தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலை அண்மையில் அதிமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழக காயல்பட்டினம் கிளை சார்பில் 13.12.2011 அன்று (நேற்று) இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
திமுக நகர அவைத்தலைவர் ஜெ.எம்.கிதுரு முஹம்மது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதி ஆ.பன்னீர் செல்வன், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் டி.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் வரவேற்புரையாற்றினார்.
‘மெகா‘ என்ற பெயரில் மேடையைப் போட்டு, நால்வரை உட்கார வைத்து, அரசியல் கட்சிகளைக் குறை கூறி, இந்த அரசியல் கட்சிகள் என்ன செய்தன என்று கேட்கின்றனர்...
இன்று நாங்கள் ஆட்சியிலிருப்போம்... நாளை அதிமுக இருக்கும்... நாங்கள் மாறி மாறி பல விஷயங்களைச் செய்கிறோம்... அவற்றை வெறுமனே மேடை போட்டு விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது...?
ஒரு கம்ப்யூட்டரையும், ஒரு கேமராவையும் வைத்துக்கொண்டு, நீங்கள் நினைப்பதையெல்லாம் செய்தியாக எழுதி, நீங்களாகவே செட்டப் செய்து வெவ்வேறு பெயர்களில் கமெண்ட்டும் வெளியிடுகிறீர்களே...? நாங்கள் இதுபோல செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
பொன்னன்குறிச்சி கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைவில் வர இருக்கிறது... இதனை துவக்கத்திலிருந்தே கொண்டு வர முயற்சித்தது தி.மு.க. அரசுதான்...
மருத்துவர்களே நியமிக்கப்படாதிருந்த காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு டாக்டர் பாவநாசகுமார் என்ற எம்.டி. டாக்டரை கொண்டு வந்தது எங்கள் அரசுதான்...
அரசு மருத்துவமனை நலப்பணிகளுக்காக 10 லட்சம் ரூபாயை நாங்கள் பெற்றுக்கொடுத்துள்ளோம்...
இன்று நகரெங்கும் போடப்படும் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சிமெண்ட் சாலைகளைப் போடச் செய்தது எங்கள் ஆட்சியில்தான்...
பத்திரப்பதிவு அலுவலகம் அமைய இடம் வாங்கிக் கொடுத்தது... துணை மின் நிலையத்தை காயல்பட்டினத்தில் அமைக்க அன்றைய அமைச்சர் கீதாஜீவன் மூலம் பல முயற்சிகள் மேற்கொண்டது அனைத்தும் நாங்கள்தான்...
பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஊர் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 116 பேரை, இரவோடு இரவாக விடுதலை செய்தது திமுக அரசுதான்...
இத்தனையையும் செய்த காரணத்தால்தான் துணைத்தலைவராக எங்கள் கட்சியைச் சார்ந்த மும்பை முகைதீன் தேர்வு செய்யப்பட்டார்... போட்டி போட்டவர்கள் பெற்ற ஓட்டுகளோ மிகவும் சொற்பமே...
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, பி.கே.டி.உமர், நகர்மன்ற உறுப்பினர் ஜமால், நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு ஆகியோர், திமுகவின் சாதனைகளாகவும், எதிர்க்கட்சிகளின் தவறுகளாகவும் பல அம்சங்களை விளக்கிப் பேசியதோடு, உள்ளாட்சித் தேர்தலையொட்டி கட்சியின் நடவடிக்கைகளையும் விளக்கிப் பேசினர்.
“நான் தேர்தலில் போட்டியிட்டது என்னவோ சுயேட்சையாகத்தான்... ஆனால் இவன் திமுக காரன் என்றுதான் எங்கள் நெற்றியிலேயே ஒட்டியிருக்கிறதே...? அதனால்தான், என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சொற்ப வாக்குகளைப் பெற்றிருக்க, நான் ஐநூறுக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன்...” என்றார் நகர்மன்ற உறுப்பினர் ஜமால்.
பின்னர், திமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி உரையாற்றினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக படாத பாடுபட்டோம்... எங்கள் சொந்தத் தொகுதியான தூத்துக்குடியிலேயே நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில்... ஏன், தமிழகம் முழுக்க வெற்றி வாய்ப்பு பறிபோன நிலையிலும், ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு வாக்களித்து, இந்த மாவட்டத்தின் மானத்தைக் காப்பாற்றியது இந்த காயல்பட்டினம் நகர மக்களே...
எனவே, யாரும் எதையும் சொல்லட்டும்! அதற்கெல்லாம் கவலைப்படத் தேவையில்லை... காயல்பட்டினம் என்றும் கலைஞர்பட்டினம்தான்! அப்படிப்பட்ட இந்த ஊர் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டுதான், நாங்கள் போட்டியிட நினைத்தும், கட்சி ரீதியாக காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தோம்...
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
பின்னர், திமுக தலைமைக்கழக பேச்சாளரும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.பி.ராஜன் உரையாற்றினார்.
அதிமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரையிலான அதன் நடவடிக்கைகள், தேர்தல் பரப்புரையின்போது தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு நேர்மாறான செயல்பாடுகள் என பல அம்சங்களை அவர் விளக்கிப் பேசியதுடன், விலைவாசி உயர்வு குறித்து விரிவாகப் பேசினார்.
அதுவரை சாரலாகப் பெய்துகொண்டிருந்த மழை திடீரென கனமழையானது. இருந்தபோதிலும், மேடையிலிருந்தவர்கள் குடை பிடித்த நிலையிலும், கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் ஆங்காங்கே ஓரங்களில் நின்றிருந்த நிலையிலும் கூட்டம் தொடர்ந்தது.
இரவு 10.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், ஜெ.ஜெயக்குமார் ரூபன், சி.எஸ்.ராஜா, கல்யாண சுந்தரம், காதர் சாஹிப், ராஜ்மோகன், குழந்தைவேலு, ஏ.கதிரவன், முன்னா அகமது, ஹாஜி, தீன், முகம்மது முகைதீன், மொகுதூம், மரைக்கார், முகைதீன், அப்துல்லாஹ் சாகிப், குத்புத்தீன், மொகுதூம் நெய்னா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், அஜ்வாத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். |