டெங்கு காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்கை தேவையென்றும், இந்நோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவையென்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியரகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்தியறிக்கை பின்வருமாறு:-
நமது அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நமது தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க, சுகாதாரத் துறையினருடன் இணைந்து பொதுமக்களும் செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொள்கிறார்.
டெங்கு காய்ச்சல் வைரஸ் வகையைச் சார்ந்தது. இந்நோய் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாகப் பரவுகிறது. இத்தகைய கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே முட்டையிட்டு உற்பத்தியைப் பெருக்குகின்றன. இதே வகையான கொசுக்களின் மூலமாகத்தான் சிக்குன்குனியா நோயும் பரவுகிறது.
இத்தகைய கொசுக்களின் இறைக்கைகளில் வரிவரியாக கோடுகள் உள்ளதால், இதனை புலிக்கொசு என்றும் கூறுவர். இத்தகைய கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். பொதுவாக விடியற்காலையிலும், பகலிலும் இக்கொசுக்கள் கடிக்கின்றன. இந்நோய் குழந்தைகளை அதிகமாக தாக்கும் வாய்ப்புள்ளது.
உடைந்த மண்பாண்டங்கள், தேவையற்ற டயர், தூக்கியெறியப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றில் மழை நீர் தேங்கும்பொழுது, அந்த மழை நீரில் கொசுக்கள் முட்டையிட்டு புதிய கொசுக்கள் உற்பத்தியாகிறது.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:
Ø கடுமையான காய்ச்சல்
Ø கண்களின் பின்புறம் வலி
Ø கடும் தலைவலி
Ø கடுமையான மூட்டுவலி மற்றும் தசைவலி
Ø வாந்தி
Ø தோல் சிவத்தல் (rash)
Ø வெள்ளை அணுக்கள், இரத்த வட்டுகள் குறைத்தல்
Ø மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு, இரத்தப்புள்ளிகள்)
Ø அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுவதுமே அரிப்பு ஏற்படலாம்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
Ø சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்...
Ø திறந்தவெளியில் கிடக்கும் உடைந்த மண்பாண்டங்களை, ப்ளாஸ்டிக் பொருட்கள், சிரட்டை போன்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்...
Ø நீர் சேமிக்கும் கலன்களை கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைத்திருக்க வேண்டும்..
Ø கொசு வலைகளைப் பயன்படுத்தலாம்...
மேற்கண்ட நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, கொசு உற்பத்தியைத் தடுப்பதன் மூலமாக டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி, உரிய சிகிச்சை பெற்று நல்வாழ்வு வாழ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |