ஹாங்காங்வாழ் காயல்பட்டினம் நகர பொதுமக்களின் கைச்சான்றுகளைப் பெற்று, CFFCயின் ஆய்வறிக்கை ஹாங்காங் இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கப்படும் என காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் 19.11.2011 அன்று மாலை 04.45 மணிக்கு, ஜனாப் எஸ்.எச்.ரியாஸ் இல்லத்தில் நடைபெற்றது.
பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி முஸ்தஃபா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார்.
பேரவைத் தலைவர் ஜனாப் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் அனைவரையம் வரவேற்றுப் பேசியதோடு, கூட்டத்தின் நோக்கம் குறித்தும் விளக்கினார்.
பேரவை பொருளாளர் வரவு-செலவு கணக்கறிக்கையை சமர்ப்பிக்க கூட்டம் அதனை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. பின்னர், கடந்த கூட்ட அறிக்கையை, பேரவை துணைத்தலைவர் ஜனாப் எம்.செய்யித் அஹ்மத் விளக்க, அதனைத் தொடர்ந்து, இதுவரை பேரவையால் நிறைவேற்றப்பட்ட செயல்திட்டங்கள், இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்த கலந்தாலோசனை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் 1 - சுற்றுச்சூழல் விஷயத்தில் அக்கறை செலுத்தல்:
“திருச்செந்தூரில் செங்கடல்” என்ற தலைப்பில் அண்மையில் தினகரன் நாளிதழில் வெளியான செய்தி குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இதுபோன்ற பத்திரிக்கை, வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகள், நமதூரில் செயல்பட்டு வரும் CFFC குழுமத்திற்கு உறுதுணையாக இருக்கும்... காயல்பட்டினம் நகராட்சியும் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்... அனைத்து பொதுநல அமைப்புகளும் இது விஷயத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீர்மானம் 2 - CFFC அறிக்கையை இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்தல்:
CFFCயின் முயற்சியால் தயாரிக்கப்பட்ட “புற்றுநோய் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆய்வறிக்கை”யில் அனேகமாக ஹாங்காங்கில் வாழும் நம் மக்களிடம் பேரவை மூலம் கைச்சான்று பெற்று, இன்ஷாஅல்லாஹ் வெகுவிரைவில் ஹாங்காங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - அதிக உறுப்பினர்கள் சேர அழைப்பு:
2011-2012 நடப்பாண்டில் நமது பேரவையில் சுமார் 88 பேர் மட்டுமே தங்களை உறுப்பினர்களாக இணைத்துள்ளனர். இது மிக மிக்க் குறைவாகும்.
எனவே, ஹாங்காங்கில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட காயலர்கள் (ஆண்கள்) தங்களை பேரவையின் உறுப்பினர்களாக பதிவு செய்து, நகர்நலப் பணிகளுக்காக தங்களது நல்லாதரவையும், ஆலோசனைகளையும், சந்தாக்களையும் தந்துதவுமாறும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
நாயனிடம் மட்டுமே நற்கூலியைப் பெற்றுத் தரும் நம் பேரவையின் நகர்நலப் பணிகளுக்கு உறுப்பினர்களால் தரப்படும் சந்தா மற்றும் நன்கொடை தொகைகள் மட்டுமே மூலாதாரம் என்பதை இக்கூட்டம் குறிப்பிட விரும்புகிறது.
தீர்மானம் 4 - விரைவில் சுற்றுலா ஏற்பாடு:
காயலர் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஜனாப் எஸ்.எச்.ரியாஸ், ஜனாப் எஸ்.ஏ.முஹம்மத் நூஹ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இறுதி செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்து இவர்கள் விரைவில் தெரிவிப்பர்.
தீர்மானம் 5 - மகளிர் பங்களிப்பு:
நமது பேரவையின் நலத்திட்டப் பணிகளுக்காக இங்கு வாழும் நமதூரைச் சார்ந்த சில பெண்கள் தாமாகவே முன்வந்து கடந்த ஆண்டு முதல் பொருளாதார பங்களிப்பு வழங்கி வருவதையும், இவ்வாண்டும் வழங்கியதையும் இக்கூட்டம் பாராட்டுகிறது.
விபத்தில் மரணமுற்ற ஒருவரின் குழந்தைகள் நலனுக்காக மகளிர் பொருளாதார பங்களிப்பு வழங்கியதை இக்கூட்டம் பாராட்டுகிறது.
தீர்மானம் 6 - விபத்தில் மரணமுற்றவரின் குழந்தைகள் நல நிதி:
விபத்தில் மரணமுற்ற ஒருவரது குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் வழங்க பேரவை முயற்சியெடுக்கும் என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 7 - நகர சுகாதாரம் குறித்து அக்கறையெடுக்க நகராட்சிக்கு வேண்டுகோள்:
நம் நகரில் சுகாதாரத்தை மேம்படுத்தி, சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைப்பதில் முதல் கவனம் செலுத்த நகராட்சி நிர்வாகத்தினர், தலைவர் மற்றும் உறுப்பினர்களை இப்பேரவை வேண்டிக்கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
துணைத்தலைவர் ஜனாப் எம்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஜனாப் எஸ்.எச்.ரியாஸ் மற்றும் சகோதரர்கள் இணைந்து சிற்றுண்டி ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்,
பொருளாளர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங்.
செய்தி திருத்தப்பட்டது. (03.12.2011 - 16:13hrs) |