காயல்பட்டினம் நகர்மன்றத்தின் - சதுக்கைத் தெருவில் ஒரு பகுதி, குறுக்கத் தெரு, குத்துக்கல் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 04ஆவது வார்டின் நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா.
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதற்காக இயக்கப்படும் லாரிகள் முறையாக வருவதில்லை என்ற குறை நீக்கப்படாமலேயே இருப்பதாகவும், இதனால் தம் பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், நகர்மன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுமக்களின் கண்டனத்திற்கு தான் ஆளாக நேருவதாகவும், கடந்த 22.11.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற மாதாந்திர கூட்டத்தில் தெரிவித்த உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, போர்க்கால அடிப்படையில் இக்குறையைப் போக்கும் பொருட்டு தான் சார்ந்துள்ள கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளையின் அனுசரணையில் மூன்று சக்கர மிதிவண்டி வாங்கி தன் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க ஆவன செய்வதாகவும், நகராட்சியின் சார்பில் ஊழியர்களை மட்டும் தருமாறும் கோரிக்கையை முன்வைத்தார்.
அதுகுறித்த விவாதத்திற்குப் பின்னர், நகராட்சி ஊழியர்களை 04ஆவது வார்டுக்கு மட்டும் அனுப்புவதால், அவர்களின் வழமையான பணிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், இதுபோன்ற திட்டங்களை தன் சார்பிலேயே ஆள் வைத்து செயல்படுத்தினால் அதுகுறித்து நகராட்சியிடம் அனுமதி கூட கேட்க வேண்டியதில்லை என்றும், எனினும் பொதுமக்களில் இத்திட்டத்திற்கு ஒத்துழைக்காதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, தான் சார்ந்துள்ள கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் சார்பில் சுமார் இருபத்து இரண்டாயிரம் ரூபாய் செலவில், குப்பை சேகரிக்கும் மூன்று சக்கர வாகனத்தை ஆயத்தம் செய்து, அதற்கென தன் பொறுப்பிலேயே ஓர் ஊழியரையும் நியமித்துள்ளார்.
அதனடிப்படையில், கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளையின் அனுசரணையில், காயல்பட்டினம் நகர்மன்ற 04ஆவது வார்டு உறுப்பினரின் குப்பை சேகரிக்கும் சுய திட்டத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, 01.12.2011 வியாழக்கிழமை (நேற்று) மாலை 05.30 மணிக்கு, காயல்பட்டினம் குறுக்கத் தெருவிலுள்ள உறுப்பினர் கே.வி.ஏ.டி. முத்து ஹாஜராவின் இல்லமான முத்து மஹால் முன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையிலும், ஹாஜி கே.வி.முஹம்மத் அப்துல் காதிர் முன்னிலையிலும் நடைபெற்றது.
எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆம் வார்டு உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நகர்மன்றத் தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, அனைவரையும் வரவேற்றுப் பேசிய நிகழ்ச்சி நெறியாளர், இச்சேவை குறித்த விபரங்களை சுருக்கமாக பொதுமக்களுக்குத் தெரிவித்தார்.
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்ற 04ஆவது வார்டு உறுப்பினரின் குப்பை சேகரிக்கும் சுய திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் பச்சைக் கொடியசைத்து, சேவையைத் துவக்கி வைத்தார்.
நிறைவாக, அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு, துஆ ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர், காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜன், அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலையில் வீடு வீடாக குப்பை சேகரிப்பு துவங்கியது.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஹாஜ்ஜா எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஹைரிய்யா, பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கிய ஷீலா, ஜமால், அஜ்வாத் அபூபக்கர், இ.எம்.சாமி, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் திருத்துவராஜ், ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை மேலாளர் ஆஷிக் செய்திருந்தார்.
இந்த குப்பை சேகரிப்புத் திட்டம் குறித்து 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா தெரிவித்துள்ளதாவது:-
*** தினமும் அதிகாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நான்காவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக குப்பை சேகரிக்கப்படும்... இதற்காக குப்பை சேகரிக்கும் ஊழியரிடம் ஒரு ஊதல் (விசில்) வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை ஊதியவாறு தம் பகுதியில் வரும்போது பொதுமக்கள் அவர்களது குப்பைகளை வண்டியில் போட வேண்டும்...
*** பொதுமக்கள் தம் இல்லங்களில் சேகரமாகும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத (ப்ளாஸ்டிக்) குப்பைகளை தனித்தனி உறைகளில் அளித்தால், மக்கும் குப்பைகளை குறிப்பிட்ட ஓரிடத்தில் கொட்டி, அதனை உரமாக்கி விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் நலத்திட்டப் பணிகளுக்கு வழங்க முடியும்...
*** இத்திட்டத்தின் கீழ் இணைவோரிடம் மாதம் ரூ.30 மட்டும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும்... உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஒரு பதிவு அட்டை வழங்கப்படும். தினமும் குப்பை சேகரிக்கப்பட்ட பின்னர், அந்த அட்டையில் பதிவு செய்யப்படும். அட்டையை உறுப்பினர்களே தம் பொறுப்பில் வைத்துக்கொள்வர்...
*** விருப்பமுள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம்... கட்டாயம் இல்லை...
*** போதிய உறுப்பினர்கள் இத்திட்டத்தில் இணையாத நிலையில், ஊழிருக்கான ஊதியத்தில் குறைவு ஏற்பட்டால், கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை எஞ்சிய தொகையை வழங்கும்...
இவ்வாறு, காயல்பட்டினம் நகர்மன்ற 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா தெரிவித்தார். |