தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் உற்பத்தியை, ரூபாய் ஐநூறு கோடியில் விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், 29.11.2011 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள முத்து அரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அமிர்தஜோதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் பொற்கொடி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் நல பொறியாளர் முருகன், உதவிப் பொறியாளர் குமாரவேல் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
டி.சி.டபிள்யு. நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாக துணைத்தலைவர் ஜி. சீனிவாசன், உற்பத்திப் பிரிவு துணைத்தலைவர்கள் ஆர். ஜெயக்குமார், சுபாஷ் தாண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில் சுமார் ஐநூறு கோடி ரூபாய் மதிப்பில்,
டிரைகுளோரோ எத்திலின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 7,200 டன்களில் இருந்து 15,480 டன்களாகவும்,
பாலி வினைல் குளோரைடு உற்பத்தி திறனை ஆண்டுக்கு 90 ஆயிரம் டன்களில் இருந்து 1.50 லட்சம் டன்களாகவும்,
இணை மின் உற்பத்தி நிலையத்தை 58.27 மெகாவாட்டில் இருந்து 108.27 மெகாவாட்டாகவும்
விரிவுபடுத்தும் திட்டத்துக்காகவும்,
புதிய வினைபொருளான குளோரினேடட் பாலிவினைல் குளோரைடு ஆண்டுக்கு 14,400 டன் உற்பத்தி செய்யும் திட்டத்துக்காகவும் இந்த கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சித் தலைவர் என். சின்னத்துரை, அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் பள்ளத்தூர் டி. முருகேசன், மாவட்ட சிறு தொழில் சங்கத்தைச் சேர்ந்த சின்னத்துரை, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே. பெருமாள்சாமி, பாஜகவைச் சேர்ந்த ராஜ கண்ணன், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், புன்னக்காயல் பங்குத்தந்தை ஜான்செல்வம் உள்ளிட்ட பலர் விரிவாக்கத் திட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
டி.சி.டபிள்யு தொழிற்சாலையால் ஆறுமுகனேரி பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது... பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது... பகுதி முன்னேற்றம் அடைந்துள்ளது... இந்த தொழிற்சாலையால் பாதிப்பு எதுவும் இல்லை... விரிவாக்கத் திட்டத்தால் மேலும் பலருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது... எனவே, விரிவாக்கத் திட்டம் தேவை என்பது இத்திட்டத்தை ஆதரித்துப் பேசிய இவர்களின் கருத்தாக இருந்தது.
அதே வேளையில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த புற்றுநோய் காரணி கண்டறியும் குழு (CFFC) வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், என்.எஸ்.இ.மஹ்மூத் தலைமையில் சென்று இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த எஸ்.கே.ஸாலிஹ்,
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் கருத்து தெரிவித்த எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய்,
இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம். சார்பில் கருத்து தெரிவித்த எஸ்.அப்துல் வாஹித்,
ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் கருத்து தெரிவித்த பொறியாளர் ஏ.பி.ஷேக்,
காயல்பட்டினம் நல அறக்கட்டளையின் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ,
காயல்பட்டினம் கோமான் ஜமாஅத் சார்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 01ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் ஆகியோர் இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் க.கனகராஜ், மதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஜோயல், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு அமைப்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜான்சன் உள்ளிட்டோரும் இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த தொழிற்சாலையால் ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது... அதற்கு முதலில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்... அதற்கு பிறகே விரிவாக்க திட்டம் குறித்து யோசிக்க வேண்டும்... இப்போதைக்கு விரிவாக்கம் தேவையில்லை... என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.
ஏற்கனவே இதுபோன்று பல கருத்தக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் உயிர், உடல்நலம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டு தாங்கள் பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் வந்து தெரிவித்த கருத்துக்களை இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும், ஒருபுறம் கருத்துக்கேட்பு என்ற பெயரில் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, மறுபுறம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி செயல்படுவதாகவும் அவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
மேலும், இந்த விரிவாக்கத் திட்டம் தொடர்பாக டி.சி.டபிள்யு. ஆலையால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இறுதியாக, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் பேசினார்.
டி.சி.டபிள்யு விரிவாக்கத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த அனைத்து கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அக்கருத்துக்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பிவைக்கப்ப்டும் என்றும், அதன்பேரில், மாநில - மாநில அளவிலான குழு இத்திட்டத்திற்கு அனுமதியளிப்பது தொடர்பாக முடிவு செய்யும் என்றும், இத்திட்டத்தை அனுமதிப்பதா அல்லது நிறுத்துவதா என்பது மாவட்ட நிர்வாகத்தின் கையில் இல்லை என்றும் மத்திய - மாநில அரசுகள்தான் முடிவு செய்யும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார். |