‘மெகா‘ அமைப்பு, விரிவாக்கப்பட்ட செயல்திட்டங்களுடன் முறைப்படி தொடர்ந்து இயங்கும் என அதன் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊழலற்ற - நேர்மையான - வெளிப்படையான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் துவக்கப்பட்ட தற்காலிக அமைப்பு, “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA).
இவ்வமைப்பின் சார்பில், கடந்த நகர்மன்றத் தேர்தலின்போது, நகராட்சித் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்ட - தகுதியான - வெற்றிக்கு வாய்ப்புள்ள வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், 08.10.2011 அன்று ‘நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்‘ நடத்தப்பட்டது.
தேர்தல் நிறைவுற்று, முடிவுகள் வெளியான பின்னர், புதிய நகர்மன்றத்துடன் பொதுமக்களுக்கு நல்லதொரு அறிமுகத்தை ஏற்படுத்தவும், நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், நகர்மன்றத் தலைவர் மற்றும் 18 வார்டுகளின் உறுப்பினர்களை வரவழைத்து, ‘காயல்பட்டினம் நகர்மன்றம் அடுத்த 5 ஆண்டுகளில்...‘ எனும் தலைப்பில் பொதுக்கூட்டமும், 10.11.2011 அன்று ‘மெகா‘ சார்பில் நடத்தப்பட்டுள்ளது.
பெயருக்கேற்ற பணிகள் திட்டமிட்டபடி நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, ‘மெகா‘வின் செயற்குழுக் கூட்டம் 01.12.2011 அன்று காலை 11.30 மணிக்கு, காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவிலுள்ள ஷாம் ஒலி ஊழியர் மர்ஹூம் சதக்கத்துல்லாஹ் ஆலிம் இல்லத்தில், ‘மெகா‘வின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையில் நடைபெற்றது.
‘மெகா‘, நகர்மன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு துவக்கப்பட்ட தற்காலிக அமைப்பு என்பதால், தற்போது தேர்தல் பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில், தேர்தலையொட்டிய ‘மெகா‘வின் செயல்திட்டங்களும் நிறைவுற்றுவிட்டது...
எனினும் கடந்த 10.11.2011 அன்று ‘மெகா‘ சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பலரும், கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாட்களிலும், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும், “இன்னும் பொதுமக்களுக்கு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்... அதற்கு ‘மெகா‘ அதே பெயரிலேயே தொடர வேண்டும்...” என தனிப்பட்ட முறையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இறுதியில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - ஹாமித் ரிஃபாய் அவர்களுக்கு பாராட்டும், நன்றியும்:
நகர்மன்றத் தேர்தலையொட்டிய ‘மெகா‘வின் அனைத்து செயல்திட்டங்களுக்கும் உறுதுணையாக இருந்து, முன்னின்று களப்பணியாற்றி, சோதனைகளை இன்முகத்துடன் எதிர்கொண்ட ‘மெகா‘வின் உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் அவர்களை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.
பணி நிமிர்த்தமாக மீண்டும் அரபகம் செல்லும் அவருக்கு வல்ல அல்லாஹ் எல்லா வளங்களையும், நலன்களையும் நிறைவாகத் தந்தருள இக்கூட்டம் வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 - விரிவாக்கப்பட்ட செயல்திட்டத்துடன் ‘மெகா‘ :
நகர்மன்றத் தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்காகத் துவங்கப்பட்ட ‘மெகா‘வை, “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு - MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION“ என்ற அம்சத்தை மட்டும் நீக்கி, நகர்மன்றம், நகரின் கலாச்சாரம், ஒழுக்க விழுமியங்கள் உள்ளிட்ட நகர்நல அம்சங்களை உள்ளடக்கி, ‘மெகா‘ என்ற பெயரையும் உட்பொதிந்து, முறைப்படி அரசுப்பதிவு செய்து, அமைப்பை தொடர்ந்து நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எஸ்.கே.ஸாலிஹ் துஆவுக்குப் பின், ஸலவாத், கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், ‘மெகா‘வின் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர், உள்ளூர் செயற்குழு உறுப்பினர்களான எஸ்.அப்துல் வாஹித், ஹாஜி காழீ நூஹ், ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், எஸ்.கே.ஸாலிஹ், ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக், செய்யித் இப்றாஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |