தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வலியுறுத்தியும் இம்மாதம் 06ஆம் தேதியன்று (நாளை) கடையடைப்புக்கு, காயல்பட்டினம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கான அறிவிப்பை உள்ளடக்கிய பிரசுரம் நகரில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் நேற்று முழுக்க வினியோகிக்கப்பட்டது.
இக்கடையடைப்பிற்கு ஒத்துழைப்பளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் பிரசுரமொன்றும் நேற்றிரவில் நகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வினியோகிக்கப்பட்டது.
அதுபோல, இக்கடையடைப்பிற்கும் தமக்கும் தொடர்பெதுவுமில்லை என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடையடைப்பு நடத்துவது குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பதை விளக்கி, அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தொடர் மின்வெட்டு...
காயல்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக தினமும் 10 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்பட்டு வருவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதைக் கருத்திற்கொண்டும், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்க இருப்பதால் - மாணவர்களின் படிப்பு நலனைக் கருத்திற்கொண்டும், நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுவதை அறிந்துள்ள நிலையிலும் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது.
சுற்றுப்புற ஊர்களில் கடையடைப்பு...
மேற்சொன்ன இதே சிரமங்களைக் காரணமாகக் கொண்டு, காயல்பட்டினத்தைச் சுற்றியுள்ள ஆறுமுகநேரி, ஆத்தூர், குரும்பூர், திருச்செந்தூர் போன்ற ஊர்களைச் சார்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் தத்தம் பகுதியிலுள்ள பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், கடந்த மாதம் அந்த ஊர்களில் ஒட்டுமொத்தமாக கடையடைப்பு நடத்தப்பட்டது. அதன் விளைவாக, அப்பகுதிகளில் தினமும் 8 மணி நேரம் செய்யப்பட்டு வந்த மின்தடை 4 மணி நேரமாக மாற்றப்பட்டது.
ஆனால், காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்திலுள்ள மேற்படி ஊர்களைச் சார்ந்த வியாபாரிகள், “இக்கடையடைப்பில் காயல்பட்டினம் வியாபாரிகளும் கலந்துகொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, காயல்பட்டினம் வியாபாரிகள் சங்கம் என்று வெறும் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு, பொதுமக்களைப் பற்றியோ, வியாபாரிகளைப் பற்றியோ கவலைப்படாமல், இன்வெர்ட்டர் வாழ்க்கை நடத்தும் காயல்பட்டினம் வியாபாரி சங்க நிர்வாகி மறுத்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு:
எனவே, பொதுமக்களின் நலனைக் கருதி, தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேமுதிக ஆகிய கட்சிகள் களத்தில் இறங்கி, அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்திற்கு - 02.03.2012 வெள்ளிக்கிழமையன்று ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது.
எங்களது அழைப்பை சர்வ கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வியாபாரிகள் சங்கமும் பெற்றுக்கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
02.03.2012 வெள்ளி மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகர முஸ்லிம் லீக் தலைவராக உள்ள எனது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
காங்கிரஸ் சார்பில் அதன் நகர தலைவர் சதக்கத்துல்லாஹ், துணைத்தலைவர் காயல் முத்துவாப்பா,
தேமுதிக நகர தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,
பிஜேபி நகர தலைவர் மகேஷ், பண்டாரம்,
மார்க்ஸிய கம்யூனிஸ்ட் சார்பில் திருத்துவராஜ்,
எஸ்.டி.பி.ஐ. சார்பில் எஸ்.எம்.கே.முகைதீன்,
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நகர துணைச் செயலாளர் மும்பை முகைதீன், அப்துல்லா, கவுன்சிலர் ஜமால்,
முஸ்லிம் லீக் சார்பில் மன்னர் பாதுல் அஸ்ஹப், எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், சித்தீக், சுஹைல், ஏ.கே.சுலைமான்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் முத்து ஹாஜி,
சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா, ஹஸனாலெப்பை,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் பி.என்.எஸ்.சுல்தான்,
காயல் நுகர்வோர் பேரவை சார்பில் ஸ்டெஃபினாக்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மஹ்மூது ரஜ்வி,
ஐ.ஐ.எம். சார்பில் எஸ்.அப்துல் வாஹித்,
டிரைவர்கள் சங்கம் சார்பில் வினோத் குமார், ஜாபர், சாகுல், ஜானகிராமன்,
காக்கும் கரங்கள் நற்பணி மனற்த்தின் சார்பில் ஆசிரியர் அப்துல் ரசாக்,
காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் வெற்றிவேல்,
இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஹாஃபிழ் ஈஸா ஷஃபீக்,
முஸ்லிம் லீக் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்.பி.எஸ்.ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மதிமுக கலந்துகொள்ள மறுப்பு:
தொடர் மின்வெட்டைக் கண்டிக்கும் விஷயத்தில் தம் கட்சித் தலைமைக்கு ஆதரவுக் கருத்துள்ளதாகவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தைத் திறக்கும் விஷயத்தில் கட்சித்தலைமை எதிரான கருத்திலுள்ளதால், இக்கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்ள இயலாது என மதிமுக கட்சி சார்பில் முன்பே தெரிவிக்கப்பட்டது.
அதுபோல, கூட்டம் துவங்க வேண்டிய நேரத்தில், காயல்பட்டினம் வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஏ.எம்.அப்துல் காதர் அவர்களை, “கூட்டம் ஆரம்பிக்க உள்ளது... உங்களுக்காக தாமதம் செய்கிறோம்...” என்று நாம் தொலைபேசியில் தெரிவித்தபோது, “நான் தூத்துக்குடியில் இருக்கிறேன்... எனவே செயலாளர் கண்ணனை அனுப்பி உள்ளேன்...” என்று தெரிவித்தார் அவர். ஆனால், கூட்டம் முடியும் வரை கண்ணன் வரவில்லை.
கலந்துகொண்டோர் கருத்துரை:
கூட்டம் துவங்கியதும், அதில் கலந்துகொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர். “மின்வெட்டைக் கண்டித்து கடையடைப்பு போராட்டம் - ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்... மற்ற ஊர்களில் குறைந்த நேரமே மின்வெட்டு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நமதூருக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? எனவே, நமதூர் மக்கள் அனைவரும் எதிர்ப்பைக் காட்டி கடையடைப்பு நடத்துவோம்...” என்றும், “கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படுவதை எதிர்க்கும் மக்களின் அச்சத்தைப் போக்கி, அது திறக்கப்பட வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்தனர்.
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் சார்பில் பேசியோர், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடையடைப்பு தீர்மானம்:
மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை - பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி திறக்கக் கோரியும், 06.03.2012 செவ்வாய்க்கிழமையன்று கடையடைப்பு நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வருகை தந்த அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் சங்கம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் தீர்மானத்தை எழுந்து நின்று வழிமொழிந்தனர்.
கூட்ட நிறைவுக்குப் பின் தமுமுக ஆதரவு:
கூட்டம் முடிந்த பிறகு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளிடம், தேமுதிக தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் கூட்ட தீர்மானங்களைக் காண்பிக்க, அதனைப் படித்துப் பார்த்த ஜனாப் ஜாஹிர் ஹுஸைன், அதற்கு ஆதரவளிப்பதாக தமுமுக - மமக சார்பில் கையொப்பமிட்டுள்ளார். கடையடைப்பு சம்பந்தமாக கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகளிடம் கடையடைப்பு நடத்த நோட்டீஸ் வினியோகம் செய்து ஒத்துழைப்பு தருவதாக உறுதியும் அளித்தனர்.
கடையடைப்பை மறுத்து பிரசுரம்:
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் பேரவை மாநில பொருளாளர் ஜனாப் எம்.ஜே.செய்யிது இப்றாஹீம், காயல்பட்டினம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஜனாப் எம்.ஏ.எம்.அப்துல் காதர் ஆகிய இருவரும், “காயல்பட்டினத்தில் நாளை கடையடைப்பு இல்லை” என்று நோட்டீஸ் வினியோகம் செய்தனர்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அப்பிரசுரத்தில் பொய்யான தகவலையும் சொல்லி, ஐக்கியப் பேரவையை களங்கப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் நலனில் அக்கறை இல்லாத இவர்கள் வதந்திகளைப் பரப்பி, குழப்பத்தை விளைவிக்கிறார்கள். கடையடைப்பு போராட்ட நோட்டீஸில், மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் கடையடைப்பு செய்வோம் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் கருத்து என்ன?
ஆனால், கடைகளை அடைக்கக் கூடாது என்று சொல்பவர்கள் தங்களது நோட்டீஸில் வந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. மின்வெட்டை இவர்கள் ஆதரிக்கிறார்களா? கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கிறார்களா? பொதுமக்கள் இவர்களை அடையாளங்கண்டு கொள்ளுங்கள்!
ஜனநாயக வழியில், பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் கட்சிகளை - இயக்கங்களை, அதிகாரத்தில் - ஆட்சியில் இருக்கிறோம் என்று தடுக்க நினைப்பவர்களை பொதுமக்கள் ஓரங்கட்டுவார்கள். கடையடைப்பு போராட்டத்தில் ஒத்துழைத்த நல்லவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடைசியாக கிடைத்த தகவல்படி, திமுக நகர செயலாளர் ஜெய்னுத்தீன், அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.இப்றாஹீம் ஆகியோர், கடையைத் திறக்கச் சொல்லி தம்மை நிர்ப்பந்தித்ததாக வியாபாரிகள் புகார் செய்துள்ளனர்.
இவ்வாறு, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |