அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து நகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட் வேண்டுமென, காக்கும் கரங்கள் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
எமது காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் மாதாந்திர கூட்டம் 11/12/2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 07:30 மணியளவில் அதன் அலுவலகத்தில் வைத்து தலைவர் எம்.ஏ.கே.ஜெயினுல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் எச்.எல்.பாஸித் கிராஅத்துடன் துவங்கிய இந்த கூட்டத்தில் மன்றத்தின் முதலாவது ஆண்டின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய காக்கும் கரங்கள் நிறுவனர் செய்யது அஹமது அஜ்ஹர், கடந்த ஓராண்டில் அமைப்பின் சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள் பொதுமக்களின் பாராட்டையும், பிரார்த்தனைகளையும் பெற்றுள்ளதென்றும், நமதூருக்கு நன்மை செய்யும் பொருட்டு இன்னும் பணிகளை அதிகளவில் செய்திட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
அடுத்து பேசிய காக்கும் கரங்கள் அலுவலக செயலாளர் ஷேக் முஹம்மது, காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் அதன் உறுப்பினர்களும், இதர பொதுமக்களுமென சுமார் 250 பேர், உயிர் காக்கும் இரத்த தானம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைப்பின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், காக்கும் கரங்கள் சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருந்த சகோதரர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்ததோடு, இனி வருங்காலங்களில் அமைப்பின் பணிகளை இன்னும் விரிவுபடுத்திச் செய்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - நிறுவனரின் தந்தை மறைவுக்கு இரங்கல்:
காக்கும் கரங்கள் நிறுவனர் செய்யது அஹமது அஜ்ஹர் அவர்களின் தந்தை ஜனாப் எஸ்.ஏ.செய்யது முஹம்மது புஹாரி ஷரீப் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2 - அரசின் நலத்திட்டங்கள் குறித்து நகரில் விழிப்புணர்வு:
நமது நகரில் அரசு உதவி தொகை, ஊக்கத் தொகை குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - இரண்டாமாண்டு துவக்க விழா:
வருகின்ற ஜனவரி மாதம், காக்கும் கரங்கள் அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பாக கொண்டாடுவதெனவும், அதற்குள் அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக அமைப்பின் செயலாளர் ஹசன் நன்றி கூற துஆ சலவாத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது, அல்ஹம்து லில்லாஹ். கூட்டத்தில், அமைப்பின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்,
தலைவர், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
காயல்பட்டினம். |