சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்காக நிதி சேகரிக்கப்படும் உண்டியல் மூலம், இந்திய ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இறையருளால் கடந்த 19.11.2011 அன்று 19.45 மணிக்கு, மன்றத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
செயலர் அறிக்கை:
பின்னர், கடந்த மாதம் நடைபெற்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகளை மன்றச் செயலர் மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய, உழைக்கவியலாத, ஆதரவற்ற மக்களுக்காக மன்றத்தால் வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய சமையல் பொருட்கள் (Groceries for Needy Kayalites - GNK) துல்-ஹஜ் மாதத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
வருங்காலங்களில் இத்திட்டம் சகோதரர் மஹ்மூத் லெப்பை மூலம் நிறைவேற்றப்படுமெனவும், பயனாளிகள் பற்றிய ரகசியம் எப்போதும் போல் பாதுகாக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
அண்மையில் அவர் தாயகம் சென்றிருந்தபோது, இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டதையும், அக்கூட்ட நிகழ்வுகளையும் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
மருத்துவ உதவி கோரி பெறப்பட்ட வின்னப்பங்களுக்கான உதவித்தொகை இந்த மாதம் (நவம்பர் 2011) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை ரூபாய் 1,13,000 ஆகும். இது இந்த மாதத்தில் நமது உள்ளூர் பிரதிநிதி சகோதரர் கே.எம்.டி.சுலைமான் மூலம் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வரவு-செலவு கணக்கறிக்கை:
அடுத்து, மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, செயற்குழு அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது. 2011ஆம் ஆண்டிற்கான சந்தா தொகை மற்றும் துல்-ஹஜ் மாதம் செயல்படுத்தபட்ட அத்தியாவசிய சமையல் பொருட்களுதவித் திட்டம் (Groceries for Needy Kayalites - GNK) ஆகியவற்றுக்கு நிதியுதவி அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
உண்டியல் திறப்பு:
நகர்நலப் பணிகளை அதிகளவில் செய்திடுவதற்காக தேவையான நிதியாதாரத்தைத் திரட்டிடும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட உறுப்பினர் உண்டியல் நிதி வசூல் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட உண்டியல்கள் கூட்டத்தில் திறக்கப்பட்டது. இம்முறை இந்திய ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரம் தொகை வசூலாகியுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் பிரதிநிதி தொலைபேசி அழைப்பு:
மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் அவர்களுடன் தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அவர் அத்தியாவசிய சமையல் பொருட்கள் (Groceries for Needy Kayalites - GNK) மற்றும் வீடு புனர்நிர்மாணம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து விளக்கினார். மேலும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
புதிய உறுப்பினருக்கு வரவேற்பு:
சிங்கப்பூர் காயல் நலமன்றத்தில் புதிய உறுப்பினராக இணைந்துள்ள சகோதரர் முஹம்மது சிராஜுத்தீன் அவர்களை செயற்குழு வரவேற்றது.
இவருக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்திட உதவி செய்த உறுப்பினர்கள் முஹ்ஸின் தம்பி மற்றும் ஜவகர் இஸ்மாயில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலை நாடி வரும் சகோதரர்களுக்கு தகுந்த வேலை கிடைத்திட அணைத்து உறுப்பினர்களுக்கும் உதவி செய்ய கேட்டுகொள்ளபட்டது.
ஆண்டுதோறும் ஒருநாள் ஊதியம் நன்கொடையளித்தல்:
ஆண்டுதோறும் ஒருநாள் ஊதியம் நன்கொடையளித்தல் திட்டம்பற்றி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த திட்டம் மன்றத்தின் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காக சோதனை முறையில் செயல்படுத்தப்படும். பெருவாரியான உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்த திட்டம் நிறைவேற்றப்படுமென தெரிவிக்கப்பட்டது. வருகிற (Jan 2012) பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றிய மேலதிக விபரம் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் இந்த திட்டம் வருடாந்திர பொதுக்குழு நடைபெறும்பொழுது (March 2012) செயல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு மன்ற நிறுவனரும், ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹசன் அவர்கள் விளக்கமளித்தார்.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், உறுப்பினர் எம்.ஆர்.ஏ.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ துஆவுடன் 21.45 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |