மஹான் ஸதக்கத்துல்லாஹில் காஹிரீ அவர்களின் ஏக புதல்வரான மஹான் முஹம்மத் லெப்பை அப்பா அவர்களின் 303ஆவது நினைவு தின கந்தூரி விழா பாளையங்கோட்டையிலுள்ள அன்னாரின் அடக்கஸ்தலத்தில் 02.12.2011 அன்று மாலை முதல் இரவு வரை நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியில், மஹான் அவர்களின் அடக்கஸ்தலத்தை நிர்வகித்து வரும் காதர் பாவா பள்ளிவாசல் மற்றும் தர்ஹாவின் நிர்வாகிகள் ஏற்பாட்டில் அரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், மஹான் முஹம்மத் லெப்பை அப்பா அவர்களின் 12ஆவது தலைமுறையைச் சார்ந்தவருமான ஐ.ஆபிதா இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்னர், திருநெல்வேலி மேயர் காயல்பட்டினம் நகராட்சித் தலைவருக்கும், காயல்பட்டினம் நகராட்சித் தலைவர் திருநெல்வேலி மேயருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில், ‘சிந்தனைச் சரம்‘ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ பீர் முஹம்மத் பாக்கவீ சிறப்புரையாற்றினார்.
தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோதர் முகைதீன், நெல்லை ஷிஃபா மருத்துவமனையின் அதிபர் முஹம்மத் ஷாஃபின் மற்றும் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு, மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரித குறிப்புகளுடன் உரையாற்றினர்.
துஆவுடன் மாலை அரங்க நிகழ்ச்சி நிறைவுற்றது.
மஃரிப் தொழுகைக்குப் பின் இரவு 07.00 மணிக்கு, மஹான் அவர்களின் அடக்கஸ்தலத்தில், அவர்களின் 10ஆவது தலைமுறையான காயல்பட்டினத்தைச் சார்ந்த ஹாஜி முஹம்மத் லெப்பை தலைமையில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
இதில், காயல்பட்டினம் தைக்கா தெரு, புதுக்கடைத் தெரு, மகுதூம் தெரு சுற்றுவட்டாரங்களைச் சார்ந்த சுமார் 50 ஆண்களும், 25 பெண்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
காயல்பட்டினத்தைச் சார்ந்த ‘பாளையம்‘, ‘பல்லாக்‘ என்ற பெயர்களைத் தாங்கிய குடும்பத்தினர் மஹான் முஹம்மத் லெப்பை அப்பா அவர்களின் வாரிசுகள் என்றும், தற்போது மஹான் அவர்களின் 09 முதல் 12 வரையிலான தலைமுறையினர் என்றும் அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தகவல் தொகுப்பு:
பல்லாக் அப்துல் காதிர் நெய்னா,
மற்றும்
J.M.அப்துர்ரஹீம் காதிரீ,
தைக்கா தெரு, காயல்பட்டினம். |