கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில், ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் 5அவது பொதுக்குழுக் கூட்டம், 20.11.2011 அன்று ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக, பெங்களூரு நகரிலுள்ள லால்பாக் பூங்காவில் நடைபெற்றது.
மன்ற உறுப்பினர் ஜனாப் ஜாஹிர் ஹுஸைன் (IBM) கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஜனாப் பி.எம்.டி.அபூபக்கர், ஹாஜி அன்ஸாரீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஜாஹித் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் துணைச் செயலாளர் ஜனாப் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், சென்ற கூட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்தி உரையாற்றினார்.
பின்னர், மன்றத்தில் புதிதாக இணைந்துகொண்ட 7 உறுப்பினர்கள் சுயஅறிமுகம் செய்துகொண்டனர். இன்னும் 3 புதிய உறுப்பினர்கள் தமது அலுவல் காரணமாக இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமையை தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தனர்.
பின்னர் நடைபெற்ற உறுப்பினர் கலந்தாய்வில், மன்றத்தின் இதுவரை செய்யப்பட்ட செயல்பாடுகள், இனி செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் ஆர்வத்துடன் தமது நகர்நலக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத அனைத்து நண்பர்களிடமும் மன்றத்தின் நகர்நலப் பணிகளின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி, வருங்காலங்களில் நடத்தப்படும் மன்றக் கூட்டங்களில் அவர்களையும் தவறாமல் பங்கேற்கச் செய்வதாக, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் உறுதி எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினத்தில் சிறப்புற செயல்பட்டு வரும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி குறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்குமாறு, சென்னையிலுள்ள இ.டி.ஏ. பொறியியல் பிரிவில் பணியாற்றி, பணி மாற்றலாகி பெங்களூரு வந்துள்ள ஜனாப் முஹம்மத் சுலைமான் கேட்டுக்கொண்டதையடுத்து அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
துளிரின் சேவைகள், அதன் செயல்திட்டங்கள் குறித்து 10 நிமிட நேரத்தில் விளக்கிப் பேசிய அவர், சென்னையில் தான் பணியாற்றுகையில் இப்பள்ளிக்காக இயன்ற உதவிகளை சேகரித்து அனுப்பியதாகவும், அதேபோன்று பெங்களூரிலிருந்தவாறும் செய்ய ஆவலுறுவதாகவும், உறுப்பினர்கள் அனைவரும், நன்கொடை மற்றும் சந்தாக்கள் வழங்கி ஒத்துழைப்பளிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ள, உறுப்பினர்கள் அதனை ஏற்று உதவிகள் வழங்குவதாகத் தெரிவித்தனர்.
நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டு செயல்திட்டம்:
மன்றத்தின் முக்கிய செயல்திட்டமான கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டு செயல்திட்டம் இறையருளால் இயன்றளவு சிறப்புற செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தம்மாம், அமீரகம், சிங்கப்பூர், சென்னை KCGC உள்ளிட்ட காயல் நல மன்றங்கள் நகர மாணவர்களுக்கான கல்வி - வேலைவாய்ப்பு வழிகாட்டலுக்காக தனிப்பட்ட முறையிலும், இக்ராஃ மூலமும் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன.
தனித்து செயல்படுவதை விட, இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது முழுப்பயனளிக்கும் என்று உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் மேற்படி நான்கு அமைப்புகளையும் முறைப்படி தொடர்புகொண்டு, இணைந்து செயல்பட்டு, இயன்ற உதவிகளை எந்நேரத்திலும் செய்ய மன்றத்தை ஆயத்தமாக வைத்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - ஹஜ் முடித்து வரும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து:
மன்ற உறுப்பினர் ஹாஜி எல்.எம்.ஐ.அப்துல் காதிர் மற்றும் குடும்பத்தார், மன்ற துணைச் செயலாளர் ஜனாப் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் சகோதரரான ஹாஜி கே.கே.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ மற்றும் குடும்பத்தார் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டு திரும்புகின்றனர்.
அவர்களது மற்றும் அனைவரது ஹஜ்ஜையும் வல்ல அல்லாஹ் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக்கி, அன்று பிறந்த பாலகர்களாக திரும்பச் செய்வானாக என இக்கூட்டம் பிரார்த்தித்து வாழ்த்துகிறது.
தீர்மானம் 3 - இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மன்றக் கூட்டம்:
இனி வருங்காலங்களில், மன்றத்தின் ஆலோசனைக் கூட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டுவதென தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மன்றத்தின் அடுத்த கூட்டத்தை வரும் ஜனவரி மாதத்தில் பொதுக்குழுவாகக் கூட்டுவதெனவும், தேதியை பின்னர் முடிவு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக, நன்றியுரைக்குப் பின் துஆ, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் பலர் தம் மனைவி, மக்களுடன் கலந்துகொண்டனர். கூட்ட நிகழ்ச்சிகள் நிறைவுற்றதும் அவர்கள் தமக்குள் கலந்துரையாடி மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே மறுபுறத்தில் பெண்கள் தனியாக அமர்ந்து கதைத்தனர். குழந்தைகள் துள்ளி விளையாடி மகிழ்ந்தனர்.
இவ்வாறு பெங்களூரு காயல் நல மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம். |