காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடராக நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, 15.11.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானமியற்றப்பட்டுள்ளது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நகரிலுள்ள உணவக வணிகர்களுக்கு விழிப்புணர்வேற்படுத்தி, அறிவுரை வழங்கும் சிறப்புக் கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கில், 08.12.2011 அன்று மதியம் 02.30 மணிக்கு நடத்தப்பட்டது.
நகர்மன்ற ஆணையர் உரை:
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தின் நோக்கம் குறித்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கண்ணையா அறிமுகவுரையாற்றினார்.
மறு சுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உங்களுக்கு விளக்கி, அவற்றை முற்றிலுமாகத் தவிர்த்திடுமாறு அறிவுறுத்தவும், விதிமீறல் செய்வோர் மீதான நடவடிக்கைகள் குறித்து விளக்கவுமே இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று அப்போது அவர் தெரிவித்தார்.
நகர்மன்றத் தலைவர் உரை:
அதனைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா பின்வருமாறு விழிப்புணர்வுரையாற்றினார்:-
எல்லா புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!
நல்ல திட்டமானது சிறப்பாக செயல்பட ஒன்றிணைந்து செயலாற்றும் உன்னத நோக்கத்துடன் வருகை தந்திருக்கின்ற உங்களனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!
நம்மை எதிர்நோக்கும் பேராபத்து...
நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஆபத்து - ஆபத்து என்றால் அப்படிப்பட்டது, இப்படிப்பட்டது என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாத மிகப்பெரிய ஆபத்தான புவி வெப்பமடைதல் என்ற ஆபத்தில் இருக்கின்றோம்…
நம் சந்ததிகளின் நலமான வாழ்வைக் கருத்திற்கொண்டு, நம்மை பயமுறுத்தும் இந்த ஆபத்தைத் தடுப்பதில் இயன்றளவுக்கு நாமளிக்கும் பங்களிப்புதான், இந்த மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்புத் திட்டம்...
பாதுகாப்பான பூமியே நம் மக்களுக்கு நாம் வழங்கும் தலைசிறந்த சொத்து...
நம் பிள்ளைகளுக்கு பணம், பொருள், வீடு என்று செல்வத்தை சேர்த்து வைப்பது போல அவர்கள் சந்தோஷமாக வாழ, ஆரோக்கியமாக வளர நாம் பாதுகாத்து பத்திரமாக அவர்கள் கையில் கொடுக்க வேண்டிய முக்கியமான சொத்து நம் பூமிதான்...
அந்த பூமிக்கு எந்த சேதமும் ஏற்படாமல், எந்த மாசும் பாதிக்காமல் அடுத்த தலைமுறையினராகிய நம் பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பும், கடமையும் இன்றைய தலைமுறையாகிய நம்மிடம்தான் இருக்கின்றது...
காகிதப் பை தயாரிப்பு...
பேராபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைசெய்யும் தீர்மானத்தை நமது நகராட்சியில் கொண்டுவர வேண்டும் என்று, 28.04.2010 அன்று ஜலாலியா அரங்கில் எமது "ரஃபியாஸ் ரோஸெரி" பள்ளி சார்பாக 2 நாட்களாக நடத்தப்பட்ட 'காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி முகாமில்' பேசினேன்... பின்னர், அதுகுறித்து முன்னாள் நகர்மன்ற தலைவர் அவர்களிடமும் கோரிக்கை வைத்தேன்... ஆனால் நமது மாவட்டத்தில் இத்திட்டமானது நமது மாவட்ட ஆட்சியர் திரு.ஆஷிஷ் குமார் அவர்களின் நல்ல முயற்சியில் தற்போது செயல்படத் துவங்கியுள்ளது... இத்திட்டம் அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை...
தனிமனித மாற்றமே சமூக மாற்றத்தைக் கொணரும்...
சட்டங்கள், கட்டுப்பாடுகள், அபராதங்கள் இவைகளால் கொண்டுவர முடியாத மாற்றங்களை கூட ஒவ்வொரு தனிமனிதனுடைய மன மாற்றங்களால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்பதுதான் என்னுடைய கருத்து... ஒவ்வொரு மனிதனும் தன்னைதானே மாற்றிக் கொண்டால் சமூகம் முழுமையான மாற்றமடையும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்... இத்தகைய சிறப்பான மாற்றத்தை கொண்டுவர நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்யவேண்டும்... ஒத்துழைக்க வேண்டும்.., ஒண்றினைந்து செயல்பட வேண்டும்...
*** இதெல்லாம் எதற்காக என்றால், நாம் பிறந்த மண்ணையும், நாம் பெற்றெடுத்த மக்களையும் காப்பதற்காக...
*** நம் பிள்ளைகளுக்கு நாம் சேர்த்து வைத்து செல்லப்போவது சொத்தா? சுகமா? என்று தீர்மானிப்பதற்காக...
*** எதிர்காலத்தில் இயற்கையையே புரட்டிபோட்டு நமக்கு நாமே புதைகுழிகளை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக...
*** மொத்தத்தில் மனித இனத்தை பேரழிவில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதுதான் இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தின் அடிப்படை நோக்கம்! இந்த நன்னோக்கம் வெற்றிபெற உங்களுடைய ஆதரவை எதிர்பார்க்கிறேன்...
கலப்படமற்ற - தரமான உணவுப் பொருட்கள் விற்பனை...
டீக்கடைகளிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி தரமான பொருட்களை பயன்படுத்துங்கள்! கலர்களை பயன்படுத்த வேண்டாம்! கலப்படம்தான என்று அறியாமலேயே அறியாதவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்... கலப்பட உணவுப் பொருட்களால் எத்தகைய பாதிப்புகள் வரும் என்பது நமக்கு தெரிந்ததுதான்... அந்தப் பொருட்களை யாரும் சாப்பிடக்கூடாது... இதுபோன்றவற்றைச் செய்வதுதான் நீங்கள் இத்திட்டத்திற்குத் தரும் ஆதரவாக அமையும்.
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உரையாற்றினார்.
துணைத்தலைவர் உரை:
அவரைத் தொடர்ந்து, நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் வாழ்த்துரை வழங்கினார்.
இத்திட்டம் சிறப்புற செயல்வடிவம் பெற்று, நம் நகரில் பாதுகாப்பான சுற்றுச்சூழல் அமைந்திட நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என அவர் தனது சுருக்கவுரையில் தெரிவித்தார்.
சுகாதார ஆய்வாளர் உரை:
பின்னர், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், பல்வேறு தலைப்புகளில் தேனீர் வணிகர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டதிட்டங்கள் குறித்து முறையாக விளக்கினார்.
நேற்று... இன்று.... நாளை.....
ப்ளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு என்றால், மறு சுழற்சி செய்ய இயலாத ப்ளாஸ்டிக் பொருட்களை மட்டும்தான் என்பதை முதலில் அனைவரும் கவனத்திற்கொள்ள வேண்டும்...
ப்ளாஸ்டிக் கேரி பேக் போன்றவற்றை விற்கக் கூடாது என்று வெறுமனே தடை மட்டும் போடுவதை விட, அதற்கிணையான காகிதப் பைகள் நகர்மன்றத் தலைவர் அவர்கள் கூறியது போல பயன்படுத்தப்பட வேண்டும்...
நமது புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டமே ப்ளாஸ்டிக் ஒழிப்புக்கான அவசரக் கூட்டமாகத்தான் நடைபெற்றுள்ளது. முதல் கூட்டமே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கூட்டமாக நடந்துள்ளதால், அது நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஓர் அம்சமாகும்...
இன்று, நீங்கள் விற்பனை செய்யும் தேனீர் கூட ப்ளாஸ்டிக் கவர்களில் ஊற்றி பார்சல் டீயாக வழங்கப்படுகிறது... ஒரு ப்ளாஸ்டிக் கேரி பேக்கில் பொருட்களை வாங்கிச் செல்லும் ஒருவர், தனக்கான கொடிய புற்றுநோயை விலை கொடுத்து கையில் எடுத்துச் செல்கிறார்... காரணம், அந்தப் பையிலுள்ள வேதிப்பொருட்கள், அதில் போடப்பட்ட சூடான உணவுப் பொருளுடன் நொடிப்பொழுதில் கலந்து, வேதியல் மாற்றமடைந்து, நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது...
ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை அவமானமாகக் கருத வேண்டும்...
அடுத்து, பொதுமக்கள் இந்த மறு சுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை - ஏன், அவற்றை கையில் கொண்டு செல்வதையே பொதுமக்கள் அவமானமாகப் பார்க்கும் நிலை ஏற்பட வேண்டும்... அவ்வாறு நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் வெட்கத்திலேயே தங்கள் செய்கைகளை மாற்றிக்கொள்வார்கள்...
இந்த ப்ளாஸ்டிக் பொருட்களால் தலைவர் அவர்கள் சொன்னதைப் போல புவி வெப்பமயமாகிறது... கால்நடைகள் அக்கழிவுகளை உட்கொள்வதால் இறப்பிற்குள்ளாவதை நாம் அடிக்கடி நாளிதழ்கள் வாயிலாக அறிகிறோம்...
கழிவுகளை களஞ்சியமாக்குங்கள்!
நீங்கள் வெளியிடும் கழிவுகளைக் கூட வருமானமாக்கலாம்... உங்கள் கடைகளில் சேரும் பால் மற்றும் எண்ணெய் கவர்களை அவ்வப்போது குப்பையில் கொட்டிவிடாமல், அவற்றை தனிப்பையில் பாதுகாத்து வைத்து, விற்பனை செய்யலாம்... இதன்மூலம் உங்களுக்கு வருமானமும் கிடைக்கும்...
தேனீர் தயாரித்த பின்னர், அதன் சக்கைகளை கீழே போட்டுவிடாமல் சேகரித்து வைத்து, அதில் வேறெந்த ப்ளாஸ்டிக் பொருட்களும் கலக்காத வண்ணம் பாதுகாத்து, ஒரு பெரிய குழி தோண்டி அதில் கொட்டி வந்தால், நாளடைவில் அது மதிப்புமிக்க உரமாகிவிடும்... அதைக் காசாக்கலாம்... உங்களுக்கு அதைச் செய்வதில் சிரமம் இருந்தால், நான் உங்களுக்கு ஒரு யோசனை தருகிறேன்... ஒரு பணியாளரை நான் உங்களுக்காக நியமித்துத் தருகிறேன்... அவருக்கு நீங்கள் தினமும் ஒரு ஐந்து ரூபாய் மட்டும் வழங்கினாலே போதும்... நீங்கள் சுத்தமாக சேகரித்து வைத்த கழிவுகளை அவர் பெற்றுச் சென்று, அவற்றை உரமாக்குவார்... இந்த ஊரில் 20 கடைகள் இருக்கிறதென்றால், ஒரு கடையில் ரூபாய் ஐந்து வீதம் நாளொன்றுக்கு அந்த ஊழியரால் 200 ரூபாய் பெற முடியும்... மாதத்திற்கு ரூபாய் ஆறாயிரம் ஆகிறது... ஒருவருக்கு இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது...
நம்மால் முடியும்...
முதலில், இதை எப்படி நாம் செய்வது என்று யோசித்துக்கொண்டிராமல், வணிகர்களும், பொதுமக்களும் எங்களால் நிச்சயம் முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும்...
மழை நீரை மண்ணில் சேமிப்போம்! ப்ளாஸ்டிக்கை வீட்டில் சேமிப்போம்!!
அடுத்து ஒரு உலகப்போர் நடந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இன்றே நாம் மழை நீரை மண்ணில் சேகரிக்க வேண்டும்... அதுபோல, ப்ளாஸ்டிக் பொருட்களை அதற்கென தனியொரு சேமிப்புப் பையை வைத்து, அதில் சேகரித்து, நீங்கள் கழிக்கும் குப்பைகளை மக்கும் குப்பைகள் என்றும், மக்காத குப்பைகள் என்றும் தனித்தனியே பிரித்தெடுத்து வழங்கினால் மிகவும் பாதுகாப்பாக அது அமையும்...
கடைகளை சுத்தமாக வையுங்கள்!
அடுத்து, உங்கள் தேனீர் விற்பனைக் கடை, ஹோட்டல் போன்ற கடைகளை மிகவும் சுத்தமாக நீங்கள் பராமரித்தேயாக வேண்டும்...
*** அக்கட்டிடங்களில் நூலாம்படை (ஒட்டடை) இருக்கக் கூடாது...
*** குறித்த கால அளவுப்படி முறையாக கட்டிட சுவர்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டிருக்க வேண்டும்...
*** உணவகங்களில் பரிமாறப்படும் குடிநீர் நன்கு கொதிக்க வைத்து, ஆற வைக்கப்பட்ட நீராகத்தான் இருக்க வேண்டும்...
*** உங்கள் வணிக கட்டிடங்களில் மேல் நிலை நீர்த்தொட்டி (வாட்டர் டேங்க்) இருந்தால், அதை அவ்வப்போது துப்புரவு செய்தேயாக வேண்டும்...
*** கடை, கட்டிடம், தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்யப்பட்டதற்கு பதிவேடுகள் வைத்திருக்க வேண்டும்...
இவற்றை செய்தாலே உங்கள் கடை சுத்தமாக இருக்கும்... அங்கு வந்து உணவருந்த வருவோர் கூடுதலாக சில நிமிடங்கள் அமர்ந்து, ஒன்றுக்கு இரண்டாக பொருட்களை வாங்கி உட்கொள்வர்...
நடவடிக்கை...
இந்த மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்கள் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்படுகிறது... அதன் பின்னர் அதை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ, அதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் நிலையுள்ளது...
முன்பு போல ஒரு வழக்கு என்றால் பல ஆண்டுகள் செல்லும் என்ற நிலை தற்போது இல்லை... இந்த சுற்றுச்சூழல் மாசுகளைத் தடுக்கும் பொருட்டு, இது தொடர்பான வழக்குகள் 40 முதல் 60 தினங்களுக்குள் விசாரிக்கப்படுகிறது... கலப்பட உணவுப்பொருட்களை விற்கும் குற்றவாளிகளுக்குத் தண்டனையாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது...
தற்போது உங்களுக்கு இந்த அறிவுரை அன்போடு வழங்கப்படுகிறது... அதே நேரத்தில், ஆய்வு என நாங்கள் வரும்போது இதே போன்று அன்பாக பேச வாய்ப்பிருக்காது! அப்போது உங்கள் கடைகளில் மேற்படி சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் குறையுடனிருந்தால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அன்புடன் அறியத் தருகிறேன். இதற்கு முன் எப்படி இருந்தது என்பது குறித்து நான் ஆராயப்போவதில்லை... எனது பணிக்காலத்தில் இதுபோன்ற குறைகள் இருக்கக் கூடாது என்பதில் நான் தீவிரமாக உள்ளேன் என்பதை மட்டும் உங்களிடம் பதிவு செய்ய விரும்புகிறேன்...
இவ்வாறு நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன் தெரிவித்தார்.
கேள்வி நேரம்:
பின்னர், தேனீர் வணிகர்கள் பின்வருமாறு தமது சந்தேகங்களைக் கேட்டனர்:-
*** நாங்கள் மட்டும் சரியானால் போதுமா...? புரோட்டா வாங்க வரும் ஒரு வாடிக்கையாளர் அதற்கான சால்னாவுக்கென தனி பாத்திரம் கொண்டு வர வேண்டுமே...? அவர்கள் கவரில் ஊற்றிக் கேட்பதால்தானே நாங்கள் வழங்குகிறோம்...??
*** எல்லா கடைக்காரர்களும் இம்முறைக்குக் கட்டுப்படுவார்களா...? நாங்கள் ஒரு சிலர் மட்டும் கடைப்பிடித்து, வேறு சில வணிகர்கள் அதைக் கடைப்பிடிக்காமல் ப்ளாஸ்டிக் பைகளில் உணவுப்பொருட்களை வழங்கினால், வாடிக்கையாளர்கள் அவர்களிடம் சென்று விடுவார்களே...? இதனால் எங்கள் வணிகம் பாதிக்கப்படாதா...??
*** முன்பெல்லாம் மக்களுக்கு நேரம் இருந்தது... பொறுமையாக தமது இல்லங்களிலிருந்து பாத்திரங்களைக் கொண்டு வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்... ஆனால், இன்று அவசர உலகத்தில், ஒரு போன் கால் மூலம் வீட்டிலிருந்து உத்தரவு வரும்போது, பாத்திரத்தை எடுப்பதற்காக ஆண்மகன் தனது வீட்டிற்கு மறுபடி செல்வாரா...? நின்ற இடத்திலேயே காரியத்தை முடிக்கவல்லவா நாடுகின்றனர்...? எனவே, கேரி பைகளின் விலைக்கு இணையாக ஒழுகாத காகிதத்தில் மாற்றுப்பொருள் உருவாக்கித் தரலாமே...?
இவ்வாறு அவர்களின் கேள்விகள் அமைந்திருந்தது.
சுகாதார ஆய்வாளர் விளக்கம்:
சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன் அவற்றுக்கு பின்வருமாறு விளக்கமளித்தார்:-
*** இனி நமதூரில் எந்த ஒரு வணிகரும் மறு சுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது முற்றிலுமாக தடை செய்யப்படும் என்பதால், ஏதோ ஒரு கடையில் அதை வைத்து விற்பனை செய்வார் என்றோ, வாடிக்கையாளர்கள் அங்கு சென்று விடுவார்கள் என்றோ அச்சப்படத் தேவையில்லை... ஒருவேளை அப்படி யாரேனும் ப்ளாஸ்டிக் பைகளில் பொருட்களை வைத்துக்கொடுத்தால், எங்களுக்கு ஒரேயொரு தொலைபேசி அழைப்பு தாருங்கள்... நாங்கள் உங்களைக் காண்பிக்காமலேயே அங்கு நேரடியாகச் சென்று உரிய நடவடிக்கையை கடுமையாக எடுக்கிறோம்...
*** ப்ளாஸ்டிக் கேரி பைகளுக்கு மாற்றாக ஒழுகாத காகித உறைகளைப் பயன்படுத்தலாம்தான்... அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்... துவக்கத்தில் அது கொஞ்சம் விலை கூடுதலாகத்தான் இருக்கும்... உறைகளில் உணவுப்பொருட்களைக் கேட்கும் வாடிக்கையாளரிடம் அதற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்... அப்பொருட்களின் பயன்பாடு அதிகமானால், அதன் விலை தானாகக் குறையும்... அப்போது, நீங்கள் உறைக்கென வாடிக்கையாளரிடம் கட்டணம் பெறுவது கூட தேவையற்றதாகிவிடும்!
இவ்வாறு சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன் விளக்கமளித்தார்.
இறுதியாக, கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த தேனீர் வணிகர்கள் அனைவருக்கும் காகிதக் கோப்பையில் தேனீர் வழங்கப்பட்டது. நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
நகரின் தேனீர் வணிகர்கள், உணவுப்பொருள் வணிகர்களும், நகர்மன்ற உறுப்பினர்களான முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஹைரிய்யா, பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். |