முஸ்லிம் நிர்வாகத்தில் பணியாற்றியதை பெருமையாகக் கருதுவதாக, எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் அண்மையில் பணி ஓய்வுபெற்றார். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 07.12.2011 அன்று மாலை 04.30 மணிக்கு அவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் ஹாஜி அஹ்மத் முஸ்தஃபா, ஆட்சிக்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, எல்.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் வாழ்த்துரை:
பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, பணி ஓய்வுபெற்றுள்ள உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜின் பணிக்கால சரித்திரங்கள் குறித்து பின்வருமாறு விளக்கிப் பேசினார்:-
19.06.1984இல் நேர்காணல் செய்யப்பட்டு, 24.07.1984இல் உடற்கல்வி ஆசிரியராக பணி நியமனம் பெற்றார் திரு.ஜெபராஜ் ராஜநாயகம். அதே சமகாலத்தில்தான் தற்போது பணி செய்து கொண்டிருக்கும் உடற்கல்வி ஆசிரியர் திரு.வேலாயுதம் அவர்களும் பணி நியமனம் பெற்றார்.
விசித்திர நேர்காணல்...
சாதாரணமாக ஒரு பாட ஆசிரியரை நேர்காணல் செய்வதானால், வகுப்பில் பாடம் நடத்தச் சொல்லி ஆய்வு செய்யலாம்... உடற்கல்வி ஆசிரியரை அப்படி செய்ய இயலாதல்லவா? எனவே, பாட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தையொதுக்கி, பள்ளி மாணவர்களை அணி சேர்த்து, விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லுமாறு அவர் பணிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் இதுபோன்று செய்யப்பட்டு, அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது. பின்னர் பள்ளி நிர்வாகத்திற்கு விருப்பம் ஏற்பட்டதன் பேரில் அவர் பணி நியமனம் பெற்றார்.
மாநில அளவில் மாணவர்களைக் கொண்டு சென்றவர்...
அவரது பணிக்காலத்தில் நமது பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை மாநில அளவில் தேர்ச்சி பெற்று விளையாடி வந்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இன்று அவர் தன் பணியை நிறைவு செய்து ஓய்வுபெறும் இந்நேரத்திலும் நம் பள்ளி மாணவர்கள் மீண்டும் மாநில அளவில் கால்பந்து விளையாடச் செல்லவுள்ளனர். இந்த சாதனைக்காக ஆசிரியர் ஜெபராஜ் அவர்களையும், இதர உடற்கல்வி ஆசிரியர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
மலரும் நினைவுகள்...
நான் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்பதற்கு முன் சாதாரண ஆசிரியராக இருந்த காலத்தில், சக ஆசிரியர்களுடன் நன்றாக கலந்துறவாடி மகிழ்வேன்... இன்று என் பொறுப்பு என்னை அவ்வாறு இருப்பதிலிருந்து சற்று விலக்கியுள்ளது. அந்நாட்களில், நாங்கள் குற்றாலம் பிக்னிக் செல்ல முடிவெடுப்போம்... ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஜோஸஃப் அவர்கள்தான் கிடாய் ஏற்பாடு செய்யும் பொறுப்பு. மற்ற ஒருங்கிணைப்புப் பணிகளை இந்த உடற்கல்வி ஆசிரியர்கள்தான் செய்வார்கள்... இன்பமயமாக இருக்கும் எங்கள் பயண அனுபவங்கள்...
என்றும் வலிமையுடன்...
இன்று ஆசிரியர் ஜெபராஜ் அவர்களுக்கு வயது 58. அரசு விதிப்படி ஓய்வுபெறும் வயது என்றாலும், அவரால் இன்னும் பல ஆண்டுகள் பணியாற்ற முடியும்... இறைவன் அதற்கான வலிமையை அவருக்கு வழங்கியிருக்கிறான்... எனவே, தான் பணி ஓய்வு பெற்றுவிட்டோம் என்று இருந்துவிடாமல், நமதூருக்குள்ளேயே இருப்பதால் ஆசிரியர் ஜெபராஜ் அவர்கள் அடிக்கடி நம் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்...
வருங்கால வாழ்வையும் பயனுள்ளதாக்க வேண்டும்...
ஆசிரியர் தனது ஓய்வுக் காலத்தை, நல்ல ஆன்மிகம், பொதுநலம் போன்ற புனிதமான பணிகளில் ஈடுபாடு காட்டுவதன் மூலம் தன் வருங்கால வாழ்வையும் பொருளுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும்...
இன்னும் பல்லாண்டுகள் அவர் நோய் நொடியின்றி வாழ்ந்து, தன் குடும்பத்திற்கும், நம் மாணவ சமுதாயத்திற்கும் என்றும் பயனுடன் திகழ வாழ்த்தி எனதுரையை நிறைவு செய்கிறேன்... நன்றி.
இவ்வாறு, தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா உரையாற்றினார்.
ஆசிரியர்கள் வாழ்த்துரை:
பின்னர், பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை, ஆசிரியர்கள் டேவிட் செல்லப்பா, அஹ்மத் ஏ.ஜே.முஸ்தஃபா, உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம், முன்னாள் மாணவர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், ஓய்வுபெறும் ஆசிரியரை வாழ்த்தி உரை நிகழ்த்தினர்.
முன்னாள் மாணவர்கள் நினைவுப்பரிசு:
அதனைத் தொடர்ந்து, பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஹாங்காங்வாழ் எம்.யு.முஹம்மத் இம்ரான் சார்பாக அவரது தந்தை ஹாஜி எஸ்.எம்.உஸைர் நினைவுப் பரிசு வழங்கினார்.
மற்றொரு முன்னாள் மாணவரான வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் ஹாங்காங்வாழ் அலீ ஃபைஸல் சார்பாக, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.எஸ்.எம்.எஸ்.அமீன் நினைவுப்பரிசு வழங்கினார்.
பள்ளியின் சார்பில் நினைவுப்பரிசு:
பின்னர், பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பள்ளி தலைவர் டாகடர் முஹம்மத் லெப்பை ஆசிரியருக்கு சால்வை அணிவிக்க, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
பள்ளி ஆசிரியர் ஜான் சிரோன்மணியும் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தங்க நாணயம் மரபுப் பரிசு:
பின்னர், பள்ளியின் மரபுப்படி, அடுத்து (2013ஆம் ஆண்டில்) ஓய்வுபெறவுள்ள தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, ஓய்வுபெறும் ஆசிரியர் ஜெபராஜுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கினார்.
ஏற்புரை:
நிறைவாக, பணி ஓய்வுபெறும் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் பின்வருமாறு ஏற்புரையாற்றினார்:-
முஸ்லிம் நிர்வாகத்தில் பணியாற்றியதை பெருமையாகக் கருதுகிறேன்...
இப்பள்ளியில் நான் பணியமர்த்தப்படும் முன், என் சமயம் சார்ந்த சில நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமுண்டு... எனினும், முஸ்லிம்கள் நிர்வகிக்கும் இப்பள்ளியில் நான் பணியாற்றியதை என் வாழ்வில் எனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதி பெருமையடைகிறேன்... என் தந்தையும் முஸ்லிம்கள் நிர்வாகத்தில்தான் பணியாற்றினார்.
எனக்கு இந்தப்பள்ளியில் செய்யப்பட்ட நேர்காணல் போல நான் எங்குமே பார்த்ததில்லை... ஓர் ஆசிரியரைத் தேர்வு செய்வதில் இத்தனை அக்கறை எடுத்துக்கொள்வதைக் கண்ணுற்றபோதே இப்பள்ளியின் தரத்தையும், மாணவாகள் கல்வி முன்னேற்றம் விஷயத்தில் இந்நிர்வாகத்திற்குள்ள ஆர்வத்தையும் நான் அறிந்துகொண்டேன்...
என்றும் நினைவில் எல்.கனி காக்கா...
இதற்கு முன் நான், மறைந்த பெருந்தகை ஏ.கே.செய்யிதஹ்மத் ஹாஜி, கே.எம்.இஸ்மத் ஹாஜி, எல்.கனி காக்கா ஆகிய மூன்று தாளாளர்களிடம் பணியாற்றியுள்ளேன். அனைவரையும் நான் மதிக்கின்றேன் என்கிறபோதிலும், எல்.கனி காக்கா அவர்களின் காலத்தை நான் பொற்காலமாகவே கருதுகிறேன்...
என்றாவது ஒரு விளையாட்டு சுற்றுப்போட்டி (tournament) நடந்தால், அதில் விளையாட மாணவர்களை ஆயத்தப்படுத்துவேன்... அதற்க்கேற்படும் செலவினங்களுக்காக மாணவர்களிடம் கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை... எனவே, இருந்தால் என் கையிலிருந்து போட்டுக்கொடுப்பேன்... அல்லது நான் நாடும் நபர் எல்.கனி காக்காதான்... அவர்களிடம் சென்று விஷயத்தைச் சொன்னதும், “எவ்வளவு செலவு?” என்று கேட்டு, ஆர்வத்துடன் தருவார்... தற்போது அப்பணியை அவரது மகன், தம்பி எல்.கே.லெப்பைத்தம்பி செய்து வருகிறார்...
என்றும் நிறையே...
சுருக்கமாகக் கூறினால், எனது பணிக்காலத்தில் இந்தப் பள்ளியைக் கொண்டு எனக்கும் எந்தக் குறையுமில்லை...
என்னைக் கொண்டும் பள்ளிக்கு எந்தக் குறையும் நேர்ந்ததில்லை... என பெருமிதத்துடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்...
நன்றிக்குரிய முன்னாள் மாணவர்கள்...
எனது அன்புக்கு என்றும் பாத்திரமான - என்னுடன் எப்போதும் நெருக்கத்துடன் பழகும் முன்னாள் மாணவர்களான பாசத்திற்குரிய தம்பி இம்ரான், அலீ ஃபைஸல் ஆகியோர், இத்தருணத்திலும் என்னை மறவாமல் நினைவுப்பரிசு வழங்கியுள்ளதை நினைத்து நான் மிகவும் மகிழ்கிறேன்... அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
அனைவருக்கும் நன்றி...
எனது பணிக்காலத்தில் எனக்கு வழிகாட்டிய நிர்வாகப் பெருமக்கள், உடன் பணியாற்றி, என்றும் அன்போடும், ஆதரவோடும் நெருங்கிப் பழகிய தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
என் பணிக்காலம் நிறைவுற்றாலும், அடிக்கடி நம் பள்ளிக்கு வருவதை வழமையாக்கிக் கொள்வேன்...
இவ்வாறு, பணி ஓய்வுபெறும் ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் உரையாற்றினார்.
குழுப்படம்:
பின்னர், பள்ளியின் நிர்வாகிகளும், அனைத்து ஆசிரியர்களும், பணி ஓய்வுபெறும் ஆசிரியருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
சூப்பர் சீனியர் மாணவர்கள் நினைவுப்பரிசு:
பின்னர், பள்ளியின் சூப்பர் சீனியர் பிரிவு மாணவர்கள் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி மரியாதை செலுத்தியதோடு, குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இல்லம் வரை சென்று...
நிறைவாக, ஆசிரியர் ஜெபராஜை சக ஆசிரியர்கள் அனைவரும், அன்று மாலை 06.30 மணியளவில், காயல்பட்டினம் ஐ.என்.டி.யு.சி. குடியிருப்பு பகுதியிலுள்ள அவரது இல்லம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர். அங்கு ஆசிரியரின் உறவினர் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
தனதில்லத்திற்கு வருகை தந்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்களுக்கு, பணி ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் சிற்றுண்டி வழங்கினார்.
அவரது இல்லத்தில் அனைவருடனும் சிறிது நேரம் உரையாடிய ஆசிரியர்களும், அலுவலர்களும் இரவு 07.30 மணிக்கு பள்ளி திரும்பினர்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெபராஜ் தொடர்பு எண்: +91 98420 44755
தகவல்:
மீராத்தம்பி,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |