காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரின் தனதார்வத்தில், மாணவ-மாணவியருக்கு அவரவர் பள்ளியிலேயே வங்கிக் கணக்குகள் புதிதாகத் திறக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் உள்ளிட்ட தேவைகளுக்காக மாணவ-மாணவியருக்கு அரசு வங்கியொன்றில் வங்கிக்கணக்கு இருப்பது அவசியம் என்ற நிலையுள்ளது.
பள்ளிகளில் பாடம் நடைபெறுவதும், வங்கிகள் இயங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதால், மாணவ-மாணவியர் புதிதாக வங்கிக் கணக்கு திறப்பதற்காக தமது பள்ளிப்பாடங்களைத் தவிர்த்துவிட்டு, பலமுறை வங்கிகளுக்கு அலைவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால், மாணவ-மாணவியர் சந்திக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காயல்பட்டினம் நகர கிளை மேலாளர் வி.குணசேகரன் தனதார்வத்தில், மாணவ-மாணவியருக்கு அவரவர் பள்ளியிலேயே புதிதாக வங்கிக் கணக்கு திறக்கும் வகையில் முகாம் நடத்தி வருகிறார்.
அந்த அடிப்படையில், துவக்கமாக காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக புதிய வங்கிக் கணக்கு திறப்பு முகாம் 08.12.2011 வியாழக்கிழமையன்று (நேற்று) மதியம் 02.30 மணிக்கு அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் காஜா முகைதீன் முகாமைத் துவக்கி வைத்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தூத்துக்குடி மண்டல வணிக மேலாளர் எஸ்.சகாய ரீபா, அதன் காயல்பட்டினம் கிளை மேலாளர் வி.குணசேகரன் ஆகியோர், அப்பள்ளியின் 120 மாணவர்களுக்கு புதிய வங்கிக் கணக்குகளை துவக்கிக் கொடுத்தனர். வங்கி அலுவலர்களான லக்ஷ்மணன், மாணிக்கம் ஆகியோர் துணைப்பணியாற்றினர்.
வங்கிக் கணக்கு புதிதாகத் திறப்பதற்குத் தேவைப்படும் ஆவணங்களை முகாமுக்குக் கொண்டு வருமாறு மாணவர்கள் முற்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
முகாம் ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்களான பீர் முஹம்மத், அப்துல் ரசாக், எஸ்.பி.பி.புகாரீ, ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர். |