எல்.எஃப். வீதியில் கூரையால் வேயப்பட்டிருந்த பெண்கள் தைக்கா நேற்றிரவு தீக்கிரையானது.
காயல்பட்டினம் எல்.எஃப். வீதி வடபகுதி உட்புறத்திலுள்ள ஜெய்லானி நகரில் உள்ளது தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரை பெண்கள் தைக்கா.
ஆண்டுதோறும் ரமழான் காலங்களில் தராவீஹ் - சிறப்புத் தொழுகைகளும், வாரந்தோறும் மவ்லித் மஜ்லிஸ்களும் இந்த தைக்காவில் வழமையாக ஓதப்பட்டு வருகிறது.
நேற்றிரவு 09.15 மணிக்கு இந்த தைக்கா திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சுற்றுவட்டாரத்திலுள்ளவர்கள் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்புத் துறைக்கும், டி.சி.டபிள்யு. தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
சில நிமிடங்களில் அவ்விரு இடங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வந்து சேர்ந்தபோதிலும், அதற்கு முன்பாகவே பெண்கள் தைக்கா முழுமையாக தீக்கிரையானது. இதனால் அங்கிருந்த குர்ஆன் பிரதிகள், மவ்லித் நூல்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன.
இத்தீவிபத்து குறித்து கேள்வியுற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆபிதா, உடனடியாக அவ்விடம் விரைந்து வந்து பார்வையிட்டதோடு, விபத்து குறித்த விபரங்களைக் கேட்டறிந்தார்.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் மக்கள் திரள் கூடியதையடுத்து அவ்விடம் பரபரப்புடன் காணப்பட்டது.
இந்த தீ விபத்து, தைக்காவிற்கு அருகிலுள்ள மின் கம்பத்திலிருந்து தீப்பொறி விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அடையாளம் தெரியாத சிலர் யாரும் அறியாவண்ணம் தீ வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்றும் அவ்விடத்தில் கூடியிருந்தோர் தெரிவித்தனர்.
செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. (14.11.2011 - 19:01hrs) |