பொதுமக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பையடுத்து, துவக்கப்பட்ட தூத்துக்குடி - கொழும்பு இடையிலான பயணியர் கப்பல் போக்குவரத்துச் சேவை அண்மையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் கணனி மென்பொருளில் ஏற்பட்டுள்ள பழுதே இந்த இடைநிறுத்தத்திற்குக் காரணமென கப்பல் சேவையை இயக்கும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், கொழும்பிலுள்ள ஒரு நிறுவனத்திலிருந்து இக்கப்பல் நிறுவம் பெரிய தொகையில் பெட்ரோல் எரிபொருள் பெற்றதற்கு இதுவரை நிலுவைத்தொகையை செலுத்தாத காரணத்தால், அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கின் பெயரிலேயே கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அடுத்த சில நாட்களிலேயே அந்நாட்டின் ‘வீரகேசரி‘ தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அதே நாளிதழில் மற்றொரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இக்கப்பலுக்கு உணவு வினியோகித்தமைக்காக, தமது நிறுவனத்திற்கு ஒன்றரை கோடி இந்திய ரூபாய் தரவேண்டியுள்ளதாக, ‘ரேட் எக்ஸ் ஷிப்பேர்ஸ் கம்பெனி‘ என்ற தென்னிந்திய நிறுவனம், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாகவும், எனவே மேற்படி கப்பலை தடுத்து வைக்க நீதிமன்றத்தால் மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. |