3 நோயாளிகளுக்கு ரூ.30,000 உதவி வழங்கியதுடன், அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்த வேண்டுமென மலபார் காயல் நல மன்ற செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமர்று:-
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) 32ஆவது செயற்குழுக் கூட்டம் 25.11.2011 அன்று இரவு 09.15 மணிக்கு அவ்வமைப்பின் அலுவலகத்தில் கூடியது. மன்றத்தின் தலைவர் மஸ்ஊத் தலைமை தாங்கினார். செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் முன்னிலை வகித்தார்.
தலைவர் உரை:
துவக்கமாக தலைவர் தலைமையுரையாற்றினார். மருத்துவ உதவி கோரி நமதூர் காயல்பட்டினத்திலிருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலிப்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தான் ஊரில் இருந்த காரணத்தால் மனுதாரர்களை தானே நேரில் சென்று விசாரித்த விபரங்களை கூட்டல் அவர் விரிவாக விளக்கினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட செயற்குழு உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்தாய்வுக்குப் பிறகு மூன்று நோயாளிகளுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 30,000 (முப்பதுதாயிரம்) வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும் இம்மன்றத்தின் மூலம் அயராமல் நகர்நலப் பணிகளாற்றி வரும் செயற்குழு உறுப்பினர்கள், ஆர்வமுள்ள நண்பாகள் அனைவரையும் அவர் தனதுரையில் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
செயலாளர் உரை:
அதனைத் தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில் உரையாற்றினார். அவர் தனதுரையில்,
நம் ஊரில் இருந்து மருத்துவ உதவிகள் கோரி வரும் மனுக்களில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மருந்து குறிப்புகள் மற்றும் பில் போன்றவற்றை பார்க்கும்போது, நம் ஊரை சுற்றி இருக்கும் தனியார் மருத்துவமனைகள் மருத்துவம் செய்கின்றோம் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாக்க் கொண்டு செயல்பட்டு வருவதை போலவே உள்ளது...
மேலும் ஸ்கேன், குருதி சுத்திகரிப்பு, அறுவை சிகிச்சை, ரூம் வாடகை என மருத்துவத்திற்காக செய்யப்படும் செலவுகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்... மேலும் இதற்கான பில்லை பார்த்தல் தலை சுற்றி விடுகிறது...
இந்த இடத்தில் நாம் தனியார் மருத்துவமனைகளைக் குற்றம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை... ஆனால், நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவிகளைப் பெற்றிட நம் உள்ளங்கள் ஏனோ தயங்குகின்றன... அரசு மருத்துவமனைகளுக்கு செல்பவர்களை கூட ஒரு மாதிரியாக பார்ப்பது நம் ஊரில் வாடிக்கையாக உள்ளது...
இப்போது அரசு மருத்துவமனைகள் நவீன முறையில் மேம்படுத்தபட்டுள்ளது என்பதை நாம் நம் மக்களிடம் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...
திருநெல்வேலி, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கெல்லாம் சென்று பார்த்த நம்மவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்... ஏன் தனியார் மருத்துவமனையாக இருந்தாலும், மிக சுகாதாரமான முறையில் நமக்காக கட்டப்பட்டுள்ள கே.எம்.டி. மருத்துவமனைக்குக் கூட சிகிச்சைக்காக செல்பவர்கள் மிகவும் குறைவு!
நாம் ஏன் நம் ஊருக்கு பக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று வீணாக பணத்தை செலவு செய்யவேண்டும்? வசதி படைத்தவர்களாக இருந்து தனியார் மருத்துவமனையை நாடினால் கூட பரவாயில்லை... மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் கூட தனியார் மருத்துவமனைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றால் ஏதோ கவுரவக் குறைச்சல் என்று நினைப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்...
எனவே, இந்த நிலையை மாற்றி, அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை - குறிப்பாக வசதி குறைந்த மக்களைக் கேட்டுக்கொள்வதுடன், இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து அமைப்புகளையும், உலக காயல் நல மன்றங்களையும் வேண்டும்...
இவ்வாறு மன்றச் செயலர் ஹைதுரூஸ் ஆதில் உரையாற்றினார். அனைத்து உறுப்பினர்களும் அவ்வுரை மிகவும் அவசியமான உண்மைகளைப் பொதிந்துள்ளது என ஆதரித்துக் கூறினர்.
மேலும், இக்காலத்தில் வகை வகையாக நோய்கள் வந்து கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, அவற்றுக்குச் செலவழிப்பதற்கான வருமானம் நடுத்தர மக்களிடம் குறைந்து கொண்டே இருகின்றது என்றும், எனவே இதற்கென முறையான செயல்திட்டம் வகுக்க வேண்டுமெனவும் உறுப்பினர்கள் அப்போது தெரிவித்தனர்.
இவ்விஷயத்தில், அனைத்து காயல் நல மன்றங்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து செயல்படலாம் என்றும் உறுப்பினர்கள் தெரிவித்ததையடுத்து அதை கூட்டம் தீர்மானமாக நிறைவேற்றியது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் 01 - மருத்துவ உதவி:
நம் நகரில் உள்ள மூன்று நோயாளிகளுக்கு மருத்துவ செலவினங்களுக்காக மன்றத்தின் சார்பில் ரூ.30,000 மருத்துவ உதவியாக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 02 - அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்த மக்களுக்கு வேண்டுகோள்:
அரசு மருத்துவமனைகளை பயன்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து பொது நல அமைப்புகளுக்கும், காயல் நல மன்றங்களுக்கும் இதுகுறித்து அழைப்பு விடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இரவு 09.15 மணிக்குத் துவங்கிய கூட்டம் 10௦.45 மணிக்கு அனைவரின் துஆவுடன் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA)
கோழிக்கோடு, கேரள மாநிலம். |