மதியம் அசைவ உணவில் துவங்கி, இரவு சைவ உணவுடன் நிறைவுற்றுள்ளது அமீரக காயல் நல மன்ற பொதுக்குழு மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அமீரக காயல் நல மன்றத்தின் 2011Mம் வருடத்தின் பொதுக்குழு கூட்டம் துபை சத்வாவில் அமைந்துள்ள அல்-ஸஃபா பூங்காவில் இம்மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதமான வானிலையில் இன்பமான ஒன்றுகூடல்:
வெள்ளிக்கிழமையன்று காலை முதல் மிகவும் இதமான வானிலை நிலவியதால், முற்கூட்டியே காயலர்கள் தம் குடும்பத்தார் மற்றும் நண்பர் வட்டங்களுடன் திரளாக கூட்ட நிகழ்விடத்தில் சங்கமிக்கத் துவங்கினர்.
மனமார்ந்த வரவேற்பு:
கூட்டத்தில் கலந்துகொள்ள வருவோரை வரவேற்று உபசரிப்பதற்காக வரவேற்புக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
பூங்கா வாயிலருகில் வந்த காயலர்களை வரவேற்புக்குழுவினர், புதுமணமகனை மணமேடை வரை அழைத்து வருவது போல கூட்ட நிகழ்விடம் வரை அழைத்து வந்து, தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கி உபசரித்து மகிழ்வித்தனர்.
தந்திரப் பதிவு:
ஆண்டுதோறும் இதுபோன்ற ஒன்றுகூடலில் உறுப்பினர் விபரங்களை சேகரிக்க முனைந்தபோதெல்லாம் அவை அரைகுறையாகவே முடிந்துள்ளது. அக்குறையைப் போக்கி, மன்ற உறுப்பினர்கள் அனைவரின் முகவரிகளுடன் கூடிய முழு விபரங்களைப் பெற்றிடுவதற்காக, அனைவருக்கும் படிவம் வழங்கப்பட்டது. அப்படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடுமாறும், குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பையடுத்து அனைத்து காயலர்களும் ஆர்வத்துடன் படிவங்களைப் பூர்த்தி செய்து, அதற்கான பெட்டியில் போட்டனர்.
மகிழ்ச்சிப் பரிமாற்றம்:
அமீரகத்தின் பல பிராந்தியங்களிலிருந்தும், இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்வதற்காக காலையிலேயே வந்திருந்த காயலர்கள் ஆண்கள் - பெண்கள் என தனித்தனியே ஒன்றுகூடி, தமக்கிடையில் சுகம் விசாரித்து, முகமன் கூறி, மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொண்டனர். ஜும்ஆ நேரம் வரை இம்மகிழ்ச்சிப் பரிமாற்றம் நீடித்தது.
கூட்ட நிகழ்வுகள்:
பூங்கா அருகிலுள்ள பள்ளியில் ஜும்ஆ தொழுகையை அனைவரும் நிறைவேற்றினர். அதன்பின்னர், அமீரக காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது.
மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். ஜனாப் முஹம்மத் முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, ஹாஜி எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் மன்றத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். மன்றத்தின் பல்வேறு சாதனைகளை உள்ளடக்கிய ஆண்டறிக்கை வாசித்து முடிக்கப்பட்ட பின்னர், மன்றத்திற்கு சந்தா என்ற பெயரில் நாம் செய்யும் சிறிய பங்களிப்பும் கலந்து இவ்வளவு நல்ல காரியங்கள் நடந்துள்ளதே என உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். பின்னர் புதிய உறுப்பினர்கள் கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
“என்னை விட்டுறுங்க!” -தலைவர்:
பின்னர் மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ தலைமையுரையாற்றினார்.
மன்றத்தின் செயல்பாடுகள் வெற்றியடைவதற்கு எல்லா உறுப்பினர்களும் உளமார ஒற்றுமையுடனும், மன உறுதியுடனும் உழைக்கவேண்டும்...
புதிய முகங்கள் இளைய தலைமுறைகள் மன்றத்தின் செயற்குழுவில் இணைந்து செயலாற்ற வேண்டும்...
மன்றத்திற்கு புதிய தலைமை வேண்டும்... நல்ல ஒரு தலைவரை நீங்கள் அடையாளம் காட்டும் பட்சத்தில் நான் அவர்களுக்கு வழிவிட ஆயத்தமாக உள்ளேன்... நான் பொறுப்பில் இல்லாவிட்டாலும் மன்றத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு என்றென்றும் என்னை அர்ப்பணித்துக்கொள்வேன்...
மன்றத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் கருத்து சொல்ல விரும்புவர்கள் நேரடியாக எனக்கோ அல்லது மன்றத்தின் நிர்வாகக் குழுவிற்கோ எழுத்து மூலமோ அல்லது நேரடியாகவோ தயக்கமின்றி தாராளமாய் சொல்லலாம்... இந்த மன்றத்தில் எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது...
உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் சந்தா தொகையை தவறாமல் செலுத்தி மன்றத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கவேண்டும்...
இம்மன்றம் ஊர் நலனிற்காக நல்ல பல திட்டங்கள் வைத்திருக்கிறது... நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நம் மன்றம் என்றும் முன்னோடியாக இருந்திருக்கிறது... இனியும் அந்நிலை தொடர - எல்லா நலத் திட்டங்களும் வெற்றியடைய அந்த வல்ல ரஹ்மான் உதவியுடன், உங்களின் மேலான ஒத்துழைப்பு என்றென்றும் அவசியமாகிறது... உங்கள் ஒத்துழைப்பு நிறைவாகக் கிடைத்தால், இன்ஷா அல்லாஹ் நாம் நமது சமூக சேவயை தொடர்ந்து செய்வோம்...
இவ்வாறு மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ உரையாற்றினார்.
“இன்று போல் என்றும் வாழ்க!” -சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து:
பின்னர், இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட திருச்சி எல்.கே.எஸ். ஹாஜி செய்யித் அஹ்மத், ஹாஜி எஸ்.ஓ.சேகு, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜ்ஜா அ.வஹீதா, அவரது கணவர் ஹாஜி சின்னத்தம்பி ஆகியோர் உரையாற்றினர்.
கருமமே கண்ணாய்க் கருதும் இந்த அமீரக சூழலில், முதலில் இவ்வளவு எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பதே அரிது... ஆனால் இதையே வருடாவருடம் அமீரக காயல் நல மன்றம் சிறந்த முறையில் செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது... இதே ஒற்றுமை என்றும் நிலைத்திருந்து, அமீரக காயல் நல மன்றம் நமது சமுதாயத்திற்கு சேவையாற்றுவதில் மற்ற மன்றங்களுக்கு இன்று போல் என்றும் ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழவேண்டும் என்று இறையோனை பிரார்த்தித்தவர்களாய் சிறப்பு விருந்தினர்களனைவரும் தமதுரையில் வாழ்த்தினர்.
பின்னர், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நூல் அறிமுகம்:
பின்னர் நமதூர் எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் எழுதிய “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” என்ற தலைப்பிலான நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. அண்மையில் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் இந்த நூல் இடம்பெற்ற செய்தியும், அக்கண்காட்சியில் இடம்பெற்ற ஒரே தமிழ் நூல் இதுதான் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டதும் அனைத்து உறுப்பினர்களும் கரவொலியுடன் எழுத்தாளரை உற்சாகப்படுத்தினர்.
பின்னர் தனது படைப்பான அந்நூல் குறித்து எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் விவரித்துப் பேசி, துவக்கமாக கூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் அந்நூலை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட ஆண்களும், பெண்களும் அந்நூலை ஆவலுடன் வாங்கினர்.
மண(ய)க்கும் பிரியாணி...
பின்னர், பார்த்துப் பார்த்து பக்குவமாகச் செய்யப்பட்ட சுவைமிக்க ஃகாலித் "பிரியாணி" அனைவருக்கும் விருந்தாகப் பரிமாறப்பட்டது. ஹாஜி விளக்கு ஷேக் தாவூத் தலைமையில் பரிமாற்றப் பணிகள் நடைபெற்றன.
கூட்டத் தொடர்ச்சி... புதிய நிர்வாகக் குழு தேர்வு:
மதிய உணவைத் தொடர்ந்து மீண்டும் கூட்டம் துவங்கியது. இவ்வமர்வில் நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் நடைபெற்றது. துவக்கமாக, செயற்குழுவில் ஏற்கனவே பணியாற்றிய பல உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்.
வந்திருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த விருப்பம் மற்றும் வற்புறுத்தல் காரணமாக, நடப்பு தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்களே மீண்டும் மன்றத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து உறுப்பினர்களும் உரத்த தக்பீர் முழக்கத்துடன் அதனை ஏற்றுக்கொண்டனர்.
மன்றத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்துவதற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான விமர்சனங்கள், மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் நடவடிக்கைகள், மனோபாவம் மன்றத்தின் செயல்பாடுகள் என மன்றம் குறித்த எந்தக் கருத்தானாலும் அவற்றை தயக்கமின்றி மன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அறியத் தருமாறு அப்போது அனைத்து உறுப்பினர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அர்த்தமுள்ள அரட்டை:
பின்னர் உறுப்பினர்களின் கலந்துரையாடல் சிறப்பான முறையில் நடைபெற்றது. மன்றத்தின் செயல்பாடுகள், ஊர் ஒற்றுமை, புதிய நகர்மன்றம் என பல்வேறு அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கருத்துப் பரிமாற்றமும், பயனுள்ள கருத்துக்களும் பரிமாறப்பட்டது.
அதிர்ஷ்ட ஆலிம்...
அறிவிக்கப்பட்டபடி நடைபெற்ற குலுக்கலில், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் மஹ்ழரீ தங்க நாணய பரிசை சொந்தமாக்கிக் கொண்டார்.
கேம் அங்கிள்...
இந்த குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவு என்பதால் சிறாருக்கான விளையாட்டு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், மன்றத்தின் செயலாளர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யாவின் அன்பு மகள் ஆமீனா, மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீமிடம்,
“நீங்கள்தானே "கேம் அங்கிள்" (GAME UNCLE)...? இந்த முறை ஏன் எங்களுக்கு மட்டும் விளையாட்டுக்கள் இல்லை?" என்று, தன் சகாக்கள் துணையுடன் வந்து கேட்டதையடுத்து, மழலையரின் ஏக்கத்துடன் கூடிய அன்புக்கட்டளையைத் தவிர்க்க முடியாமல் உடனடியாக சிறாருக்கான விளையாட்டுகள் அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்டன.
"கேம் அங்கிள்" நல்ல முறையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கும், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து சிறாருக்கும் ஏராளமான பரிசுகளை வழங்கினார். பெண்களுக்கும் பெண்கள் பகுதியில் தனியே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
அயராதுழைத்த அன்பர்கள்...
கூட்டத்தின் உணவு ஏற்பாடுகளை, ஹாஜி துணி உமர், ஹாஜி விளக்கு ஷேக் தாவூத், ஹாஜி யஹ்யா முஹ்யித்தீன் உள்ளிட்டோர் இரவு பகல் பாராது கடின உழைப்பினால் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
வாகன ஏற்பாடுகளை சகோதரர் ஆஸாத் சிறப்புற செய்திருந்தார். ஒலியமைப்பு ஏற்பாட்டை சகோதரர் ஸாஜித், சகோதரர் காதர் ஆகியோர் அழகுற செய்திருந்தனர். இதர ஏற்பாடுகளை சகோதரர் ஈஸா ஒருங்கிணைப்பில் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பொதுக்குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளையும், மன்றத்தின் துணை தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் நெறிப்படுத்தினார்.
மன்றத்தின் சார்பில் வெளியிட்ட நன்றி அறிக்கையில் இந்த பொதுக்குழு வெற்றி பெற உறுதுணையாய் இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு சார்பில் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாலை சிற்றுண்டி:
மாலையில் வடையும், தேநீரும் வழங்கப்பட்டன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வி இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீயின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன. ஒரு முழு நாளையும் ஊர் மக்களுடன் மகிழ்ச்சியுடன் கழித்த திருப்தியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்தவர்களாய் காயலர்கள் கலைந்து சென்றனர்.
அசைவத்தில் துவங்கிய கூட்டம் சைவத்தில் முடிந்தது...
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும், மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்கள் தமது சொந்த அழைப்பில் பேரில் தமது இல்லத்தில் அன்றிரவு விருந்திற்கு ஏற்ப்பாடு செய்திருந்தார்கள். சென்ற வருடம் ஹஜ் பெருநாள் மாலை அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற 'பெருநாள் வெட்டை' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத அமீரகத்தில் வசிக்கும் அனைத்து காயலர்களும் இவ்விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கே, அவர்களது வில்லாவில் சட்னி சம்பாருடனும் சுடச்சுட இட்லி, உளுந்து வடை, தோசை பரிமாறப்பட்டது. அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட நிலக்கடலை பாக்கெட்கள், இனிப்பு உள்ளிட்ட சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது.
மொத்தத்தில் அமீரக காயலர்களுக்கு இந்நாள் இனிய நாளாகக் கழிந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
இவ்வாறு அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு:
சாளை ஷேக் ஸலீம்
(துணை தலைவர்)
படங்கள்:
சாளை செய்யித் மூஸா காதிரீ
எம்.ஏ.சாஜித்
எம்.எஸ்.அப்துல் ஹமீத் |