குவதையொட்டி, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், 04.11.2011 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள்:
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தலைமை தாங்கினார். எல்.எஸ்.அன்வர், என்.எம்.அகமது, எஸ்.எம்.ஜின்னா, பி.கணேசன், எம்.எஸ்.எம்.ஷாபி, எஸ்.எம்.ஸலீம், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் தைக்கா சாமு, சி.பி.முத்தையா, கே.ஏ.எஸ்.அப்துல் காதர், கலீபா செய்யது முகமது, எம்.எல்.இல்யாஸ், என்.எஸ்.நெய்னா, எஸ்.புரட்சி சங்கர், எஸ்.ஏ.முகைதீன், எம்.எஸ்.சதக்கத்துல்லா, டெய்லர் முத்து, எஸ்.ஏ.ஷேக்னா, கப்பல் சேக் சுலைமான், ஜி.சேகர், பி.அந்தோணி, ஜி.ஆனந்த், என்.டி.இஸ்ஹாக், எஸ்.எச்.காதர், நகர்மன்ற உறுப்பினர் அந்தோணி, எம்.ஐ.புகாரி ஆகிய நகர கிளை நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் முன்னிலை வகித்தனர். அதிமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
ஒன்றிய செயலாளர் உரை:
அதிமுக ஒன்றிய செயலாளர் மு.இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் போட்டியிட்டு வென்ற நகர்மன்றத் தலைவர் ஆபிதாவின் நடவடிக்கைகளுக்கு எந்த முட்டுக்கட்டை ஏற்பட்டாலும், அதனை எதிர்த்து தம் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்தார்.
தலைமைக் கழக பேச்சாளர் உரை:
அடுத்து, அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் காந்திமதி நாதன் உரையாற்றினார்.
அதிமுக துவங்கப்பட்ட வரலாறு, அதற்கான காரணம், அதிமுக துவங்கியதன் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், எம்.ஜி.ஆர்.இன் அரசியல் நடவடிக்கை சரித்திரங்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
பாலப்பா உரை:
அதனைத் தொடர்ந்து, திமுக கட்சியில் பல ஆண்டுகள் பரப்புரையாளராக இருந்த பாலப்பா அப்துல் காதர், இக்கூட்ட மேடையில் அதிமுகவில் இணைந்தார்.
அவரை, தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் பாலப்பா உரையாற்றினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத்தலைவர் வெற்றியை திமுகவின் வெற்றியாகக் கருத அக்கட்சிக்கு எந்தத் தகுதியுமில்லை என்று தெரிவித்த அவர், இத்தேர்தலில் பல பேரங்கள் நடைபெற்றதாகக் கூறி, அதை நடத்தியதாக தொழிலதிபர் ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.
பி.ஆர்.மனோகரன் உரை:
பின்னர், அக்கட்சியின் இளைஞர் - இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளரும், அண்மையில் நடைபெற்ற திருச்செந்தூர் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.மனோகரன் உரையாற்றினார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ள போதிலும், காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவுக்கு சுமார் 7,500 வாக்குகள் பெற்றிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும், இது இந்த ஊரில் அதிமுகவின் வளர்ச்சியையே காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், தான் சட்டமன்ற உறுப்பினராக இல்லாதபோதிலும், ஓர் உறுப்பினர் செய்து தர வேண்டிய அனைத்துப் பணிகளையும் தன்னிடத்தில் உரிமையுடன் கோரலாமெனவும், அதை மேலிடத்தில் சொல்லிப் பெற்றுத் தர தான் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மேயர் உரை:
பின்னர், தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், அதிமுக இளைஞர் - இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான சசிகலா புஷ்பா உரையாற்றினார்.
திமுகவிலிருந்து விடைபெற்று, அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பாலப்பாவை வரவேற்றுப் பேசிய அவர், இந்த ஊர் நலனுக்காகவும், இந்த தொகுதி நலனுக்காகவும் அதிமுக என்றும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.
நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை நகர அதிமுக செயலாளர் எஸ்.எம்.செய்யது காசிம் செய்திருந்தார்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |