தமிழக அரசின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், மகளிர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை அந்தந்த நகராட்சிக்கு தமிழக அரசால் வழங்கப்படும்.
வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள - பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பெண்கள் இந்த உதவித்தொகையைக் கொண்டு தேவையான பயிற்சிகளைப் பெற்று, வேலைவாய்ப்புகளைப் பெற்றிடச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
இந்த உதவித்திட்டத்தின் கீழ், கடந்த 08.12.2011 அன்று, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள 5 பெண்களுக்கு இலவச பயிற்சி பெறுவதற்கான சான்றிதழ்களை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா வழங்கினார்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், நகர்மன்ற உறுப்பினர் பத்ருல் ஹக் ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சான்றிதழைப் பெற்றுள்ள அப்பெண்கள் அருகிலுள்ள தனியார் கணனி நிறுவனமொன்றில் இலவசமாக பயிற்சி பெற்று, அவர்கள் மூலமாகவே வேலைவாய்ப்பும் பெற்றிட இயலும். நடப்பாண்டில், இத்திட்டத்தின் கீழ் இன்னும் 5 பேருக்கான உதவித்தொகை ஒதுக்கீடு காயல்பட்டினம் நகராட்சியால் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையைப் பெற்று பயிற்சி பெற விரும்புவோர் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட - வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள - பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பெண்களாக இருத்தல் வேண்டும். 2003ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரப்படி அவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ளவர்கள் என கண்டறியப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. |