தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியும் இம்மாதம் 06ஆம் தேதியன்று (நாளை) கடையடைப்புக்கு, காயல்பட்டினம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கடையடைப்பு அறிவிப்பை ஏற்று, நகரில் ஒரு சில கடைகள் தவிர பெரும்பாலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக ஆட்டோ வாகனங்களை இயக்கலாம் என கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில், ஆங்காங்கே ஆட்டோ வாகனங்கள் சில ஓடினாலும், பொதுவாக எந்த வாடகை வாகனமும் ஓடவில்லை.
அரசு அலுவலகங்கள், வங்கிகள் திறந்திருந்தன. பேருந்துகள் வழமை போல ஓடின. மக்களின் அத்தியாவசிய தேவைகளைக் கருத்திற்கொண்டு மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் அடைக்கத் தேவையில்லை என கடையடைப்பை அறிவித்தவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்ததால், நகரின் அனைத்து மருந்துக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. மூடப்பட்டிருந்த அனைத்து கடைகளும் மாலை 06.00 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டன.
இக்கடையடைப்பு குறித்து முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த காரணத்தால் பொதுமக்கள் தமக்குத் தேவையான கடை சாமான்களை முன்னரே வாங்கி வைத்துக்கொண்டனர். இதன் காரணமாக அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. |