காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர - சாதாரண கூட்டம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று காலை 11.30 மணிக்கு நகர்மன்ற கூட்ட அரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காயல்பட்டினம் நகரின் 18 வார்டுகளைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு, தத்தம் வார்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய நலத்திட்டப் பணிகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அக்கோரிக்கைகளில் சில உடனடியாகவும், மற்றவை பரிசீலனைக்குப் பின்பும் நிறைவேற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நகர்நலக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள நடைமுறை சாத்தியங்கள் குறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, பணி மேற்பார்வையாளர் செல்வமணி ஆகியோர் கூட்டத்தில் விளக்கமளித்தனர்.
கூட்டத் துளிகள்:
*** 01ஆவது வார்டு உறுப்பினர் லுக்மான், தனது கோரிக்கை மனுவில் “கடையக்குடி என்ற கொம்புத்துறை” என்றே குறிப்பிட்டிருந்ததாகவும், ஆனால் வெறுமனே “கொம்புத்துறை” என்று மட்டுமே கூட்டப் பொருள் மடலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இனி வருங்காலங்களில் இத்தவறுகள் முற்றிலும் திருத்தப்பட்டு, ஆவணப் பெயர் அடிப்படையில் “கடையக்குடி” என்றே குறிப்பிடுமாறும், “கொம்புத்துறை” என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் எனவும், அதுபோல, “கற்புடையார் பள்ளி வட்டம்” என்றே குறிப்பிடுமாறும, அதனை “சிங்கித்துறை” என்று குறிப்பிட வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
*** 02ஆவது வார்டு உறுப்பினர் முஹம்மத் செய்யித் ஃபாத்திமா தன் பகுதி கோரிக்கைகள் குறித்து குறிப்பிடுகையில், ஏற்கனவே கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டப் பணிகளுக்காக நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
அதனைக் கேட்ட நகர்மன்றத் தலைவர், நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளுக்காக முதன்முதலாக நன்றி தெரிவித்தமைக்காக அவரைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
*** 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, தனது வார்டிலுள்ள தனியார் நிலத்தில் உள்ள குப்பை மேடு காரணமாக பல்வேறு சுகாதாரக் கேடுகள் நிறைந்து, சுற்றுவட்டாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும், அதனை நகராட்சி அப்புறப்படுத்தித் தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய 03ஆவது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள், அது இரு தரப்பினரிடையே உள்ள பிணக்கு காரணமாக வழக்கு நிலுவையில் உள்ள பிரச்சினைக்குரிய இடம் என்றும், அங்கு நகராட்சி எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் முறையிட்டார்.
அதனை மறுதலித்துப் பேசிய கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, பிணக்கில் உள்ள அவ்விரு தரப்பினரிடமும் தான் பேசியுள்ளதாகவும், சுற்றுவட்டாரத்தில் சுகாதாரக் கேடு ஏற்பட்டால் அனைவருக்குமே பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில், அவ்விடத்திலுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் இரு தரப்பினரும் தெரிவித்த பின்னரே தான் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும், இந்த விபரங்களை மறைத்துவிட்டு, பணிகளை மேற்கொள்ளக்கூடாது என யாரும் வெறுமனே மறுத்துப் பேச வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், உறுப்பினர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நகராட்சி சார்பில் அவ்விடத்திலுள்ள குப்பைகளை அகற்றி, இனி குப்பைகள் போடப்படாதிருக்க எச்சரிக்கைப் பலகை நிறுவப்படும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தெரிவித்தார்.
*** நகர்மன்றத் தலைவரின் நகருக்குப் பொதுவான 16 கோரிக்கைகளில், காயல்பட்டினம் அஞ்சல் நிலையம் அருகிலுள்ள - சேதமடைந்து, பயன்பாடற்று ஆபத்தான நிலையிலும், பல்வேறு சமூக விரோத செயல்களுக்குக் களமாகவும் உள்ள பெண் பயணியர் தரிப்பிட கட்டிடத்தை இடித்துக்கட்ட முன்வைக்கப்பட்ட கோரிக்கை தவிர மற்ற கோரிக்கைகளை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.
அந்த பயணியர் தரிப்பிட கட்டிடம் குறித்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் ஜஹாங்கீர், அந்த நிழற்குடைக்கு கீழ்ப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் அஞ்சலக கட்டிடம் அமைந்துள்ள மட்டத்தின்படியே உள்ளதாகவும், நிழற்குடைக்கு மேற்பகுதியிலுள்ள கட்டிடங்கள் நிழற்குடை அமைந்துள்ள மட்ட அளவுக்கு ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக அறிவதாகவும், தேவையற்ற ஆக்கிரமிப்பிற்கு நகராட்சியே காரணமாகி விடக்கூடாது என்ற அடிப்படையில், அவ்விடத்திலுள்ள நிழற்குடையை அகற்றலாமே தவிர இடித்துக் கட்டுவது அவசியமற்றது என்று தெரிவித்தார்.
அதனை மறுத்துப் பேசிய பல உறுப்பினர்கள், நிழற்குடைக்கு மேற்பகுதியிலுள்ள கட்டிடங்களும் பெரும்பாலும் சரியான அளவிலேயே கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதுபோல, 04ஆவது வார்டு உறுப்பினர் முன்வைத்த குப்பை மேடு பிரச்சினை தனது வார்டையும் உள்ளடக்கியது என்றும், இப்பிரச்சினையை தனியார் நிலம் என்றோ, வழக்கு நிலுவையில் உள்ளது என்றோ பாராமல், அதனால் ஏற்படும் தீங்குகளால் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைவருக்கும் உயிரளவிலும் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் அக்குப்பை மேட்டை அகற்ற வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் கடமை என உறுப்பினர் ஜஹாங்கீர் வலியுறுத்திப் பேசினார். இரண்டு உறுப்பினர்கள் இக்கோரிக்கையை இணைந்து வைத்ததும், அதன் விளைவை அறிந்துகொண்ட பல உறுப்பினர்கள் அவர்களின் கோரிக்கையை வழிமொழிந்தனர். அதன்பிறகே, நகராட்சியின் சார்பில் அக்குப்பை அகற்றப்பட்டு எச்சரிக்கை பலகை நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டது.
*** 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், குடிநீர் வினியோகத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில் சித்தன் தெரு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றை அமைத்துத் தருமாறும், நகராட்சி மூலம் அமைக்க இயலாத நிலையில், தனக்கு வேண்டப்பட்ட தனியார் மூலம் அமைத்துத் தருவதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
*** 07ஆவது வார்டு உறுப்பினர் அந்தோணி, அண்ணா நகரிலிருந்து (கற்புடையார் பள்ளி வட்டம் என்ற) சிங்கித்துறை வடபகுதி வரை உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகளை புதிதாக அமைத்துத் தருமாறு கோரினார்.
அதனை மறுத்துப் பேசிய பல உறுப்பினர்கள், அண்ணா நகர் என்று சொல்லப்படும் அப்பகுதியில் குடியிருந்த மக்களுக்கு சுனாமி நகரில் புதிதாக குடியிருப்புகள் அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும, ஆனால் அம்மக்கள் தாம் ஏற்கனவே இருந்த இடத்தை இன்னும் காலி செய்யாமல் இருப்பதாகவும், எனவே அவ்விடத்தில் புதிதாக விளக்குகள் எதுவும் அமைக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
அதனை மறுத்துப் பேசிய உறுப்பினர் அந்தோணி, அவ்விடத்தில் அனைத்து சமுதாய மக்களுமே ஆக்கிரமித்து அமர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்து குடியிருப்போர் விஷயத்தில் எந்த சமுதாயம் என்று பார்க்கத் தேவையில்லை என்றும், சட்டம் அனைவருக்கும் பொதுவானதே என்றும் அப்போது உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
*** 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், தனது வார்டில் உள்ள குறைகளை நகர்மன்றக் கூட்டத்தில் ஆதாரத்துடன் குறிப்பிட்டுப் பேசும் வகையில், தான் சுட்டிக்காட்டும் குறைகளுக்கான வண்ணப் பட ஆதாரங்களை தலைவர் பார்வைக்கு முன்வைத்தார். அதனை அனைத்து உறுப்பினர்களும் பாராட்டினர்.
*** 09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அதன் மூலம் பொதுமக்களுக்கு பயன்கள் கிடைக்கச் செய்யும் வகையிலும் நகர்மன்ற செயல்பாடுகள் அமைய வேண்டும் என்ற தனது கோரிக்கை குறித்து உரையாற்றுகையில், அதனை மறுத்துப் பேசிய நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மக்கள் நலப் பணிகளை செய்ய முடியாத அளவுக்கு தேவையற்ற கேள்விகள் கேட்கப்படுவது வழமையாக உள்ளதாகவும், இச்சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிக்க என்றே ஒருவரை பணியமர்த்த வேண்டிய நிலை உள்ளதாகவும், எனவே இது விஷயமாக இக்கூட்டத்தில் ஒன்றும பேச வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.
*** கூட்ட நிரல் பொருள் எண் 16இல், “05ஆவது வார்டு உறுப்பினர் திரு. ஜலால்” என்று உள்ளது “திரு. ஜஹாங்கீர்” என்று திருத்தப்பட்டது.
*** 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், “சிங்கித்துறை”, “கொம்புத்துறை” என்ற சொற்பயன்பாடுகளுக்கு தனது வலுவான ஆட்சேபனையைத் தெரிவித்தார்.
*** 15ஆவது வார்டு உறுப்பினர் ஜமால், தனது கோரிக்கைகள் குறித்து பேசும்போது, தூய தமிழில் உரையாற்றினார். கூட்டம் துவங்கி வெகுநேரம் ஆகிவிட்டதால், நீண்ட நேரம் அவர் முன்னுரை வழங்குகையில், கோரிக்கை குறித்து விரைவாகப் பேசுமாறு உறுப்பினர்கள் அவரைக் கேட்டுக்கொண்டதையடுத்து, தனது உரையை அவர் சுருக்கிக்கொண்டார்.
*** 16ஆவது வார்டு உறுப்பினர் சாமு ஷிஹாபுத்தீன் என்ற தைக்கா சாமு, அஞ்சலகம் அருகிலுள்ள பெண்களுக்கான பயணியர் தரிப்பிடம் ஏற்கனவே அரிமா சங்கத்தால் கட்டிக்கொடுக்கப்பட்டதுதான் என்றும், ஒருவேளை அதை இடித்துக்கட்ட தீர்மானித்தால், தான் சார்ந்துள்ள அரிமா சங்கத்தின் மூலமே மீண்டும் அதைக் கட்டித்தர ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.
*** உறுப்பினர்களின் கோரிக்கைகள் பெரும்பாலும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவது, இரண்டாவது பைப் லைன் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவது, புதிய சாலைகள் அமைப்பது, பழைய சாலைகளை சரிசெய்வது குறித்தே அமைந்திருந்தன.
*** காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 20 பேர் கூட்ட நிகழ்வுகளை வெளியரங்கிலிருந்து சாளரம் (ஜன்னல்) வழியாக பார்வையிட்டனர்.
*** மதியம் 02.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் கலைந்து சென்றனர். பின்னர், சிறிது நேரத்தில் குடிசை மாற்று வாரியத்திலிருந்து அதிகாரிகள் வந்துள்ளதாகவும், அவர்களிடம் மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேச வேண்டும் என்றும் ஆணையர் (பொறுப்பு) கண்ணையா கேட்டுக்கொண்டதற்கிணங்க கலைந்து சென்ற நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலர் மீண்டும் கூட்ட அரங்கில் வந்தமர்ந்தனர்.
அவர்களிடம் பேசிய குடிசை மாற்று வாரியத்தினர், காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அரசால் கட்டப்பட்டு வரும் சுனாமி குடியிருப்பு குறித்த நிலுவையில் உள்ள வழக்கு குறித்து நகராட்சியின் நிலை என்ன என்று கேட்டனர்.
அதற்கு விடையளித்த நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அது பழைய தலைவர் தொடுத்துள்ள வழக்கு என்றும், அது குறித்த எந்த விபரமும் இதுவரை தன்னால் பெறப்படவில்லை என்றும், விபரங்கள் எதுவுமில்லாத நிலையில் எந்தக் கருத்தும் இதுகுறித்து தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். உறுப்பினர்கள் பலரும் அதனை அங்கீகரித்துப் பேசிதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் விடைபெற்றுச் சென்றனர்.
*** மதியம் 03.00 மணியளவில் கூட்டம் முற்றிலுமாக நிறைவுற்றது.
*** கூட்டம் நடந்துகொண்டிருக்கையிலேயே பல உறுப்பினர்கள், லுஹர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக இடையிடையே வெளிச்சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்களில் உதவி:
மாஷாஅல்லாஹ் டிஜிட்டல்,
பிரதான வீதி, காயல்பட்டினம்.
செய்தியில் சில வாசகங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. (27.11.2011 - 16:55hrs) |