நேற்று (01.12.2011) நள்ளிரவில் பெய்த அளவுக்கதிகமான கனமழை காரணமாக, காயல்பட்டினம் 01ஆவது வார்டுக்குட்பட்ட அருணாச்சலபுரம் பகுதியில், மழை நீர் பெருமளவில் தேங்கியது.
இதனால் பாதிப்பிற்குள்ளான அப்பகுதி பொதுமக்கள் தமது நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மானிடம் முறையிட்டனர். அவர் நகர்மன்றத் தலைவர் ஆபிதாவுக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில், நேற்று மதியம் 01.30 மணிக்கு அவ்விடத்திற்கு தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் தலைமையிலான அலுவலர்கள் விரைந்து வந்தனர்.
பொக்லைன் வாகனத்தைக் கொண்டு அப்பகுதியில் தேங்கியுள்ள நீரை கடலுக்கு வெட்டிவிடுமாறு நகர்மன்றத் தலைவர் உத்தரவிட்டதையடுத்து, மழை நீர் கடந்து செல்ல வடிகால் வெட்டிவிடப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துனர் நிஸார் உள்ளிட்ட அலுவலர்களும், நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஹைரிய்யா, பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கிய ஷீலா, அபூபக்கர் அஜ்வாத் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
படம்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
நெய்னார் தெரு, காயல்பட்டினம். |