குடிநீர் விநியோகம் - காயல்பட்டினத்தின் நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். தற்போது - நகருக்கு, மேல ஆத்தூரில் அமைந்துள்ள கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினசரி சுமார் 20 லட்சம் லிட்டர் (2 மில்லியன் லிட்டர்) தண்ணீர் வழங்கப்படுகிறது. அதாவது மாதத்திற்கு சுமார் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகருக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக - தண்ணீர் வழங்கும் TWAD (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) நிறுவனத்திற்கு - 1000 லிட்டருக்கு ரூபாய் 4.50 என்ற விதத்தில் - ஆண்டுக்கு சுமார் 35 லட்சம் ரூபாய் காயல்பட்டினம் நகர்மன்றம் கட்டணமாக செலுத்துகிறது. இது தினசரி சுமார் 9000 ரூபாய் ஆகும்.
நகராட்சி இணையதளத்தின் ஒரு பகுதியில் இரண்டு நாளைக்கு ஒரு முறை என்றும், மற்றொரு பகுதியில் மூன்று நாளைக்கு ஒரு முறை என்றும் நகரில் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் பார்க்கும்போது நகரில் நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
பாதாள சாக்கடைத் திட்டம் இல்லாத நகராட்சிகளில் தலைக்கு 90 லிட்டர் தண்ணீர் தினமும் விநியோகம் செய்யப்படவேண்டும் என்பது அரசின் அளவுகோள் ஆகும். இந்த அளவுகோள்படி தினமும் 36 லட்சம் லிட்டர் குடிநீர் நகரில் வினியோகிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது நகருக்கு தினமும் கிடைப்பது வெறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர்தான். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே - இரண்டாம் பைப்லைன் குடிநீர் திட்டம் காயல்பட்டினத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி - நகரின் மக்கள் தொகை - 40,500 ஆகும். தலைக்கு தினமும் 60 லிட்டர் தண்ணீர் என்ற விதத்தில் குடிநீர் விநியோகம் நகரில் நடைபெறுவதாக நகர்மன்ற இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால் நடைமுறையில் - தலைக்கு 60 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறதா என்பது சந்தேகமே.
நகரில் உள்ள குடிநீர் இணைப்புகள் எண்ணிக்கை சுமார் 8000 ஆகும். மக்கள் தொகையை கணக்கில் எடுக்கும் போது - ஒரு இணைப்புக்கு சுமார் 5 பேர் உள்ளனர் என அறியமுடிகிறது. ஆக - சராசரியாக ஒரு இணைப்புக்கு தினமும், 300 லிட்டர் தண்ணீர் (தலைக்கு 60 லிட்டர் x 5 பேர்) வழங்கப்படவேண்டும். அப்போதுதான் நகர்மன்றம் கூறும் - தலைக்கு 60 லிட்டர் தண்ணீர் என்ற கணக்கு சரியாக இருக்கும். அவ்வாறு வழங்கப்படுகிறதா?
மேலே கண்டதுபோல் நகரில் குடிநீர் விநியோகம் 4 நாட்களுக்கு ஒரு முறைதான் நடைபெறுகிறது. ஓர் இணைப்புக்கு, தண்ணீர் திறந்து விடப்படும் (ஒரு) நாளில், 1200 லிட்டர் (தினமும் 300 லிட்டர் x 4 நாட்கள் ) தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால், உண்மையிலேயே ஓர் இணைப்புக்கு 1200 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்வியே . நகர்மன்றத்தில் இதுகுறித்து - சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரித்ததில், ஒரு இணைப்புக்கு 1000 லிட்டர் தண்ணீர் தாராளமாக கிடைக்கும் என உறுதியாகக் கூறுகிறார்.
நகரில் தண்ணீர் திறந்து விடப்படும் நாளில் - தண்ணீர் சுமார் 1 மணி நேரமே திறந்து விடப்படுகிறது. நிமிடத்திற்கு 17 லிட்டர் என்ற கணக்கில் நீரை சேகரித்தால்தான் - 60 நிமிடங்களில் 1000 லிட்டர் தண்ணீர் பெற முடியும். ஒரு பெரிய குடத்தின் அளவு சுமார் 20 லிட்டர் என்பதனை கவனத்தில் வைத்துக்கொள்ளவும். உண்மையாகவே 1000 லிட்டர் தண்ணீர் ஒரு இணைப்புக்கு வழங்கப்பட்டால் - ஒவ்வொரு இணைப்புக்கும் சுமார் 50 குடம் அளவில் தண்ணீர் கிடைக்கவேண்டும். அவ்வாறு கிடைக்கிறதா?!
எவ்வளவு அளவு தண்ணீர் கிடைக்கிறது என நகரில் சிலரை விசாரித்ததில், அதிகபட்சமாக 250 லிட்டர் முதல் 300 லிட்டர் தண்ணீர் வரைதான் கிடைப்பதாகக் கூறுகின்றனர். அதாவது 4 நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில், மாதத்திற்கு 7 - 8 முறை தண்ணீர் ஒவ்வோர் இல்லத்திற்கும் வழங்கப்படுகிறது என்றால், ஒவ்வோர் இணைப்புக்கும், ஒவ்வொரு மாதமும், சுமார் 1750 - 2400 லிட்டர் அளவு தண்ணீர் மட்டுமே சராசரியாக கிடைக்கிறது.
கணக்கிட்டுப் பார்த்தால் - நகரில் 8000 இணைப்புகள் உள்ளன என்ற பட்சத்தில், ஒரு மாதத்தில் - நகரில் கூடுதலாக சுமார் 19 மில்லியன் லிட்டர் அளவு தண்ணீரே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நகருக்கு - TWAD நிறுவனத்தால் - மாதம் வழங்கப்படும் குடிநீர் அளவோ 60 மில்லியன் லிட்டர் ஆகும். அதற்குரிய கட்டணமே நகர்மன்றமும் TWAD நிறுவனத்திற்கு செலுத்துகிறது. அப்போது - சுமார் 40 மில்லியன் லிட்டர் தண்ணீரின் நிலை தான் என்ன?
TWAD நிறுவனம் - தான் நகர்மன்றதிற்கு வழங்கும் தண்ணீரை உயர்த்தி கூறுகிறதா? நகருக்கு தண்ணீர் வழங்கும் TWAD நிறுவனம் - மேல ஆத்தூரில் உள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரினை அளவிட - மீட்டர் பொருத்தி உள்ளதாக தெரிவிக்கிறது. ஆகவே - தான் வழங்குவதாக கூறும் அளவு சரியென்றே TWAD கூறுகிறது.
அப்போது பிரச்சனை எங்கிருக்க வாய்ப்புள்ளது? மேல ஆத்தூரில் இருந்து - காயல்பட்டினதிற்கு சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு - குழாய் போடப்பட்டுள்ளது. அதன் வாயிலாகவே தினமும் - தண்ணீர் நகருக்கு அனுப்பப்படுகிறது. அவ்வாறு அனுப்பப்படும்போது வழியில் தண்ணீர் திருடப்படுகிறதா?
நகருக்கு இவ்வாறு வந்து சேரும் தண்ணீரின் அளவு கணக்கிடப்படுகிறதா என நகர்மன்றத்தில் விசாரித்ததில் - மீட்டர் அறை ஒன்று, பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டதாகவும், அதன் அருகில் உள்ள நில உரிமையாளர் வழக்கு தொடர்ந்ததால் - தண்ணீர் மீட்டர் செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நகருக்கு வந்து சேரும் குடிநீரின் அளவினை - அது வந்து சேர்ந்த பின்னர், நகரில் உள்ள 19 நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் இடத்திலதான் மீட்டர் அறை விரைவில் அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் - TWAD நிறுவனம் அனுப்பும் தண்ணீர் அளவு சரியென்றும், இடையில் எங்கும் தண்ணீர் திருடப்படவில்லை என்றும் உறுதியாக கூறமுடியும்.
குடிநீரை பொருத்த வரை அது சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் பொருளாகும். TWAD நிறுவனம் - நகர்மன்றதிற்கு 1000 லிட்டருக்கு ரூபாய் 4.50 என கட்டணம் விதிக்கிறது. அதே TWAD நிறுவனம் - தொழிற்சாலைகளுக்கு வழங்கும்போது, 1000 லிட்டருக்கு ரூபாய் 15 என்ற அதிக கட்டணத்தில் விநியோகிக்கிறது. இந்த கட்டணங்கள் - கூட்டு குடிநீர் திட்டத்தில் தனது பங்கை (Proportionate Cost) வழங்கியுள்ள அமைப்புகளுக்குதான்.
தனது பங்கை வழங்காத தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் - 1000 லிட்டருக்கு ரூபாய் 60 என்ற அதிக கட்டணத்திலும், மருத்துவமனைகளுக்கு 1000 லிட்டருக்கு ரூபாய் 50 என்ற அதிக கட்டணத்திலும், கல்விசாலைகளுக்கு 1000 லிட்டருக்கு ரூபாய் 30 என்ற அதிக கட்டணத்திலும் - TWAD நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. ஆகவே - இவ்வாறு வேறுபடும் கட்டணங்களின் காரணமாக - கறுப்புச் சந்தையில் - நகர்மன்றத்தின் குடிநீருக்கு நல்ல மவுசு உண்டு.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் - குடிநீர் விநியோகம் புரியாத புதிராகவே உள்ளது. இந்த புதிருக்கான விடை - 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள இரண்டாம் பைப்லைன் குடிநீர் திட்டம் துவக்கப்படுவதற்கு முன் கிடைத்தால், புதிய திட்டம் பயனுள்ளதாகவும், எந்த குளறுபடிகள் இல்லாததாகவும் அமையும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.
|