மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியும் இம்மாதம் 06ஆம் தேதியன்று (நாளை) கடையடைப்புக்கு, காயல்பட்டினம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கடையடைப்பிற்கு இணைந்து அழைப்பு விடுத்துள்ள அமைப்புகளில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகியவற்றின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இக்கடையடைப்பிற்கும் தமக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிவித்து, காயல்பட்டினம் நகர தமுமுக - மமக நிர்வாகத்தின் சார்பில் பின்வருமாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது:-
காயல்பட்டணம் தமுமுக & மமக நிர்வாகிகளின் அணு உலையை மூடக்கோரியும், தொடர் மின்வெட்டைக் கண்டித்தும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கே.முஹ்ஸின் (முர்ஷித்) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமுமுக நகர தலைவர் எம்.கே.ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
1. காயல்பட்டணத்தில் நடைபெறும் கடையடைப்பிற்கும் தமுமுக & மமக எவ்வித சம்பந்தமும் இல்லை.
2. 03.03.2012 அன்று தினத்தந்தி நாளிதழில் வந்த அணு உலைக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை தமுமுக மற்றும் மமக வன்மையாக கண்டிக்கிறது.
3. மனித குலத்திற்கு ஆபத்தான அணு உலையை உடனே மூட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
4. காயல்பட்டணத்தில் இரண்டாம் பைப் லைன் திட்டம் உடனே நிறைவேற்றப்பட வேண்டும்.
5. நான்கு மணி நேரம் மட்டுமே மின்தடை என்று அறிவித்து விட்டு தினமும் 8 மணி நேரம் நடக்கும் மின் தடையை வன்மையாக கண்டிக்கிறோம்.
6. வருகின்ற 15.03.2012 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நமதூர் புதிய பேருந்து நிலையம் முன்பு தொடர்மின்வெட்டைக் கண்டித்தும் & அணு உலையை மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையைத் தொடர்ந்து, கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்த தமது நிலைபாட்டை விளக்கி, தமுமுக, மமக சார்பில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்ட பிரசுரம் பின்வருமாறு:-
தகவல்:
N.M.தமீமுல் அன்ஸாரீ,
துணைத்தலைவர்,
காயல்பட்டினம் நகர தமுமுக.
[செய்தி திருத்தப்பட்டது @ 23:45/05.03.2012] |