காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ளது அஹ்மத் நெய்னார் பள்ளிவாசல். மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாலும், இட நெருக்கடி காரணமாகவும் அப்பள்ளியை இடித்து பன்னோக்குத் திட்டத்தின் அடிப்படையில் விசாலமாகக் கட்ட அதன் நிர்வாகம் முடிவு செய்ததையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பழைய பள்ளி இடிக்கப்பட்டு, புதிக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.
திறப்பு விழா நிகழ்வுகள்:
கட்டிடப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதையடுத்து, 11.12.2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.30 மணியளவில் புதுப்பிக்கப்பட்ட அப்பள்ளியின் திறப்பு விழா, வெளிப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி முத்தவல்லி ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் விழாவிற்குத் தலைமை தாங்கினார். பள்ளியின் மூத்த உறுப்பினர்களும், நகரப் பிரமுகர்களும் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முத்தவல்லியின் உதவியாளரான ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
ஹாஃபிழ் கே.ஏ.அபூபக்கர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் இயற்றிய - பள்ளியின் வரலாற்றைக் கூறும் அரபி பாடலை, ஹாஃபிழ் ஏ.ஆர்,ஷெய்க் அப்துல் காதிர் வாஃபிக் பாடினார்.
பள்ளி சரித்திர விளக்கம்:
அதனைத் தொடர்ந்து, மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் வரவேற்புரையாற்றினார்.
அவரது உரையின் சுருக்கம்:-
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அஹ்மத் நெய்னார் பள்ளி துவக்கத்தில், அக்காலத் தேவைக்கேற்ப சுமார் 20 பேர் மட்டும் தொழும் அளவில் மிகச்சிறிய கட்டிடமாகவே இருந்துள்ளது. பின்னர், சுமார் 250 ஆண்டுகளுக்குப் பிறகு அஹ்மத் நெய்னார் என்ற பெரியார் இப்பள்ளியை விரிவுபடுத்திக் கட்டினார்.
அதற்குப் பிறகு, சிற்சிறு பராமரிப்புப் பணிகள் தவிர - கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் வரை பள்ளியின் கட்டிட அமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
காலப்போக்கில், பள்ளியில் தொழுகையாளிகள் வருகை அதிகரித்து, இடநெருக்கடி ஏற்பட்டதையுணர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் இப்பள்ளியை முற்றிலுமாக இடித்துக்கட்ட, பள்ளியின் மறைந்த முன்னாள் முத்தவல்லி மர்ஹூம் ஹாஜி பி.எஸ்.ஏ.ஷாஃபீ அவர்களின் தலைமையில் முடிவெடுக்கப்பட்டு, அதனடிப்படையில் இன்று கட்டிடப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
தான் பள்ளியின் முத்தவல்லியாகப் பொறுப்பேற்று செயல்பட்ட 20 ஆண்டுகளில், தன் வாழ்வின் பெரும்பகுதியையும் இப்பள்ளி நலனுக்காகவே கழித்த மர்ஹூம் பி.எஸ்.ஏ.ஷாஃபீ ஹாஜியார் அவர்கள், இக்கட்டிடப் பணிகளையும் கிட்டத்தட்ட நிறைவுபடுத்தியே நம் கையில் தந்துள்ளார்கள்... ஆனால், இன்று திறப்பு விழாவில் அவர்கள் இல்லாமற்போனதை நாங்கள் பேரிழப்பாகவே கருதுகிறோம்.
வல்ல அல்லாஹ் அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை ஒளிமயமாக்கி, அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்தபடி, உலகில் ஒரு பள்ளியைக் கட்டிய அவர்களுக்கு மறுமையில் சுவனத்தில் அழகிய ஓர் இல்லத்தை அன்பளிப்பாகத் தந்தருள்வானாக...
வல்ல அல்லாஹ் வகுத்த வரையறைப்படி, பள்ளியை நிர்வகிப்போர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்சாநெஞ்சம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்பதற்கு இலக்கணமாகவே வாழ்ந்த மர்ஹூம் ஷாஃபீ ஹாஜியார் அவர்களை இத்தருணத்தில் நினைவுகூர்வதை நாம் கடமையெனக் கருதுகிறோம்...
அவர்களுக்கடுத்தபடியாக, நம் பள்ளி நிர்வாகத்தை சிரமேற்கொண்டுள்ள ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் சரீர சுகத்தை அளித்து, அவர்கள் பொறுப்புகளை இலகுவாக்கி, நம் யாவரையும் ஒற்றுமையுடன் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கச் செய்தருள்வானாக...
இப்பள்ளியில் முற்காலத்தில் அனைத்து தரீக்காக்களைச் சார்ந்த பெருமக்களும் தொழும், துஆக்கள் இறைஞ்சியும், இறைதியானத்திலிருந்தும் வந்துள்ளனர் என்பதை நமக்கு முந்திய தலைமுறையினர் கூற நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஷாதுலிய்யா தரீக்காவின் பெரிய ஷெய்குனா அவர்கள், மிஸ்கீன் ஸாஹிப் ஆலிம் அவர்கள், ஒத்தமுத்து ஹாஜியார் அவர்கள், சேகு அப்துல் காதர் அப்பா அவர்கள் - இப்படி எண்ணற்ற பெருமக்களுக்கு இப்ப்ள்ளிதான் தரிப்பிடம் என நாம் கேட்டறிந்திருக்கிறோம்.
பெண் கல்வியைப் பற்றி நம் மக்கள் சரிவர சிந்திக்காத காலத்திலேயே, இப்பள்ளிக்குட்பட்ட இடத்தில் பெண்களுக்கான பாட சாலை நடத்த வழிவகுத்துத் தந்தவர்கள் நமது முந்தைய நிர்வாகிகள்... பலரும் நிர்வகித்த இப்பள்ளியை, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி என்ற பெயரில், தற்போது வாவு குடும்பத்தார் சிறப்புற நிர்வகித்து வருகிறார்கள்.
இப்பள்ளியில், ஒரே நிலைத்தொழுகையில் 30 ஜுஸ்உகளை ஓதிய நிகழ்வுகள் இருமுறை நடந்துள்ளது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மர்ஹூம் ஹாஃபிழ் ஒத்தமுத்து ஹாஜியார் அவர்கள் அவ்வாறு தொழுகை நடத்தியிருக்கிறார்கள். அதனையடுத்து, கடந்த ரமழானில் நமதூர் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர் ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் இதுபோன்று தொழுவித்திருக்கிறார்.
இத்தனை சரித்திரங்களை உள்ளடக்கிய இப்பள்ளி புதுப்பிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் திறப்பு விழா காண்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாகும்.
இவ்வாறு மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் தனது வரவேற்புரையில் தெரிவித்தார்.
புதிய பள்ளி திறப்பு:
பின்னர் புதுப்பிக்கப்பட்ட பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் டபிள்யு.எம்.எம்.செய்யித் அஹ்மத் பாக்கவீ என்ற ஊண்டி ஆலிம் பள்ளியின் பிரதான வாயிலைத் திறந்து வைத்தார்.
அனைவரும் உட்சென்று ‘தஹிய்யத்துல் மஸ்ஜித்‘ எனும் பள்ளி காணிக்கைத் தொழுகை இரண்டு ரக்அத் தொழுதனர்.
அவையோருக்கு மரியாதை:
பின்னர் வெளிப்பள்ளியில் மீண்டும் துவங்கிய நிகழ்ச்சியில், பள்ளியைத் திறந்து வைத்த ஊண்டி ஆலிம், பள்ளி முத்தவல்லி ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன், பள்ளி இமாம் அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ, பிலால் செய்யித் இப்றாஹீம் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வாழ்த்துரை:
பின்னர் ஊண்டி ஆலிம் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும், தூத்துக்குடி மாவட்ட காழீயுமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளிவாசலில் பேணப்பட வேண்டிய ஒழுங்குகள் குறித்து அவர்கள் தமதுரையில் விளக்கிப் பேசினர். தங்கள் இல்லங்களுக்கு யாருடைய அபிப்பிராயத்தையும் கேளாமலே கணக்கின்றி செலவழிக்கும் நமதூரைச் சார்ந்த செல்வந்தர்கள் பலர், அல்லாஹ்வின் இல்லத்திற்குத் தரும்போது மட்டும், “அவன் எவ்வளவு கொடுத்தான்...? நான் அவ்வளவு கொடுக்கிறேன்... நீ எவ்வளவு கொடுத்தாய்...? நான் இவ்வளவு தருகிறேன்...” என்று கணக்குப் பார்த்துப் பார்த்து செலவழிப்பது மிகவும் வேதனையளிக்கிறது... இது யாரையும் தாக்கும் நோக்கத்தில் சொல்லப்படும் செய்தியல்ல! இதைப் போன்ற பள்ளிவாசல்கள் வெளியூர்களிலே தனிநபராலேயே கட்டிக் கொடுக்கப்படுகிறது... அந்தளவுக்கு அவர்களிடம் தாராள மனது உள்ளது என்பதை எண்ணி வெட்கப்பட்டு இதைத் தெரிவிக்கிறேன்... என மவ்லவீ அம்ஜத் அலீ மஹ்ழரீ தனதுரையில் குறிப்பிட்டார்.
நிறைவாக, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் நன்றி கூற, பள்ளியின் இமாம் அபுல்ஹஸன் ஷாதுலீ ஸதக்கலீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நண்பகல் 12.30 மணியளவில் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
லுஹர் தொழுகை:
பின்னர், புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் நடைபெற்ற லுஹர் ஜமாஅத் (கூட்டுத்) தொழுகையை மவ்லவீ அம்ஜத் அலீ மஹ்ழரீ வழிநடத்தினார். தொழுகை நிறைவுற்றதும் அனைவரும் கலைந்து சென்றனர்.
புதுப்பிப்புக்காக உடைக்கப்படும் முன் பள்ளியின் பழைய தோற்றம்:-
தகவல்:
முஹம்மத் யூனுஸ் (கத்தர்),
மற்றும்
பக்ரீன் மம்மினாகார்,
சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. (18.12.2011 - 16:50hrs) |