சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி, கடும் பாதிப்புகளை உருவாக்கி, விதி மீறல்களுடன் செயல்படும் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் - நடப்பு செயல்பாடுகளை ஆதாரத்துடன் விளக்கியும்,
தற்போது அந்த ஆலை தன் உற்பத்தியை, ரூபாய் ஐநூறு கோடியில் விரிவாக்கம் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரியும் காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு (Cancer Fact Finding Committee - CFFC) சார்பில், ஆதார ஆவணங்கள் அடங்கிய கோரிக்கை மனு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டம்:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட DCW ஆலையின் ரூ.500 கோடி மதிப்பிலான உற்பத்தி விரிவாக்கத் திட்டம் குறித்து, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில், 29.11.2011 அன்று காலையில் பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
CFFC சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையில், எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் (இளைஞர் ஐக்கிய முன்னணி - YUF), பொறியாளர் ஏ.பி.ஷேக் (ரெட் ஸ்டார் சங்கம்), எஸ்.அப்துல் வாஹித் (இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம்.) ஆகியோர் கலந்துகொண்டு, DCW ஆலை துவங்கப்பட்டது முதல் இன்று வரையிலுமான, விதி மீறல்களுடன் கூடிய அந்த ஆலையின் செயல்பாடுகளை விளக்கி, அதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், இதுவரையிலான அதன் செயல்பாடுகளே விதிமீறல்களுடன் இருக்கையில், புதிய உற்பத்தி அல்லது விரிவாக்கம் எதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்திப் பேசினர்.
காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதன் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, கோமான் ஜமாஅத் சார்பில் பேசிய காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் ஆகியோரும் அதேபோன்று தமது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்தும், புதிய விரிவாக்கம் - உற்பத்தி என எதற்கும் அனுமதியளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்திப் பேசினர்.
CFFC சார்பில் எஸ்.கே.ஸாலிஹ் பேசிய விபரம் பின்வருமாறு:-
இந்த DCW தொழிற்சாலை துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, அரசு வகுத்துள்ள எந்த விதிமுறையையும் மதித்து செயல்படுவதில்லை...
கடலில் பாதரசம் கலந்த கழிவு நீர்...
இத்தொழிற்சாலையின் கழிவுநீர் கடலில் கலப்பது பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது... காயல்பட்டினம் கடற்கரையையும், கடலின் அவ்வப்போதைய மாற்றங்களையும் நாங்கள் அனுதினமும் கூர்ந்து கவனித்து வருகிறோம்... கடலில் நிறமாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் அதை படமெடுத்து, எங்கள் ஊரின் செய்திகளைத் தாங்கி வரும் www.kayalpatnam.com வலைதளத்தில் அதை செய்தியாகப் பதிவு செய்திருக்கிறோம்...
இவ்வாறு கடலில் கலக்கப்படும் கழிவு நீரில், பொதுமக்களுக்கு கொடிய வியாதிகளையும், உயிரிழப்புகளையும் தரும் MERCURY (பாதரசம்) அதிகளவில் உள்ளது...
காயல்பட்டினத்து மக்கள் பெரும்பாலும் வாரத்தில் மூன்று முதல் நான்கு தினங்கள் இந்த கடல் மீனைத்தான் உண்ணுகின்றனர்...
நகரில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு...
எங்கள் ஊரில் புற்றுநோயின் பாதிப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது... இதுகுறித்து காயல்பட்டினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், பாதிப்பிற்குள்ளாகி தற்போது சிகிச்சை பெற்று வருவோர், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தோர் குறித்த கணக்கெடுப்பை நடத்தி, நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழு விபரங்களை சேகரித்து வைத்துள்ளோம்...
இந்த பாதிப்பிற்குக் காரணமாக பல அம்சங்கள் கூறப்பட்டாலும், இந்த தொழிற்சாலையின் கழிவுகளே மிக முக்கிய காரணமாக இருப்பதாக நாங்கள் பெரிதும் அச்சப்படுகிறோம்...
நாங்கள் இந்த தொழிற்சாலையையோ, அதனால் சுற்றுவட்டாரத்திற்கும், நாட்டுக்கும் கிடைக்கும் தொழில் வளங்களையோ கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க விரும்பவில்லை... ஆனால் எங்கள் ஊரில் அனுதினமும் புற்றுநோயாளிகளைப் பார்த்துப் பார்த்து வெந்து போன எங்கள் கண்களுக்கு இந்த தொழிற்சாலையின் வளர்ச்சியை விட அதனால் ஏற்படும் பாதிப்புதான் தெளிவாகத் தெரிகிறது...
நிலக்கரி மாசு...
அடுத்து இந்த தொழிற்சாலை, தனது மின் தேவைக்காக மின் உற்பத்தி செய்வதாகவும், தேவைக்கதிகமாக உள்ள மின் உற்பத்தியை சந்தையில் விற்பதாகவும் தெரிவித்துள்ளது... இந்த மின் உற்பத்திக்கு மூலப்பொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது...
கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற இதுபோன்ற பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டத்தின்போது, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியையே இதற்கு மூலப்பொருளாகப் பயன்படுத்தப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் நிலகரியில் சுமார் 11 சதவீதம் - சாம்பல் (Ash Content) இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ஏறத்தாழ 40 சதவீதம் - சாம்பல் (Ash Content) இருக்கும் உள்ளூர் நிலக்கரியை பயன்படுத்தப்போவதாக DCW தெரிவித்துள்ளது. இதனால் மாசு பிரச்சனை பெரிதும் அதிகரிக்கும்.
‘காயல்பட்டினம்‘ பெயர் இருட்டடிப்பு...
அடுத்து, இந்த தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும் செய்திகளாகட்டும்... அறிக்கைகளாகட்டும்... அல்லது தற்போது இந்த புதிய உற்பத்தி மற்றும் விரிவாக்கத்திற்காக அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையாகட்டும்! இவையனைத்திலும் காயல்பட்டினத்தின் பெயர் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை அறிகிறோம்...
முறையான தகவலின்மை...
அதுபோல, காயல்பட்டினம் நகராட்சியின் கீழ் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் முக்கிய அறிவிப்புகள், தகவல்கள் எதுவும் முறைப்படி நகராட்சிக்குத் தரப்படுவதில்லை. இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டத்தைக் கூட வெளியிலிருந்து அறிந்துகொண்டே நாங்கள் இங்கு வந்துள்ளோம்... காயல்பட்டினம் நகராட்சியிலிருந்து இதுகுறித்த எந்த அறிவிப்பும் இன்று காலை வரை வெளியிடப்படவில்லை என்று நாங்கள் உறுதியாகத் தெரிவிக்கிறோம்...
ஆதார ஆவணங்கள்...
நான் இதுவரை சொன்ன அம்சங்கள் மற்றும் இது தொடர்பான இதர விபரக்குறிப்புகள் அனைத்தையும், தகுந்த ஆதார ஆவணங்களுடன் இக்கூட்டத்தின் நிறைவில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவுள்ளோம் என்று தெரிவித்து எனதுரையை முடித்துக்கொள்கிறேன், நன்றி.
இவ்வாறு, CFFC சார்பில் எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்தார்.
முன்னதாக காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் கருத்து தெரிவித்தார்.
அனுமதியின்றி கடலில் கலக்கப்படும் கழிவுநீர்...
“The unit shall not discharge any wastewater into nearby water courses directly/indirectly”(Consent to Operate;Consent order No.21824) என்று சட்ட விதியிருக்க, DCW ஆலை நிர்வாகம் அதைப் பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல், பாதரசம் கலந்த கழிவுநீரை தொடர்ந்து பல்லாண்டுகளாக கடலிலேயே கலக்கி வருகிறது... என்று அவர் தெரிவித்தார்.
காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கத்தின் சார்பில் அடுத்து பேசிய பொறியாளர் ஏ.பி.ஷேக், கடலில் கலக்கப்படும் கழிவில் உள்ள பாதரசத்தின் அளவை ஆதாரக் குறிப்புகளுடன் விளக்கினார்.
காயல்பட்டினம் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம். சார்பில் எஸ்.அப்துல் வாஹித் கருத்து தெரிவித்தார்.
சட்டத்திற்குப் புறம்பாக உற்பத்தி செய்யப்படும் PVC...
DCW தொழிற்சாலையின் PVC உற்பத்திப் பிரிவு பல ஆண்டுகளாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலின்றியே செயல்பட்டு வருகிறது...
ஏற்கனவே அது செய்து வரும் உற்பத்தி கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியானது... அதனைத் தொடர்ந்து அனுமதியைப் புதுப்பிக்க ஆலை நிர்வாகம் கோரியதையடுத்து 2009 மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (Tamilnadu Pollution Control Board - TNPCB) அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்குப் பிறகு, Consent to Operate என்ற முறையான அனுமதியைப் பெறவில்லை என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு TNPCB விளக்கம் தெரிவித்துள்ளது...
ஆக, ஏற்கனவே செய்யப்பட்டு வரும் உற்பத்தியே illegal - சட்டத்திற்குப் புறம்பானது என்றிருக்க, அதே உற்பத்தியை விரிவாக்க அனுமதி கோருவது வேடிக்கையாக உள்ளது...
இவ்வாறு எஸ்.அப்துல் வாஹித் கருத்து தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு சமர்ப்பிப்பு:
பொதுமக்கள் கருத்துணர்வுக் கூட்டம் நிறைவுற்ற பின்னர், மதியம் 02.15 மணியளவில், CFFC சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், இதர ஒருங்கிணைப்பாளர்களான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை அவரது தனியறையில் சந்தித்து DCW தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கான எதிர்ப்பு ,மற்றும் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் விதி மீறல்கள் குறித்தும் அதற்கான ஆதாரங்களையும் நேரில் சமர்ப்பித்தனர். அத்துடன் இந்த தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்கள் கடந்த காலங்களில் அளித்த ஆய்வறிக்கைகள், நிழற்படங்கள் முதலியவற்றை உள்ளடக்கிய 51 பக்கங்களைக் கொண்ட ஆதார ஆவணங்களையும் ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.
காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் பொறியாளர் ஏ.பி.ஷேக், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம். சார்பில் எஸ்.அப்துல் வாஹித் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.
அயல்நாட்டு இந்திய தூதரகங்களிலும்...
இந்த 51 பக்க ஆதார ஆவணங்களை உள்ளடக்கிய கோரிக்கை மனு, CFFC-யின் வேண்டுகோளின்படி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள காயல் நல மன்றங்களால் அந்தந்த நாட்டிலுள்ள இந்திய தூதுவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
Cancer Fact Finding Committee - CFFC சார்பாக
ஹாஜி N.S.E.மஹ்மூது,
தீவுத்தெரு, காயல்பட்டினம்.
செய்தியில் சில வாசகங்களும், ஒரு படமும் இணைக்கப்பட்டுள்ளது. (02.12.2011 - 10:25hrs) |