தூத்துக்குடி மாவட்டத்தில் மறு சுழற்சி செய்ய முடியாத ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடைசெய்வது குறித்து வணிகர்கள் மற்றும் இதர சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்;சித்தலைவர் ஆஷிஷ் குமார் கலந்தாலோச செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மறு சுழற்சி செய்ய முடியாத ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக 18.11.2011 அன்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வணிகர்கள் சங்கத்தினர், திருமண மண்டப உரிமையாளர்கள், தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பல்வேறு தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், அரிமா சங்கத்தினர் அடங்கிய குழுவினருடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரிடமும் ப்ளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்வது தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-
மறு சுழற்சி செய்யமுடியாத ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் கப்புகள் போன்ற ப்ளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச் சுழல் பாதுகாப்பிற்கு மிகவும் சவாலாக உள்ளது.
இப்பொருட்களால் கால்வாய்கள், சாக்கடைகள் அடைத்து பாசனத்திற்கும், சுகாதாரத்திற்கும் தீங்காக உள்ளது. ஆடு, மாடுகள் இப்பொருட்களை உண்பதால் இறக்க நேரிடுகிறது.
இப்பொருட்களை எரித்தால் வரும் நச்சுப் புகையிலிருந்து மனிதர்களுக்கு நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு புற்று நோய் வரும் அபாயமும், மலட்டுத் தன்மையும் ஏற்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய வணிகப் பெருமக்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பாக பள்ளிகள், கல்லூரிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தடைசெய்ய ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேசினார்.
இக்கூட்டத்தில் உதவி இயக்குநா; (பஞ்சாயத்து) திரு.கதிரேசன், மாசுகட்டுபாட்டு வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். |