காயல்பட்டினம் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புடையவரும், நகரில் நடைபெற்ற பல்வேறு பொதுநல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டவருமான, 32 ஆண்டுகள் பணியனுபவம் கொண்ட காவல்துறை அதிகாரி முஹம்மத் கவுஸ் கான் கோரி, 24.10.2011 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55. அன்னாரின் உடல், அவரது சொந்த ஊரான இராஜபாளையத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், பின்னர் சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
அவரது மறைவையொட்டி, 03.12.2011 சனிக்கிழமையன்று (நேற்று) இரவு 08.30 மணிக்கு காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
துவக்கமாக, கத்முல் குர்ஆன் ஓதி, மறைந்த காவல்துறை அதிகாரியின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. இந்நிகழ்வுக்கு ஜியாத் தலைமை தாங்கினார்.
பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்ட நிகழ்ச்சிக்கு மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் தலைமை தாங்கினார். மற்றொரு நிர்வாகி ஹாஜி எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஜி அஹ்மத் லெப்பை, ஹாமிதிய்யா பேராசிரியர் கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுப்) பிரிவு பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ, மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்கமாக, ‘பொதுநலப் பணிகளில் மறைந்த காவல்துறை அதிகாரி முஹம்மத் கவுஸ் கான் கோரி அவர்களின் ஈடுபாடு‘ என்ற தலைப்பில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ உரையாற்றினார். நகரில் பல்வேறு பொதுநல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டபோதெல்லாம், தனது இடைவெளியில்லாத பணிச்சுமைகளுக்கிடையிலும் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றவர்... புகாரிஷ் ஷரீஃப் அபூர்வ துஆ நிகழ்வுகளில் ஆண்டுதோறும் தவறாமல் பங்கேற்றவர்... என்று அவர் தனதுரையில் புகழ்ந்துரைத்தார்.
அடுத்து, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ உரையாற்றினார். மறைந்த காவல்துறை அதிகாரி தனது பணியின்போது செய்த சாதனைகள், அவரிடமிருந்த மார்க்கப்பற்று குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். தொழுகையை தவறாமல் நிறைவேற்றியவர்... இவ்வளவு பெரிய அதிகாரி, பெரிய வயதுடையவர் சிறுபிள்ளை போன்று தன்னிடம் வந்து, “நான் துஆக்களை மனனம் செய்ய வேண்டும்... அதற்கு எனக்கு ஒரு நூல் தாருங்களேன்...” என்று கேட்டதையும், தான் நூல் வழங்கியதையும், அந்நூலை கண்களில் ஒற்றிக்கொண்டு அவர் படிக்கத் துவங்கியதையும் அவர் தனதுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
துஆ ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், மறைந்த காவல்துறை அதிகாரியின் மகன் உள்ளிட்ட குடும்பத்தினரும், ஹாஜி எல்.எம்.இ.கைலானீ, ஹாஜி காழீ நூஹ், ஹாஜி என்.டி.ஷெய்க் மொகுதூம், ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், உள்ளிட்டவர்களும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹாஜி எம்.என்.எல்.சுலைமான் செய்திருந்தார்.
மறைந்த காவல்துறை அதிகாரி முஹம்மத் கவுஸ் கான் கோரி,
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தால், கடந்த 28.06.2009 அன்று நடத்தப்பட்ட “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதும்,
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையில், கடந்த 16.09.2009 அன்று, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம். காயல்பட்டினம் அரிமா சங்கம் இணைந்து நடத்திய ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உதவிகள் வழங்கியதும்,
கடந்த 26.09.2011 அன்று காயல்பட்டினம் வழியே கடந்து சென்ற விநாயகர் ஊர்வலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமையேற்று செய்ததும், அந்நாள் ரமழான் நோன்பு காலம் என்பதால், அருகிலிருந்த ஷெய்கு ஹுஸைன் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மஃரிப் தொழுகையிலும் பங்கேற்றதும்,
மவ்லவீ ஹாமித் பக்ரீ மன்பஈ தலைமையில் இயங்கி வரும் ஐக்கிய சமாதானப் பேரவையால் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்:
ஹாஜி M.N.L.சுலைமான்,
MNL Aero Travels,
பிரதான வீதி, காயல்பட்டினம்.
செய்தி திருத்தப்பட்டது. (04.12.2011 - 11:06hrs) |