செய்தி எண் (ID #) 7698 | | |
செவ்வாய், டிசம்பர் 13, 2011 |
எல்.கே.மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், பொதுநல ஊழியருமான ஹாஜி பி.மஹ்மூத் காலமானார்! எல்.கே. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5761 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (67) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தாளாளரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளரும், தீவுத்தெரு அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் துணைத்தலைவருமான ஹாஜி பி.மஹ்மூத் இன்று காலை 08.00 மணியளவில் காலமானார். 21.09.1921 அன்று பிறந்த அன்னாருக்கு தற்போது வயது 91.
இவர், மர்ஹூம் ஏ.கே.புகாரீ அவர்களின் மகனும், கடந்த இருபதாண்டுகளுக்கு முன், பம்பாய் ஹஜ் கமிட்டி தலைவராக இருந்த மர்ஹூம் ஹாஜி பி.அபூபக்கர் அவர்களின் இளைய சகோதரரும், அமீரக காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ அவர்களின் தந்தையான மர்ஹூம் பி.அப்துல் ஜமீல் அவர்களின் மூத்த சகோதரரும் ஆவார்.
இவரது மனைவி ஏ.கே.ஜஹ்ரா, இரண்டாண்டுகளுக்கு முன்பு காலமானார். (அவர், அரசுப் பள்ளிகளுக்கு தம் சொந்த நிலங்களை தானமாக வழங்கிய மர்ஹூம் ஹாஜி ஏ.கே.ஷாஹுல் ஹமீத், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளர் மர்ஹூம் ஹாஜி ஏ.கே.செய்யித் அஹ்மத் உள்ளிட்டோரின் சகோதரியாவார்.)
ஹாஜி பி.மஹ்மூத் அவர்களுக்கு ஆமினா ரமீலா என்ற மகளும், புகாரீ, ஜாவித் முஹ்ஸின், ஆரிஃப் ஆகிய 3 ஆண் மக்களும் உண்டு. (இவர்களில் ஜாவித் முஹ்ஸின் அவர்கள், அப்போதைய காயல்பட்டினம் பேரூராட்சியின் உறுப்பினராக இருந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவரது மகள் ஆமினா ரமீலா, காயல்பட்டினம் தீவுத்தெரு – அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனர் ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவியாவார்.)
ஐம்பதாண்டுகளுக்கு முன் நகர்நலனுக்காக துவக்கப்பட்ட காயல்பட்டினம் ஐக்கிய சங்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர், நகருக்கான குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நகர்நலக் காரியங்களுக்கு தூண்டுகோலாகவும், துணையாகவும் இருந்துவந்துள்ளார்.
நகரின் ஆரம்ப கால மாணிக்க வணிகரான இவர், ஹாங்காங் கவ்லூன் பள்ளி கட்டப்பட்டபோது, அதன் கட்டிடக் குழு செயலாளராகவும் இருந்து, அரிய பல சேவைகளைச் செய்துள்ளார்.
தனக்கு விபரம் தெரிந்த நாள் முதல், தனது இறுதி காலம் வரை தன் வேலையை தானே செய்து வந்த இவர், கொடுத்த வாக்கைப் பேணல், நேரந்தவறாமை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ஹாஜி பி.மஹ்மூத் அவர்களின் மறைவையொட்டி, அவர் அங்கம் வகித்த காயல்பட்டினம் எல்.கே.துவக்கப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஜி T.M.ரஹ்மத்துல்லாஹ்,
மற்றும்
ஹாஜி தைக்கா உபைதுல்லாஹ் (மக்காவ்),
தீவுத்தெரு, காயல்பட்டினம்.
செய்தியில் சில தகவல்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. (13.12.2011 - 12:31hrs) |