நவம்பர் 17ஆம் தேதியன்று வலிப்புநோய் விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் 17.11.2011 அன்று மாலை 05.00 மணிக்கு வலிப்புநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
‘மெகா!‘ உள்ளூர் நிர்வாகியும், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் யான்பு மண்டல பிரதிநிதியுமான ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் தலைமை தாங்கினார். துளிர் பள்ளியின் ஆசிரியை குழுமத்தினர் இறைவணக்கப் பாடல் பாடி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சித் தலைவர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் தலைமையுரையாற்றினார்.
வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துளிர் பள்ளியில் நடத்துவது மிகவும் பொருத்தமான செயல் என்று கூறிய அவர், மூளை வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வீட்டில் வைத்து பராமரிப்பதில் உள்ள சிரமங்களே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கையில், இதுபோன்ற பள்ளியை நடத்தி, அதில் அக்குழந்தைகளின் சுய தேவைகளை நிறைவேற்றுவது முதல் அவர்களுக்கு தொழிற்பயிற்சி வரை வழங்குவது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், இச்செயலை செய்து வரும் துளிர் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், உதவும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இறைவன் எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பின்னர், துளிர் அலுவலகப் பொறுப்பாளர் சித்தி ரம்ஜான் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
ஒவ்வோர் ஆண்டும் இந்திய வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் நவம்பர் 17ஆம் நாள் கடைபிடிக்கப்படுகின்றது. 2001ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி 5.5.லட்சம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒவ்வொரு வருடமும் 50,000 பேருக்கு மேல் அதிகரித்துக் கொண்டேயுள்ளது.
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 74 சதவிகிதம் பேர் கிராமப்புறத்து மக்களே... அவ்வாறு பாதிப்பிற்குள்ளாகும் கிராமப்புற மக்களில் 75 சதவிகிதம் பேர் தகுந்த சிகிச்சை கிடைக்காமலோ அல்லது எடுக்காமலோ அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வலிப்பு நோய் என்று சொன்னாலே மூளை மழுங்கி பைத்தியம் பிடித்துவிடும் என்று மக்களிடையே கருத்து நிலவுவது மிகவும் வருந்தத்தக்கது. இது அவர்களின் அறியாமை, கல்லாமை, வறுமை, அச்சம், மூடநம்பிக்கை என்பதனையே பறைசாற்றுகின்றது.
கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம், வலிப்புநோய் சர்க்கரை நோயினால் அதிக அளவு பாதிக்கப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு வலிப்புநோய் ஏற்படும்.
மது உள்ளிட்ட போதை பழக்கங்களினால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செல்கள் அழிவதனாலோ அல்லது விபத்துக்களினாலோ மூளைச் சிதைவு ஏற்பட்டு வலிப்புநோய் உருவாகலாம். முறையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை இருந்தால் தங்கத்தினை விட உயர்ந்த நம் மூளையினை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
இவ்வாறு அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் கனி, வலிப்பு நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்த தகவல்களை உள்ளடக்கி விழிப்புணர்வுரையாற்றினார்.
வலிப்பு என்பது ஒரு நோய் அல்ல. தலைவலி, வலிப்பு என்பன மூளையில் ஏற்படும் குறைபாடோ, சிதைவோ இவற்றின் அறிகுறியின் வெளிப்பாடே... செயல்பாட்டு கோளாறு. மின்னலை ஒழுங்குமுறையில் குறை, வயிறு எரிச்சல், கை - கால் இறுக்கம், வாந்தி, திடீர் மயக்கம், மூளையில் ஏற்படும் கட்டி, இரவில் வியர்வையுடன் கூடிய சத்தம் வெளிப்படல், மூச்சிரைப்பு உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும்.
மூளைக்கு செல்லும் இரசாயனபொருளில் குறைபாடு ஏற்பட்டாலும் இந்நோய் ஏற்படும். இந்நோய் கண்டவருக்கு நல்ல தைரியமும், சமாதானமும் அளிப்பதுதான் முதல் மருந்து. சரியான மருந்தெடுப்பின் மூலமாகவும், தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவும் இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
இந்நோய் கண்டவர்கள்
சரியான உணவை, சரியான நேரத்தில் உண்ணல்...
நன்றாக தூங்குதல்...
டி.வி., கம்ப்யூட்டர் உள்ளிட்ட மிகுந்த ஒளிக்கதிர் நிறைந்த கருவிகளைப் பார்ப்பதையும், அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் முன் இருப்பதையும் தவிர்த்தல்...
இவற்றை சரிவர செய்தால் இந்நோயிலிருந்து விடுபடலாம்.
பெண்கள் கர்ப்ப காலத்தில் நல்ல மருத்துவ ஆலோசனையைப் பெற்று செயல்பட்டால், பிறக்கும்போதே குழந்தைகள் இந்நோயிலிருந்து போதிய பாதுகாப்பைப் பெற்றிட இயலும்.
மருத்தவமனைக்கு வரும் நோயாளிகளது தாக்கமும் பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் என நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களைத் தாக்க வாய்ப்புள்ளது.
போதையுடன் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து...
விபத்துகளின்போது தலையில் அடிபடுதல்...
ஆகியவற்றாலும் வலிப்பு நோய் வரலாம்.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது தேவையான தடுப்பூசிகளை முறையான காலத்தில் போட வேண்டும்...
50 வயதைத் தாண்டியவர்கள் ஆண்டுக்கொருமுறை சர்க்கரை நோய், இரத்தத்தில் கொழுப்பின் அளவு, சிறுநீரக செயல்பாடு உள்ளிட்டவற்றை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்...
இந்த வழிமுறைகள் மூலம் வலிப்புநோய் வராமல் தடுக்கவும், வந்தால் கட்டுப்படுத்தவும் இயலும்.
இவ்வாறு, தூத்துக்குடி மருத்துவ கல்லூரியின் நரம்பியல் துறை பேராசிரியர் டாக்டர் கனி உரையாற்றினார். பின்னர், வலிப்பு நோய் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு நீண்ட நேரம் விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் நிறைவுரையாற்றினார்.
வருட நாட்களில் பல நாட்களை, பொதுமக்கள் நலன் கருதி உடல் நலம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் அரசு அனுஷ்டித்து வருவதாகவும், அந்நாட்களில் சிற்சில இடங்களில் சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வெறும் சடங்காகிப்போன இக்காலத்தில், பயனுள்ள இந்நிகழ்ச்சியை இந்த துளிர் பள்ளி வளாகத்தில் நடத்தியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், வருங்காலங்களில், இதன் பயன் கூடுதல் பொதுமக்களைச் சென்றடையும் வகையில், ஏதேனும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பி நடத்த வேண்டும் என்றும். அந்நிகழ்ச்சியில் தொலைபேசி வழியே பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தால், இந்நிகழ்ச்சிகள் முழுப்பயனளிக்கும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், நிகழ்ச்சித் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினருக்கு, துளிர் ஆசிரியர் குழுமத்தின் வழிகாட்டலில் அப்பள்ளி மாணவ-மாணவியர் செய்திருந்த பொருட்களடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
துளிர் பள்ளியின் பெற்றோர் மன்ற தலைவியும், துளிர் அறங்காவலர் குழு உறுப்பினருமான ஆயிஷா ஸாஹிப் தம்பி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், துளிர் பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, துளிர் நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் அப்துல் காதர், செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோரது ஆலோசனையின் பேரில், கதீஜா, விமலிட்டா, மாரியம்மாள் உள்ளிட்ட துளிர் குழுவினர் செய்திருந்தனர். |