ரியாத், தமிழ் தஃவா ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ரமழான் மாத போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி - கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்றது. இதில் காயலர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
அல்லாஹ்வின் பேரருளால் ரியாத், தமிழ் தஃவா ஒன்றியத்தின் தமிழ் பேசும் சகோதர, சகோதரிகளுக்கான மாதாந்த தஃவா நிகழ்ச்சியும், ரமழான் மாத விஷேட போட்டி நிகழ்ச்சியின் பரிசரிப்பு நிகழ்ச்சியும் சென்ற 07-01-1433 (02 December 2011) வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகை முதல் இரவு 7.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
குத்பாப் பிரசங்கம், நபித் தோழியர் பற்றிய சிற்றுரை, சுருக்கக் கேள்வி பதில் நிகழ்ச்சி, கலந்து கொண்டோருக்கான சுருக்கப் பேச்சு, விஷேட சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய மேற்படி தஃவா ஒன்று கூடலில் குளிரையும் பொருட்படுத்தாது சுமார் முன்னூறு சகோதர சகோதரிகள் பங்குகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமாக தல்லா தஃவா நிலையத்தின் அழைப்பாளரும், தமிழ் தஃவா ஒன்றியத்தின் தலைவருமான மௌலவி ளபருள்ளாஹ் (பஹ்ஜி) அவர்கள் 'ஆஷ_ரா நோன்பின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள்" எனும் தலைப்பில் ஜும்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் அன்று மூஸா (அலை) அவர்கள் காலத்திலிருந்த பிர்அவ்ன் தன் பதவியைப் பாதுகாத்துக்கொள்ள பல உயிர்களைக் கொலை செய்ததைப் போன்று அதே வழியைத் தொடரும் பல பிர்அவ்ன்கள் இன்றும் காணப்படுகின்றனர். இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டங்களும், படுகொலைகளும் அதற்கு ஓர் உதாரணமாகும் என விவரித்தார்.
ஜும்ஆத் தொழுகையை அடுத்து பத்ஹா தஃவா நிலையத்தின் அழைப்பாளர் மௌலவி அபுல் ஹஸன் (மதனி) அவர்கள்; நபித் தோழியர் வரிசையில் உம்மு அய்மன் (ரலி) மற்றும் உம்மு ஸ{லைம் (ரலி) ஆகியோர்களது வாழ்க்கைச் சுருக்கத்தை அவர்களின் பொறுமை, வீரம், நபியவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் காணப்பட்ட நேசம் போன்ற விடயங்களுடன் முன்வைத்தார்.
அதனை அடுத்து ஆண்கள், பெண்கள் பகுதிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பகலுணவுக்காகவும், அஸர்த் தொழுகைக்காகவும் இடைவேளை வழங்கப்பட்டது. அஸர் தொழுகையின் மறுகனமே அடுத்த நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
ஆரம்பமாக, மன்னர் ஸஊத் பல்கலைக் கழகத்தின் மேற்படிப்பு மாணவர் மௌலவி ரிஷாத் (ஸஹ்வி) அவர்கள் 20 நிமிடங்களில் விடையளிக்கத்தக்க, இஸ்லாத்துக்காக சேவை ஆற்றிய முக்கிய ஸஹாபாக்களின் சில தகவல்களை உள்ளடக்கிய சுருக்கக் கேள்வித்தால் ஒன்றை கலந்துகொண்டோர் சகலருக்கும் வழங்கினார். அப்போட்டியில் கூடிய புள்ளிகளைப் பெற்ற ஐவருக்கு மஃறிப் தொழுகையின் பின்னர் பரிசு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆண்கள் பிரிவிலிருந்து சகோதரர் ஜாபிர், சகோதரர் இத்ரீஸ், சகோதரர் முஹம்மது அலி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு தாம் விரும்பும் மார்க்க சம்பந்தமான தலைப்புக்களில் சிற்றுரை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் முறையே 'நற்குணமும் இஸ்லாமும்', 'முஹர்ரம் தரும் பாடங்கள்', 'முஹர்ரம் மாத நிகழ்வுகள் மூலம் நாம் பெறவேண்டிய படிப்பினைகள்' ஆகிய தலைப்புக்களில் உரையாற்றினர். அந் நிகழ்ச்சிக்கு மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) அவர்கள் தலைமை தாங்கினார்.
அதன் மறுகனமே எயார் பேஸ் தஃவா நிலையத்தின் அழைப்பாளர் மௌலவி மப்ஹ_ம் (பஹ்ஜி) அவர்கள் 'தலைமைத்துவத்தின் நிபந்தனைகள் எவை?' எனும் தலைப்பில் அன்றைய தின விஷேட உரையை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் அல்லாஹ்வின் வல்லமைகள் தான் எம்மாத்திரம்!!, நாம் இஸ்லாத்தின் அடிப்படைகளில் உறுதியுடன் இருப்பதன் அவசியம் என்ன!! போன்ற தகவல்களையும் முன்வைத்து விளக்கமளித்ததோடு, தத்தம் குழந்தைகளின் உலகக் கல்வியை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகளையோ, அகீதாவைப் பற்றியோ சிந்திக்காது செயல்படுவோரின் நிலை பற்றியும் எடுத்துக் கூறினார். அவரது உரை மஃறிப் தொழுகை வரை நீடித்தது.
மஃறிப் தொழுகையைத் தொடர்ந்து ரமழான் மாத விஷேட போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு மௌலவி முஆஸ் தலைமை வகித்தார்.
பரிசைப் பெறத் தகுதிபெற்றவர்களாக 42 பேர் தமிழ் தஃவா ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய போட்டிக் குழுவின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 98 புள்ளிகளைப் பெற்ற பஷீர் சின்ன லெப்பை அஸனார் (ரியாத்) அவர்கள் முதல் பரிசான 1500 ரியால்கள் ரொக்கப் பணத்தை தனதாக்கிக்கொண்டார்.
மேலும் 97 புள்ளிகளைப் பெற்ற முஹம்மது மிப்ரான் (ரியாத்) அவர்கள் இரண்டாவது பரிசாக 1000 ரியால்கள் ரொக்கப் பணத்தையும்,
96 புள்ளிகளைப் பெற்ற நான்கு சகோதரிகள் சீட்டிழுப்பின் மூலம் மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டு 750, 500, 250, 200 ரியால்களை பரிசாகப் பெற்றனர். அவர்கள் முறையே பரீனா அமானுல்லாஹ் (ரியாத்), மஸிய்யா ஸிராஜ் (ரியாத்), பர்வீன் நிஸ்தார் (ரியாத்), காயல்பட்டனம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த பிறபு தாஹிரா தாவ+த் (ரியாத்) ஆகிய சகோதரிகளாகும்.
95 முதல் 90 புள்ளிகளைப் பெற்ற ரியாத், தம்மாம், இலங்கை, இந்தியா ஆகிய இடங்களைச் சேர்ந்த 36 பேர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இறுதியாக நன்றியுரையுடனும் கப்பாரதுல் மஜ்லிஸ் துஆவுடனும் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவு பெற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நிறைவேற நல்லருள் புரிந்த வல்லவன் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரியாதிலிருந்து அபு அஹ்மத் (சோனா),
காட்டு தைக்கா தெரு. |