காயல்பட்டினத்தில் தொடர் மின்வெட்டு செய்யப்படுவதைக் கண்டித்தும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்கி, கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும், வரும் 06ஆம் தேதியன்று ஒருநாள் அடையாள கடையடைப்பை நடத்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-
தொடர் மின்வெட்டு மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை் திறக்க வலியுறுத்தல் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த - நகர அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் பங்கேற்கும் கலந்தாலோசனைக் கூட்டம் 02.03.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் பழைய தொலைபேசி நிலைய வளாகத்திற்கருகிலுள்ள இல்லத்தில், முஸ்லிம் லீக் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் திருத்துவராஜ், நகர மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜமால், நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் சுரேஷ், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் - ஐ.ஐ.எம். சார்பில் எஸ்.அப்துல் வாஹித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ததஜ) சார்பில் சாளை முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா, சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அதன் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் ஹாஜி எம்.என்.எல்.ரஃபீக் ஆகியோர், தொடர் மின்வெட்டு செய்யப்படுவதைக் கண்டித்தும், மின் உற்பத்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் ஆலோசகர் ஆசிரியர் அப்துல் ரசாக் மற்றும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் துணைச் செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் தொடர் மின் வெட்டைக் கண்டிப்பதில் தமக்கு மாற்றுக் கருத்தில்லை என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோருவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து அச்சம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.
கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், கூட்ட தீர்மானங்களை மன்னர் பாதுல் அஸ்ஹப் பின்வருமாறு வாசித்தார்:-
தீர்மானம் 1 - தொடர் மின்வெட்டுக்குக் கண்டனம்:
காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக தினமும் சுமார் 10 மணிநேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. இம்மின்தடையின் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. நேரம் துவங்க உள்ளதால் மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் கோடை காலம் துவங்கிவிட்டதால், முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இரவு நேர மின்வெட்டால் திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். தமிழக அரசு தினசரி 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதை காயல்பட்டினம் அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகள் மிகுந்த வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - அரசு அறிவித்த நேரப்படி மின்வெட்டு:
தமிழக அரசு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் வரும் 20 ம் தேதி முதல் 8 மணி நேர மின்வெட்டை குறைத்து 4 மணி நேரமாக மாற்றி புதிய மின்வெட்டு முறை அமலுக்கு வருகிறது என்று அறிவிப்பு செய்தும் தொடர்ந்து பழைய மின்வெட்டு முறைப்படியே 10 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது.
தற்போது நடைபெற உள்ள ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வைக் கருதி மாணவர்களின் படிப்பின் நலனை கருதியும், நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுவதை கருதியும் தமிழக அரசு உடனடியாக காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதிய மின்வெட்டு முறையான 4 மணி நேரத்தை அமுல்படுத்த வேண்டுகிறோம்.
தீர்மானம் 3 - கூடங்குளம் அணுமின் நிலையம்:
தமிழகத்தில் கடும் மின்வெட்டு தொடரும் வேளையில், கூடங்குளத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அணுமின் நிலையத்தை திறக்க கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது தேவையற்றது. எனவே அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கி கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4 - அடையாள கடையடைப்பு:
காயல்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தினசாp இரவு - பகல் பாராமல் சுமார் 10 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதை மாற்றி, புதிய மின்வெட்டு முறை அறிவிப்பின் படி 4 மணி நேரம் மட்டும் அமுல்படுத்தக் கோரியும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க வலியுறுத்தியும் வருகிற 06-03-2012 செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள கடையடைப்பு நடத்துவது என காயல்பட்டினம் அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கம், மற்றும் பொது நல அமைப்புகள் கலந்துகொண்டுள்ள இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
திராவிட முன்னேற்றக் கழகம் - திமுக,
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் - தேமுதிக,
இந்திய தேசிய காங்கிரஸ்,
பாரதீய ஜனதா கட்சி,
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
மனிதநேய மக்கள் கட்சி - மமக,
எஸ்.டி.பி.ஐ.
ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு,
அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ததஜ,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் - தமுமுக,
காயல் நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை,
காயல்பட்டினம் கார், வேன் ஓட்டுநர் சங்கம்,
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் - சென்னை,
காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம்
ஆகிய பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
|