காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சுனாமி குடியிருப்பு குறித்த சர்ச்சையை பேசித் தீர்க்கும் பொருட்டு, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் பொற்கொடி தலைமையில் சமாதானக் கூட்டம் இன்று காலையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் சுனாமி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இது விஷயத்தில் ஆட்சேபனைக்குரிய பல அம்சங்கள் உள்ளதாகக் கூறி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், 04.01.2011 அன்று காலை முதல் நகர் முழுக்க கடையடைப்பும், மாலையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இருப்பினும், முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் எதற்கும் முறைப்படி தெளிவு வழங்கப்படாத நிலையில், கட்டிடப்பணிகள் அசுர வேகத்தில் தொடர்ந்து நடைபெற்றது. அதனையடுத்து, கட்டிடப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருந்தும் கட்டிடப்பணிகள் நிறுத்தப்படாத நிலையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் மற்றும் நகரப் பிரமுகர்கள் அடங்கிய குழு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தகுந்த ஆவணங்களுடன் இதுகுறித்து முறையிட்டது. அதனடிப்படையில், கட்டிடப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
கட்டிடப் பணிகள் தற்காலிக நிறுத்திவைப்புக்கான காலக்கெடு நிறைவுறும் வரை, இத்திட்டத்தை ஆட்சேபித்த தரப்பினருக்கு எந்த விளக்கமும் முறைப்படி வழங்கப்படவில்லை. இந்நிலையில், காலக்கெடு நிறைவுற்றதும் மீண்டும் கட்டிடப்பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து, காயல்பட்டினம் நகராட்சியின் அப்போதைய தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், தூத்துக்குடி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கின் அடிப்படையில், கட்டிடப்பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, இன்று வரை அது நடைமுறையில் உள்ளது.
நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் கட்டிடப்பணிகள் அவ்வப்போது தொடரப்பட்டது அறியப்பட்டு, காவல்துறையிடம் முறையிடப்பட்டதன் பேரில், அதன் பின்னரே கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இவ்வாறிருக்க, இவ்வழக்கு குறித்து காயல்பட்டினம் நகராட்சியின் கருத்தை அறிவதற்காக கடந்த 22.11.2011 அன்று நடைபெற்ற நகராட்சியின் சாதாரண கூட்டத்திற்குப் பின்னர், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வந்தனர். இவ்வழக்கை பதிவு செய்துள்ள நகர்மன்ற முன்னாள் தலைவரிடமிருந்து தேவையான விளக்கத்தைப் பெறாத நிலையில் எந்தக் கருத்து இதுகுறித்து தெரிவிக்க இயலாது என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மற்றும் அங்கிருந்த உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும். உடனடியாக வந்து அக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா, நகர்மன்றத் தலைவர் ஆபிதாவிடம் திடீரென தெரிவித்ததாகத் தெரிகிறது.
அதனையடுத்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 12.00 மணிக்கு சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தை, தாசில்தார் வீராசாமி, துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் வழிநடத்தினர். காயல்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி செல்வலிங்கம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா ஆகியோரும் இக்கூட்டத்தில் அங்கம் வகித்தனர்.
துவக்கமாக, கற்புடையார் பள்ளி வட்டத்திலுள்ள தேவாலயத்தின் பங்குத்தந்தை சேவியர் ஜார்ஜ் பேசினார்.
இந்த 169 தொகுப்பு வீடுகளுக்கான பயனாளிகள் யாரும் புதிதாக இந்த ஊரில் குடியமர்த்தப்படப் போவதில்லை... ஏற்கனவே இங்கிருப்பவர்கள்தான்! அவர்கள் புதிய குடியிருப்புக்குச் சென்ற பின்னர் அவர்களது பழைய குடிசைகளை உடனடியாக காலி செய்வர்... அதன் பிறகு அவ்விடத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்...
ஓட்டை ஒழுக்குடன் உள்ள குடிசைகளில் குடியிருந்துகொண்டு அவர்கள் படும் வேதனையை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க இயலவில்லை என்பதால் நாங்கள் உங்களிடமே இதனை வேண்டுகோளாய் முன்வைக்கிறோம்...
எனவே, இவ்வழக்கை எப்படியேனும் திரும்பப் பெற்று, ஏழை மீனவ மக்களுக்கு நல்ல குடியிருப்பு கிடைக்க உதவுங்கள்... என்று அவர் அப்போது கேட்டுக்கொண்டார்.
பின்னர், இத்திட்டம் குறித்து காயல்பட்டினம் நகர பொதுமக்கள் தரப்பில் சென்றிருந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போதைய நகர்மன்றத் தலைவர் வழக்குப் பதிவு செய்தார் என்ற அடிப்படையில், இப்போதைய தலைவர் கைச்சான்றிட்டால், வழக்கை திரும்பப் பெற வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த கருத்தைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அப்போது எழுந்து பேசிய காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ், இப்பிரச்சினை இன்று நேற்று எழுப்பப்பட்டதல்ல! இத்திட்டத்தை ஆட்சேபித்து கடந்த ஜனவரி மாதம் 04ஆம் தேதி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது...
அதில், இந்த குடியிருப்புத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகத்தினர் தவிர்த்து, நகரின் இதர அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாகக் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று புதிய நகர்மன்றத் தலைவர், நகரின் பெரும்பான்மையோரின் உணர்வுகளைத் தாங்கிய இந்த முன் நிகழ்வுகளையும் கருத்திற்கொண்டுதான் செயல்பட முடியும்...
இக்கூட்டம் திடீரென கூட்டப்பட்டுள்ளது... இக்கூட்டத்தில் முக்கியமாகக் கலந்துகொள்ள வேண்டியவர்களான ஐக்கியப் பேரவை நிர்வாகத்தினர் யாரும் இல்லாத நிலையில் இக்கூட்டம் நடத்தப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம்... அவர்கள் யாரும் கலந்துகொள்ளாத நிலையில் இதுகுறித்து நாங்கள் தனித்து எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை...
எனவே, ஐக்கியப் பேரவை நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் வகையில் பிரிதொரு தேதியில் முன்னறிவிப்புச் செய்து இதுபோன்று கூட்டம் நடத்தினால், எங்கள் பேரவை நிர்வாகத்திலுள்ள பெரியவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கும், அவர்களின் முடிவுக்கும் இக்கூட்டத்திலிருக்கும் எங்கள் தரப்பினர் அனைவரும் கட்டுப்பட ஆயத்தமாக உள்ளோம்... என்று தெரிவித்தார். மற்ற அனைவரும் அதனை ஒருமனதாக ஆமோதித்தனர்.
பின்னர், அரசு தரப்பில் இதுகுறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா,
இதுகுறித்து நம் மாவட்ட ஆட்சியர் மூன்று உறுதிமொழிகளைத் தந்துள்ளார்...
(1) புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புக்குச் செல்லும் பயனாளிகள் ஏற்கனவே குடியிருந்த குடிசைகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்படும்... அவ்விடத்தில் வேறு குடியிருப்புகள் வர அனுமதிக்கப்படாது...
(2) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகள் தவிர்த்து தகுதியுள்ள வேறு பயனாளிகள் யாரேனும் விடுபட்டிருப்பின், அதுகுறித்து தெரியப்படுத்தினால் வேறு திட்டங்கள் மூலம் அவர்களுக்கும் புதிய குடியிருப்புகள் கட்டித்தர ஆவன செய்யப்படும்...
(3) பயனாளிகள் புதிய குடியிருப்புகளுக்குச் சென்ற பின்னர், பழைய இடங்களை ஆக்கிரமிக்காதிருக்கும் வகையில், கடற்கரைப் பகுதியை சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த சுற்றுலாத்துறை ஆயத்தமாக உள்ளது... அதன் முதற்கட்டமாக, ஐம்பது லட்சம் ரூபாய் வரையிலான செலவு மதிப்பிற்கு இப்போதே வரைவு திட்டத்தை முன்மொழியலாம்... என்று தெரிவித்தார்.
இதில் மூன்றாவது அம்சம் குறித்து ஆட்சேபித்து கருத்து தெரிவித்த எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினத்திற்கென ஒரு கலாச்சார கட்டுக்கோப்பு உள்ளது... கடற்கரை என்று அழகுபடுத்தப்பட்டதோ அன்று முதல் அக்கட்டுக்கோப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது...
கடற்கரையில் எவ்வித மறைவிடமும் இல்லாதிருந்த வரை அங்கு சமூக விரோதிகள் துணிந்து வரத் தயங்கினர்... ஆனால் இன்று அழகுபடுத்தி கட்டிடங்கள் கட்டப்பட்ட பிறகு ஆங்காங்கே கிடைக்கும் மறைவுகளை சமூக விரோதிகள் தவறான வழியில் பயன்படுத்தி வருவது வழமையாக உள்ளது...
இதனால் பாதிக்கப்படுவோர் அனைத்து சமயங்களைச் சார்ந்த பெண்களும்தான்... எனவே, கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தைப் பொருத்த வரை எங்கள் ஐக்கியப் பேரவை அதை ஒருபோதும் ஏற்காது என்பதை அவர்கள் கூற நாங்கள் ஏற்கனவே அறிந்துள்ளோம்... என்றார்.
நிறைவாக, ஐக்கியப் பேரவை நிர்வாகிகளுடன் கலந்து பேசிய பின்னர், இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதிக்குள் ஒரு தேதியில் இதுபோன்று மீண்டும் கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், எம்.ஜஹாங்கீர், ஜே.அந்தோணி, பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோரும்,
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்களின் மகன் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், முஸ்லிம் லீக் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.அப்துல் வாஹித், ஷேக் அப்துல் காதிர் ஆகியோரும்,
கற்புடையார் பள்ளி வட்டம் மீனவ சமுதாயத்தின் சார்பில், அதிமுக தூத்துக்குடி மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் டி.பி.அந்தோணி, கற்புடையார் பள்ளி வட்ட மீனவர் சமுதாயத் தலைவர் சேவியர், அதன் செயலாளர் தஸ்னேவிஸ், அதன் முன்னாள் தலைவர் பிச்சையா, ஏ.மார்ட்டின் ஆகியோரும் கலந்துகொண்டனர். |