தமிழகத்தில் ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வு 08.03.2012 அன்று துவங்கி, 30.03.2012 வரை நடைபெறுகிறது. இவ்வாண்டு காயல்பட்டினத்திலிருந்து மொத்தம் 461 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
இத்தேர்வு குறித்த நிகழ்முறை ஒழுங்குகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ப்ளஸ் 2 தேர்வுகள் 08.03.2012 அன்று துவங்கி, 30.03.2012 அன்று முடிவடைகிறது. தேர்வு நாட்களில், காலை 10.00 மணி முதல் 10.10 மணி வரை 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க நேரமளிக்கப்படும். 10.15 மணிக்கு தேர்வு துவங்கும். 13.15 மணிக்கு தேர்வு நேரம் முடிவடையும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 7793 மாணவர்களும், 10050 மாணவியரும், 1011 தனித்தேர்வரும் என மொத்தம் 18,854 பேர், 56 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.
தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மாவட்டத்தில் 13 காப்பகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேர்வு நடைமுறைகளைக் கண்காணிக்க, மாவட்டத்தில் மொத்தம் 114 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 11 பேர், தூத்துக்குடி கால்டுவெல் மேனிலைப்பள்ளி, சாயர்புரம் போப் நினைவு மேனிலைப்பள்ளி, கோவில்பட்டி அரசு மகளிர் மேனிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில்,
தூத்துக்குடி எஸ்.ஏ.வி.மேனிலைப்பள்ளி,
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி,
திருச்செந்தூர் அ.செ.ஆ. அரசு (ஆ) மேனிலைப்பள்ளி,
பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேனிலைப்பள்ளி,
நாலுமாவடி காமராஜ் மேனிலைப்பள்ளி,
திருவைகுண்டம் ஸ்ரீ கே.ஜி.எஸ். மேனிலைப்பள்ளி,
கோவில்பட்டி வ.வு.சி. அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி,
சுப்பம்மாள்புரம் முத்துக்கருப்பன் அரிஜன் மேனிலைப்பள்ளி,
விளாத்திகுளம் அரசு மேனிலைப்பள்ளி
ஆகிய தேர்வு மையங்கள் கவனத்திற்குரிய மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை தெரிவிக்கிறது. |