காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடராக நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, 15.11.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானமியற்றப்பட்டுள்ளது.
பின்னர், 08.12.2011 அன்று மதியம் 02.30 மணிக்கு, நகரிலுள்ள உணவக வணிகர்களுக்கு விழிப்புணர்வேற்படுத்தி, அறிவுரை வழங்கும் சிறப்புக் கூட்டம், நகராட்சி கூட்ட அரங்கில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மறுசுழற்சி செய்யவியலாத ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பொருட்டு, மறுநாள் 09.12.2011 அன்று மாலை 04.00 மணிக்கு, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கண்ணையா, சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன், நகரப் பிரமுகர் ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களான முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஹைரிய்யா, பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக பின்வருமாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது:-
என்னுடைய தாய்நாடு இந்தியா!
இந்தியர்கள் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள்!
என்னுடைய தாய்திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்!
என்னுடைய தாய்திருநாட்டில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி, அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நான் அரும்பாடுபடுவேன்!
மேலும் நான் இனிவரும் காலங்களில் மனிதர்களுக்கு பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க நான் அரும்பாடுபடுவேன்!
மேலும் நான் இனி வரும் காலங்களில் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியாக உறுதி கூறுகிறேன்!
நான் இந்த விழ்ப்புணர்வு பேரணியில் கலந்து கொள்வதை பெருமையாக கருதுகிறேன்!
இவ்வாறு உறுதிமொழி வாசகம் அமைந்திருந்தது.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா உறுதிமொழியை முன்மொழிய, அனைத்துப் பள்ளி மாணவர்களும் அதனை வழிமொழிந்தனர். பின்னர், அவர் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.
பேரணியில் பின்வரும் முழக்கங்களை முழங்கியவாறு மாணவர்கள் வீதிகள் வழியாக சென்றனர்:-
தடுத்திடுவோம் தடுத்திடுவோம்!
பிளாஸ்டிக் உபயோகத்தை தடுத்திடுவோம்!!
நம்மால் முடியும் நம்மால் முடியும்!
பிளாஸ்டிக்கை ஒழிக்க நம்மால் முடியும்!!
பிளாஸ்டிக்கை எரிக்காதே!
கேன்சரை உருவாக்காதே!!
உருவாக்குவோம் உருவாக்குவோம்!
பிளாஸ்டிக் இல்லா காயலை உருவாக்குவோம்!!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!
நீர் வளம் காப்போம்!!
நெகிழி – நெகிழாது!
நிம்மதி கிடைக்காது!!
குடிகுடியைக் கெடுக்கும்!
பிளாஸ்டிக் எல்லாவற்றையும் கெடுக்கும்!!
நீர்வளம் காக்க!
பிளாஸ்டிக்கை வெறுப்போம்!!
பிளாஸ்டிக் உபயோகம்!
கேன்சர் உருவாக்கம்!!
இவ்வாறு முழக்க வாசகங்கள் அமைந்திருந்தது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணி மாலை 05.45 மணியளவில் நகர்மன்ற வளாகத்தை வந்தடைந்தது. இடையிடையே பொதுமக்கள் அதிகமாகத் தென்படும் இடங்களில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன் விழிப்புணர்வுரையாற்றினார்.
பேரணியின் நிறைவில் அனைத்து மாணவர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. |