பாசிப்பட்டினத்தில் அடங்கியிருக்கும் மஹான் சர்தார் நெய்னா முஹம்மத் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அவர்கள் நினைவாக, காயல்பட்டினம் கோமான் ஜமாஅத் சார்பில் ஆண்டுதோறும் முஹர்ரம் முதல் நாள் முதல் 14ஆம் நாள் வரை கந்தூரி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில் இவ்வாண்டு நிகழ்ச்சிகள் 26.11.2011 சனிக்கிழமை மாலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தஃப்ஸ் முழங்க, அலங்கரிக்கப்பட்ட யானையில் குழந்தைகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டனர். பேண்டு வாத்தியங்கள் முழங்க சிலம்பாட்டத்தைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.
கந்தூரி நிகழ்ச்சியை முன்னிட்டு தினமும் அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி மஹான் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. தினமும் மாலையில் மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகைக்குப் பின் இரவு 08.00 மணிக்கு மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றன.
கந்தூரி தினமான 10.12.2011 சனிக்கிழமையன்று இரவில் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
அன்றிரவு, அலங்கரிக்கப்பட்ட யானை, ஜோடிக்கப்பட்ட குழந்தைகளுடன் பல்லக்கு, சிலம்பாட்டம், தீப்பந்த விளையாட்டு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலத்தையொட்டி வான வேடிக்கைகளும், பேண்டு வாத்திய முழக்கங்களும் இடம்பெற்றன.
இதனை நகரின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெருந்திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
இக்கந்தூரி விழாவை முன்னிட்டு பல்வேறு ஊஞ்சல் விளையாட்டு அம்சங்கள் நிறுவப்பட்டிருந்தன. பொதுமக்கள் ஆர்வத்துடன் அவற்றை அனுபவித்தனர்.
கந்தூரி விழா ஏற்பாடுகளை, கோமான் ஜமாஅத் தலைவர் என்.எம்.முஹம்மத் ஃபாரூக் தலைமையில், துணைத்தலைவர் எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், செயலாளர் எஸ்.எஸ்.தாஹிர், துணைச் செயலாளர் ஜே.ஏ.மீரான், பொருளாளர் என்.எம்.முஹம்மத் இப்றாஹீம், துணைப் பொருளாளர் எம்.எச்.முஹம்மத் காஸிம், சிறப்பு ஆலோசகர் ஹாஜி எஸ்.எம்.கஸ்ஸாலி மரைக்கார், ஸ்டோர் கீப்பர் எம்.பி.பீர் முஹம்மத் என்ற கஸ்ஸாலி, உதவி ஸ்டோர் கீப்பர்களான கே.எம்.புகாரீ, எஸ்.ஐ.அஷ்ரஃப், என்.எம்.முஹம்மத் காஸிம் உள்ளிட்ட கோமான் ஜமாஅத் நிர்வாகிகள் செய்திருந்தனர். |