மதுரை விமான நிலையம் சர்வதேச விமானப் போக்குவரத்திற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தரமுயர்த்தப்பட்டது. எனினும், பல காலமாக சர்வதேச விமான சேவை துவக்கப்படாமலிருந்தது.
இந்நிலையில், இம்மாதம் 20ஆம் தேதி முதல், மதுரையிலிருந்து இலங்கை கொழும்பு நகருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சர்வதேச விமான போக்குவரத்து சேவையைத் துவக்கியது. வாரத்திற்கு மூன்று விமான சேவைகள் இந்நிறுவனத்தால் இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
இம்மாதம் 22ஆம் தேதியன்று மதுரை விமான நிலையத்திலிருந்து 78 பயணியருடன் கொழும்பு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட பயணக்குழுவினர் - காயலர்களிலேயே முதன்முறையாக இவ்விமானத்தில் கொழும்பு நகருக்கு பயணித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பயணக் குழுவினர் கருத்து தெரிவிக்கையில், கரடுமுரடான சாலை வழித்தடத்தில் - மாநிலம் கடந்து - தமிழ்மொழி பேசப்படாத திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று பயணம் மேற்கொள்வதை விட, தரமான நாற்கர சாலையில் பயணித்து - குறுகிய நேரத்தில் மதுரையை அடைந்து - அங்கிருந்து புறப்படுவது மிகுந்த மனதிருப்தியை அளிப்பதாகவும், இன்னும் பல நாடுகளுக்கும் மதுரை விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவை உயர்தரத்துடன் இயக்கப்படுவதை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
S.I.ஹைதர் அலீ (Hylee) மூலமாக,
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 16:44/28.09.2012] |