காயல்பட்டினத்தில், பெரிய நெசவுத்தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து, ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி - நெசவு ஜமாஅத் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செய்திகளும், அச்செய்திகளையொட்டி வாசகர்கள் பலரின் கருத்துக்களும், காயல்பட்டணம்.காம் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதைப் பார்வையிட்டோம்.
கருத்துப்பகுதியில் பலர் தெரிவிப்பது போல, நெசவு ஜமாஅத்தினர் நமதூரில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்துவதை ஒருபோதும் எதிர்ப்பவர்களல்லர் என்றும், பூர்விகக் குடியிருப்பான நெசவுத் தெருவை ஒருவழிப்பாதையாக்க முயல்வதை மட்டுமே எதிர்க்கிறோம் என்பதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். நாங்கள் தெரிவிக்க விரும்புவது யாதெனில், இந்த ஒருவழிப்பாதையை பெரிய நெசவுத்தெரு வழியாக அல்லாமல், ஏற்கனவே பலரால் அறிவுறுத்தப்பட்டபடி மாற்று வழியில் அமுல்படுத்த வேண்டுகிறோம்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தீபக் டாமோர் அவர்கள், காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆறுமுகநேரி காவல்துறையை ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதின் பேரில், கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்ட ஆய்வறிக்கையில், காயல்பட்டினம் மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இப்பரிந்துரை, 17.06.2008 தேதியில் வெளியான தினத்தந்தி நாளிதழின் நெல்லை பதிப்பில் செய்தியாக வெளிவந்துள்ளது.
மெயின் ரோட்டில் அரசு இடத்தில் தற்போது கட்டிடங்களைக் கட்டியிருப்பவர்கள் அல்லது ரோட்டை அகலப்படுத்த அரசு கேட்கும் இடங்களுக்கு உரிமைக்காரர்கள்தான் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சுயநலத்துடன் பெரிய நெசவுத்தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம்.
அடுத்து, 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காயல்பட்டினம் பேரூராட்சியின் நிர்வாக அதிகாரியாக இருந்த அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று வழிப்பாதை திட்டத்தின் ஆவணப் பரிந்துரையும் நிறைவேற்றத் தகுந்ததாகும் என்று கருதுகிறோம்.
ஆக, முற்காலங்களில் இதுபோல் அறிவுறுத்தப்பட்ட எந்தப் பரிந்துரையையும் கருத்திற்கொள்ளாமல், நமதூரிலுள்ள சில அமைப்புகள் மற்றும் ஊரின் முக்கியஸ்தர்கள் எல்லாம் சேர்ந்து, எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், எங்கள் பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதை நாங்கள் மிகுந்த வேதனையுடன் கண்டிக்கிறோம். இதுகுறித்து எங்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் இந்த அறிக்கை மூலம் பதிவு செய்கிறோம்.
கடந்த 19.08.2009, 11.06.2010, 27.11.2011 ஆகிய தேதிகளில், நமதூரின் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அதிகாரிகள் ஒரு வழிப்பாதைக்கான பேருந்து போக்குவரத்து ஒத்திகையை எங்கள் பெரிய நெசவுத்தெரு வழியாக மேற்கொண்டனர். ஆனால் இதுகுறித்த எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு (நெசவு ஜமாஅத்தாருக்கு) வரவில்லை.
27.11.2011 அன்று, எங்கள் பெரிய நெசவுத் தெருவையும் உள்ளடக்கிய 11ஆவது வார்டின் உறுப்பினர் கூட அதில் கலந்துகொள்ளாத நிலையில், இதர உறுப்பினர்கள் பலரையும், எங்கள் பெரிய நெசவுத் தெருவைச் சாராத பொதுமக்கள் சிலரை முன்வைத்தே, திருச்செந்தூர் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) பொற்கொடி அவர்களை வைத்து ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்.
“ஊரின் பொதுநலன் கருதி... பொதுநலன் கருதி...” என்று தொடர்ந்து கூறுபவர்கள், எங்கள் தெருவில் நடக்கும் ஒருவழிப்பாதை எங்களுக்குத் தெரிவிக்கப்படாமலேயே இன்று வரை மர்மமாக நடத்தப்படுவதை அங்கீகரிக்கிறார்களா? இந்திய ஜனநாயக நாட்டில், எங்கள் தெருவை முன்னிறுத்தி செய்யப்படும் ஒரு திட்டத்தில் எங்களை (நெசவு ஜமாஅத்தார்களை) அணுகாது, பிற தெரு மக்களைக் கொண்டு ஒருதலைப்பட்சமாகவே காய் நகர்த்தப்பட்டு வருகிறது. இந்தப் போக்கை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எங்களின் பெரிய நெசவுத்தெரு பூர்விகக் குடியிருப்பே! அது பேருந்து போக்குவரத்திற்கு எக்காலமும் உகந்தது இல்லை. பின்வரும் காரணங்களினால் ஒருவழிப்பாதை போக்குவரத்து இத்தெருவிற்கு ஆபத்தாக இருப்பதையும், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதையும் தங்கள் கவனத்திற்கு அறியத்தருகிறோம்:-
*** ஒருவழியாக்கப்பட்ட பாதையில் எல்.கே.துவக்கப்பள்ளி, மேனிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகள் உள்ளன. அனுதினமும் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்பாதையைக் கடந்து செல்கின்றனர்.
*** பொது மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை தனியாக நடத்துவதற்கு இடவசதி இல்லாததால் எங்களுடைய திருமண மற்றும் சுப காரியங்களை இத்தெருவில்தான் பல்லாண்டு காலமாக நாங்கள் நடத்தி வருகிறோம்.
*** குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லாததால், அதற்கும் இத்தெருவைத்தான் எமது குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர்.
*** மூன்று திருப்பங்களைக் கொண்ட ஆபத்தான வளைவுகள் இத்தெருவையொட்டி உள்ளது.
*** முடுக்கு மற்றும் சந்து வசதி கொண்ட அமைப்பில் இத்தெருவில் கிடையாது.
*** மேலே தொங்கும் மின் கம்பிகள் அறுந்து விழும் ஆபத்தும் உள்ளது.
மேலும் எங்கள் ஜமாஅத்திற்குட்பட்ட சின்ன நெசவுத்தெரு ஏற்கனவே பேருந்து போக்குவரத்திற்கான சாலையாகத்தான் உள்ளது. எனவே, இந்த வலைதளத்தில் பல அன்பர்கள் கருத்து தெரிவித்துள்ள படி, கே.டி.எம். தெரு மக்களைப் போல நாங்களும் ஊர் நலனுக்காக தியாகம் செய்துகொண்டுதான் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
எங்கள் சின்ன நெசவுத் தெரு போன்றே துவக்கத்தில் கே.டி.எம். தெரு, மெயின் பஜார் சாலை, ஹாஜியப்பா தைக்கா தெரு ஆகியவைகளும் ஒரே மாதிரியான அகலமுள்ள சாலைகளாக இருந்தன. இச்சாலைகளை காலப்போக்கில் தனிநபர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்து, கட்டிடங்களையும், கடைகளையும் உருவாக்கியுள்ள காரணத்தால்தான் சின்ன நெசவுத் தெரு தவிர்த்து மற்ற சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆக, இந்தப் போக்குவரத்து நெருக்கடி பொது நிலத்தை அபகரித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களால்தான் ஏற்பட்டுள்ளது என்பதை உணரலாம்.
ஆகையால், எங்கள் தெருவை ஒருவழிப்பாதையாக்கும் திட்டத்தைத் தவிர்த்து, திரு.தீபக் டமோர் உத்தரவின்படி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றியோ
அல்லது
1990இல் காயல்பட்டினம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி அ.மு.செய்யது முஹம்மது அவர்கள் வழங்கிய மாற்று ஒருவழிப்பாதை திட்டத்தையோ பரிசீலித்து, அதன்படி செயலாற்றுமாறு அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்வதுடன், இத்திட்டத்தை ஆதரிக்குமாறு ஊர் மக்களையும் நாங்கள் அன்பொழுக கேட்டுக்கொள்கிறோம்.
அனைவருக்கும் நன்மையான காரியங்கள் நடந்தேற வல்ல ரஹ்மானிடம் நாம் யாவரும் பிரார்த்திப்போமாக, ஆமீன்.
இவண்,
பெரிய நெசவு ஜமாஅத் சார்பாக,
-ஒப்பம்-
(பி.எம்.ஏ.ஜின்னா,
191/52, பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம்.)
இவ்வாறு, ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி - நெசவு ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அப்பாஸ்,
நெசவுத்தெரு, காயல்பட்டினம். |