இந்திய நாட்டின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று மத தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.
இந்த மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், தொடர்முழக்கப் போராட்டங்கள், சமய நல்லிணக்க நிகழ்ச்சிகள், கடையடைப்புகள், கவன ஈர்ப்பு நிகழ்ச்சிகள் என இன்றளவும் முஸ்லிம் அமைப்புகளாலும், சமய நல்லிணக்கம் விரும்பும் இதர அமைப்புகளாலும் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, காயல்பட்டினம் நகரின் அனைத்து கடைகளும் காலை முதல் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், எப்போதும் பரபரப்புடன் காணப்படும் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
வங்கிகள், அரசு அலுவலகங்கள் திறந்துள்ளன. பேருந்து போக்குவரத்துகள் சீராக உள்ளது. நகரில் இயல்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த பாதிப்பும் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சமுதாய அமைப்புகள் சார்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழமையாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எந்த அமைப்பும் கடையடைப்புக்கென எந்த முயற்சியிலும் இறங்காத நிலையிலும் நகரின் அனைத்து வணிகர்களும் தங்கள் வணிக நிறுவனங்களை அடைத்து, அமைதியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது வழமையாகியுள்ளது.
அதுபோல பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறையளிக்கப்படாவிட்டாலும், நகரில் பெரும்பாலான முஸ்லிம் மாணவர்கள் டிசம்பர் 06 அன்று வகுப்புகளைப் புறக்கணிக்கும் நிலையும் உள்ளது. எனினும், இன்று முஹர்ரம் 10ஆம் நாள் - ஆஷூறாவையொட்டி அரசு விடுமுறை என்பதால், மாணவர்களுக்கு வகுப்புகளைப் புறக்கணிக்க அவசியமற்றுப் போயுள்ளது. எ
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, நகரில் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடவாமல் பாதுகாத்திடும் பொருட்டு, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் காவலர்கள், நகரின் முக்கிய வீதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் மற்றும் படங்கள்:
செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். |