காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், எலும்பு நோய் மற்றும் பொது மருத்துவ இலவச ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. ஓமன் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் டாக்டர் நூருத்தீன், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்.
இதுகுறித்து, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் 16.11.2011 புதன்கிழமை மாலை 05.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை, எலும்பு நோய் மற்றும் பொது மருத்துவ இலவச முகாம், சகோதரர் கானாப்பா செய்யித் அஹ்மத் அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னதாக, இம்முகாம் குறித்து அனைத்து காயலர்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் சுமார் 30 பேர் இம்மருத்துவ பரிசோதனை இலவச முகாமில் பங்கேற்றனர்.
தனது சொந்தப் பணி நிமிர்த்தமாக ஹாங்காங் வந்துள்ள - காயல்பட்டினத்தைச் சார்ந்தவரும், ஓமனில் எலும்பு நோய் மற்றும் பொது மருத்துவ சேவை செய்து வருபவரும், ஓமன் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவருமான டாக்டர் ஹாஜி எஸ்.ஏ.கே.நூருத்தீன் எம்.பி.பி.எஸ். இம்முகாமில் கலந்துகொண்டு, நமதூர் மக்கள் நலனுக்காக தனது மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கி, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார்.
முகாமின் நிறைவில், மருத்துவர் அவர்களுக்கு எம் பேரவையின் தலைவர் சகோதரர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ், பேரவை சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினார்.
இந்நிகழ்வில், பல அன்பர்கள் தன்னார்வப் பணியாளர்களாகக் கலந்துகொண்டு முகாமை சிறப்புற நடத்தித் தந்ததை இங்கு நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
இவ்வாறு காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
V.M.T.முஹம்மத் ஹஸன்,
பொருளாளர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங். |