காயல்பட்டினம் நகராட்சியின் 04ஆவது வார்டுக்குட்பட்ட குறுக்கத் தெரு, ஐந்தாம் வார்டுக்குட்பட்ட ஆறாம்பள்ளித் தெரு ஆகியவற்றுக்கு நடுவே அமைந்துள்ள காலி நிலத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக குப்பை மேடு உள்ளது. தரை மட்டத்திலிருந்து அந்நிலத்தில் சுற்றுவட்டாரத்திலுள்ள குடிமக்களும், இதர பொதுமக்களும் அப்பகுதியில் குப்பைகளை தொடர்ந்து கொட்டியதன் விளைவாக காலப்போக்கில் அது சுமார் 10 அடி உயரம் கொண்ட குப்பை மேடாக மாறியது.
இதனால் அப்பகுதியில் துர்வாடை தொடர்ந்து வீசியதுடன், எல்லாக் காலங்களிலும் - குறிப்பாக மழைக்காலத்தில், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது.
அதனையடுத்து, அண்மையில் நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்ட 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா மற்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் ஆகியோர், அக்குப்பை மேட்டை அகற்றித் தருவதை தமது தேர்தல் வாக்குறுதியாகவே முன்வைத்தனர்.
அதன்படி, கடந்த 22.11.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மாதாந்திர முதல் கூட்டத்தில், இவ்விரு உறுப்பினர்களும் இக்கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தினர்.
தனியார் நிலத்திலுள்ள அக்குப்பையை நகராட்சி நிர்வாகம் அகற்றத் தேவையில்லை என்று துவக்கத்தில் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும், “அதனால் ஏதேனும் சுகாதாரக் கேடு உருவானால், அப்போது நகராட்சிதானே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்? எனவே, அந்நேரத்தில் எடுக்கும் நடவடிக்கையை இப்போதே தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளலாமே...?” என உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேட்டுக்கொண்டதையடுத்து, நகராட்சியில் சார்பில் அக்குப்பை மேட்டை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா மேற்பார்வையில், 10.12.2011 அன்று (நேற்று) மாலை 05.00 மணிக்கு குப்பை அகற்றும் பணி துவங்கியது. சில மணி நேரங்களில், குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.
தற்போது, கட்டிடக் கழிவுகளை மட்டும் கொண்ட - குப்பைகளற்ற மேடாக அது காட்சியளிப்பதால், அந்த மேட்டுக்கு மவுசு கூடியுள்ளது. தமது பகுதியிலுள்ள தாழ்வான பகுதிகளுக்கு அந்த கட்டிடக் கழிவுகளைத் தருமாறு, 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜராவுக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. யாருக்கு அதனை வழங்குவது என்று முடிவெடுக்க இயலாமல் அவர் திணறி வருகிறார்.
அப்பகுதியிலுள்ள இரு குடும்பத்தினருக்கிடையே இக்குப்பை மேடு அமைந்துள்ள நில உரிமை குறித்து கருத்து வேறுபாடு இருந்து வருவதால், நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அவ்வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பாகும் வரை அக்குப்பை மேட்டை அகற்றி, தமது கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு, அந்நிலத்திற்கு உரிமை கொண்டாடும் அவ்விரு சாராரிடமும், 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா முன் அனுமதி பெற்றதன் அடிப்படையிலேயே இக்கோரிக்கை நகர்மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகளிடத்திலும், நகர்மன்றக் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |