காயல்பட்டினத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒருவழிப்பாதை செயலாக்கம் அவசியம் என பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட நகரின் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ள்ப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அண்மையில் சோதனை அடிப்படையில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டு, அதிலுள்ள நிறை-குறைகள் ஆராயப்பட்டது.
இந்நிலையில், இந்த ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக திருச்செந்தூர் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) பொற்கொடி நேற்று காயல்பட்டினத்திற்கு வந்திருந்தார். அவருடன் காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் எம்.ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் ஆகியோரும் வந்திருந்தனர்.
அவர்கள் காயல்பட்டினம் தாயிம்பள்ளி அருகிலிருந்து, மூப்பனார் ஓடை குறுக்கிடும் சாலை வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வரும் பெரிய நெசவுத்தெரு வரை நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் கருத்து தெரிவித்த வட்டார போக்குவரத்து அலுவலர் பொற்கொடி, ஒருவழிப்பாதை இந்நகரில் மிகவும் அவசியம் என்றும், அதனை நிறைவேற்றுவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் ஒருவழிப்பாதை நடைமுறைப் படுத்தப்படுவதற்கு ஆவன செய்யப்படும் என்றார்.
அப்போது அங்கிருந்த நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர், நகராட்சி மூலம் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமா என்று அவரிடம் வினவினர். அதற்கு விடையளித்துப் பேசிய வட்டார போக்குவரத்து அலுவலர், இது வேறு துறை சார்ந்த நடவடிக்கை என்பதால், நகராட்சி தீர்மானத்தை மட்டும் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதென்பது சாத்தியமற்றது என்றும், ஒருவேளை அவ்வாறு தீர்மானம் இயற்றப்பட்டால், அதையும் துணை ஆவணமாக வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி ஆகிய உறுப்பினர்களும், பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
தகவல்:
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,
காயல்பட்டினம்.
[செய்தி திருத்தப்பட்டது] |