தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியும் இம்மாதம் 06ஆம் தேதியன்று (நாளை) கடையடைப்புக்கு, காயல்பட்டினம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கான அறிவிப்பை உள்ளடக்கிய பிரசுரம் நகரில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் நேற்று முழுக்க வினியோகிக்கப்பட்டது.
இக்கடையடைப்பிற்கு ஒத்துழைப்பளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் பிரசுரமொன்றும் நேற்றிரவில் நகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வினியோகிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை நகரில் பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் பேருந்து நிலைய சுற்றுப்புறம், கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, பிரதான வீதி, ஸீ-கஸ்டம்ஸ் சாலை ஆகிய வீதிகளிலுள்ள வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இக்கடையடைப்பில், மக்களின் அத்தியாவசிய தேவைகளைக் கருத்திற்கொண்டு மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் அடைக்கத் தேவையில்லை என கடையடைப்பை அறிவித்தவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், நகரின் அனைத்து மருந்துக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
நகரில் பெரும்பாலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளபோதிலும், ஆங்காங்கே சில கடைகள் திறந்துமிருந்தன. பரிமார் தெரு மீன் சந்தையில் சில வணிகர்கள் மட்டும் மீன் விற்று வருகின்றனர். மீன் சந்தைக்கு வெளியிளும் மீன் வணிகம் சில மணி நேரம் நடைபெற்றது.
இது ஒருபுறமிருக்க, நகரில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் முகாமிட்டு செய்திகளையும், படங்களையும் சேகரித்தவண்ணமுள்ளனர். கடையடைப்பை அறிவித்துள்ளவர்களைச் சந்தித்து அவர்கள் கருத்துக்கேட்டு, அதனைப் பதிவு செய்துகொண்டனர்.
கள உதவி:
‘லேக்கா‘ முஹம்மத் முஹ்யித்தீன்,
காயல்பட்டினம். |