தாரங்கதாரா கெமிக்கல் வெர்க்ஸ் (DCW) என்ற பெயரில் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்டு இயங்கி வரும் தொழிற்சாலையின் உற்பத்தி மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து, 1980களில் சென்னைவாழ் காயலர்களால் நடத்தப்பட்ட பொதுநல அமைப்பான ‘சதக்கத்துல்லாஹ் அப்பா வெல்ஃபர் அசோஸியேஷன்‘ சார்பில், 19.02.1986 அன்று, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் விளக்கம் கோரப்பட்டது.
அக்காலகட்டத்தில், போபால் விஷவாயுக் கசிவால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியான செய்தி நாடு முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. எங்கோ இருக்கும் தொழிற்சாலையின் பக்க விளைவுகள் குறித்து அறிந்துகொண்ட இவ்வமைப்பினர், காயல்பட்டினம் எல்லைக்குள்ளேயே இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்து அச்சம் கொள்ளத் துவங்கினர்.
எடுத்த எடுப்பிலேயே நடவடிக்கை கோரி எந்த முயற்சியிலும் இறங்காமல், டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது... அதன் பக்க விளைவுகள் என்னென்ன என்பன குறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அவ்வமைப்பின் சார்பில் முறைப்படி விளக்கம் கோரப்பட்டது.
அக்கடிதம் உங்கள் பார்வைக்கு:-
இக்கடிதம், CFFC சார்பில் தொகுக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது.
இந்த சதக்கத்துல்லாஹ் அப்பா வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் தலைவராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவக்கப்பட்ட காலம் முதல் அதன் உறுப்பினராக இருந்து, அதன் நிறுவனர் காயிதெமில்லத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவரும், அக்கட்சியின் மறைந்த தேசிய தலைவர் குலாம் மஹ்மூத் பனாத்வாலா அவர்களை காயிதெமில்லத் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, கட்சிக்குள் இணைத்தவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நிறுவனரும் - ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களின் தந்தையுமான மர்ஹூம் பி.எச்.எம்.அப்துல் காதிர் பொறுப்பேற்றிருந்தார்.
துணைத்தலைவராக வி.எஸ்.சுலைமான் அவர்களும், செயலாளராக எஸ்.எம்.பி.எம்.அப்துல் காதிர் அவர்களும், துணைச் செயலாளராக கே.மஹ்மூத் அவர்களும்,
பொருளாளராக, கித்மத் சேவா சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான ஹாஜி எம்.என்.பக்ரீன் அவர்களும் பொறுப்பு வகித்தமை குறிப்பிடத்தக்கது. |